வளமான வாழ்வு தரும் ஆவணி ஞாயிறு விரதம்..!
பதிவு செய்த நாள்
23
ஆக 2025 06:08
சூரியனின் அருளைப் பெற ஆவணி ஞாயிறு விரதம் சிறப்பானதாகும். இது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் வழிபாடு ஆகும். ஆவணி ஞாயிறு விரதம் இருந்து சூரியனை வணங்குபவர்களுக்கு வாழ்வில் மகிழ்ச்சி, வளமான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை. ஆவணி மாதத்தில் சூரியன் சிம்மவீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்மவீடு பலமான வீடு. நமக்கு ஆத்மபலத்தைத் தருபவர் சூரியனே. எனவே தான், ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாகச் சொல்வர். சஞ்சலமாக இருந்த அர்ஜுனனுக்கு, ஆத்மபலத்தை அளிக்க கீதையை உபதேசம் செய்ய கிருஷ்ணர் இம்மாதம் பிறந்தார். இதனால் தான் ஆவணிமாதத்தில் ‘ஞாயிற்றுக்கிழமை முக்கியத்துவம் பெற்றது. ‘ஞாயிறு என்றாலே ‘சூரியன். அது மட்டுமின்றி, ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு காலை 6-7 மணி வரை சூரிய ஹோரையே இருக்கும். ஆவணியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மிக அறிவைப் புகட்டினால், அவர்கள் அதில் சிறந்து விளங்குவர். சிலருக்கு இயற்கையாகவே ஆன்மிக அறிவு அமையும். தேகநலனுக்காக சூரியநமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷம். திருமணமாகாத பெண்கள் நல்ல மணமகன் வேண்டியும், திருமணமானவர்கள் சுமங்கலி பாக்கியும் வேண்டியும் நோற்பது ஆவணி ஞாயிறு விரதம்.இந்நாளில் நாகர் சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபட வேண்டும். புற்றுக்கு பால் ஊற்றலாம். அனந்தன், வாசுகி, குஷகாயன், அப்ஜன், மகரி அப்ஜன், கங்குபாலன், கார்கோடன், குளிஜன், பத்மன் என்னும் ஒன்பது நாகங்கள் தெய்வத்தன்மை மிகுந்தவை. இந்த நாகங்களின் பெயர்களைச் சொல்லி, நமது கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி இந்த நாளில் வேண்டிக்கொள்ளலாம். ஆண்கள் தங்களுக்கு வேலை கிடைப்பதில் தடை, எடுத்த செயல்கள் முடிவதில் உள்ள தடை நீங்க, இந்நாளில் விரதம் மேற்கொள்வர். பாம்புக்கிரகங்களான கேது, ராகுவின் அதிபதிகளான விநாயகர், துர்க்கையை மனதில் நினைத்து,செயல்பாடுகளில் உள்ள தடையை நீக்க பிரார்த்திக்க வேண்டும்.
|