பதிவு செய்த நாள்
20
ஆக
2016
03:08
அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் போதித்த கீதோபதேசக் கருத்துகள் இங்கு இடம் பெற்றுள்ளன.
*உலகத்தில் தர்மத்தை நிலைநாட்டவும், நல்லவர்களைக் காக்கவும், தீயவர்களை அழிக்கவும் ஒவ்வொரு யுகத்திலும் நான் இந்த பூமியில் மனிதனாக அவதரிக்கிறேன். நீயும் தர்மத்தைக் காக்க துணிந்து நில்.
*எல்லா உயிர்களின் இதயத் தாமரையில் கிருஷ்ணனாகிய நானே வீற்றிருக்கிறேன். எனது சக்திக்கு கட்டுப்பட்டு உயிர்கள் அனைத்தும் பொம்மை போல ஆட்டுவிக்கப்படுகின்றன.
*பச்சிலை, மலர், தண்ணீர் எது வேண்டுமானாலும் அன்புடன் எனக்கு அளித்தால் போதும். அவர்களின் அன்பை ஏற்றுக் கொண்டு அருள்புரிய தயாராக இருக்கிறேன்.
*குரு என்னும் திறமையான மாலுமியும், தெய்வீக அருள் என்னும் காற்றும் சாதகமாக இருந்து விட்டால், பிறவிக்கடலை எளிதாக ஒருவனால் கடந்து விட முடியும்.
*மண்ணில் பிறந்த உயிர்கள் அனைத்தும், என்றாவது ஒருநாள் பிறப்பு, இறப்பு இரு நிலைகளையும் கடந்தே ஆக வேண்டும். இதுவே வாழ்வின் குறிக்கோள்.
*கிடைப்பதற்கு அரிய மனிதப்பிறவி மூலம் ஆன்மிக வாழ்வில் முன்னேற முயற்சிக்க வேண்டும். எல்லா உயிர்களுக்கும் உதவி செய்ய மனிதன் கடமைப்பட்டிருக்கிறான்.
*மனம் போல போக்கில் மனிதன் வாழ்வது கூடாது. புலன்களுக்கு அடிமைப்பட்டவன் தன் நிலையில் இருந்து தாழ்ந்து விடுகிறான். பகுத்தறிவால் நன்மை, தீமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
*ஆமை தன் உறுப்புகளை ஓட்டுக்குள் உள்ளிழுத்துக் கொள்வது போல, புலன்களை புத்தியால் அடக்க வல்லவன் ஞான நிலையை அடைய முடியும்.
*மனிதப்பிறவி மகத்தானது. அதனால் தேவர்களும் மண்ணில் பிறப்பெடுத்து அன்பு நெறியில் வாழ்ந்து உயர்ந்த ஞானம் அடைய விரும்புகின்றனர்.
*நேர்மை, பணிவு, பொறுமை, சேவை மனப்பான்மை, மனத்துõய்மை, தன்னடக்கம் ஆகிய நற்பண்புகள் அறிவுடையோரின் அடையாளங்களாகும்.
*தேனீக்கள் பல பூக்களில் இருந்து தேனைச் சேகரிப்பது போல மனிதன் பல வழிகளிலும் நற்பண்புகளைப் பெற முயற்சிக்க வேண்டும்.
*உணவு, உறக்கம், உழைப்பு அனைத்திலும் மிதமாக இருப்பவனே சிறந்த மனிதன். அடங்காத முரட்டுக் குதிரையான மனதை அடக்கும் வல்லமை அவனிடம் மட்டுமே இருக்கும்.
*வேலையின்றி கணப்பொழுதும் சும்மா இருக்க கூடாது. அவரவர் கடமையைச் சரிவர செய்ய வேண்டும். செயலற்று இருந்தால் உடலைப் பராமரிப்பது கூட சிரமமாகி விடும்.
*செய்யும் கடமையைக் கடவுளுக்கு அர்ப்பணித்து விட்டால், பலனைப் பற்றிய சிந்தனை உண்டாகாது. அப்போது தான் மனிதன் சுதந்திரமாக வாழ முடியும்.
*அளவான பேச்சும், உணவில் கட்டுப்பாடும் இருந்து விட்டால் மனிதன் தன்னை அறியும் அறிவைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வான்.
*நாடாளும் மன்னராக இருந்தாலும் பெரியவர்களைக் கண்டால் வணங்குவது அவசியம். மனப்பூர்வமாக பெரியவர்களுக்குச் சேவை செய்தால் அகந்தையை வெல்ல முடியும்.
*கொழுந்து விட்டு எரியும் தீ, கட்டைகளை எரித்து சாம்பலாக்குவது போல என்னிடம் முழுமையாகச் சரணடைந்தால் பாவம் அனைத்தும் முற்றிலும் அழிந்து போகும்.