மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகரில், 71 இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகள் வைக்க போலீஸ் அனுமதி வழங்கியுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம், ௫ம் தேதி நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேசனில் ஆலோசனை கூட்டம் நடந்தது. பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி., ரவிசங்கர் தலைமை வகித்தார். மேட்டுப்பாளையம் நகரில் விநாயகர் சிலைகள் வைக்கும் இடங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும். பவானி ஆற்றில் சிலைகள் கரைக்கும் இடத்தை சுத்தம் செய்து, போதிய மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என, இந்து முன்னணி சார்பில் கோரிக்கை விடுத்தனர். மேட்டுப்பாளையம் நகரில், 71 இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்ய வேண்டும். புதிய இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி இல்லை. அமைதியான முறையில் விநாயகர் ஊர்வலத்தை நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மாலை, 6:00 மணிக்குள் அனைத்து சிலைகளையும் கரைத்து முடிக்க வேண்டும் என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.