சிதம்பரம்:சிதம்பரத்தில் மூன்று நாட்கள் திருவாசக மாநாடு மற்றும் சிவ தீட்சை வழங்கும் விழா திருமுறை வீதியுலாவுடன் நேற்று துவங்கியது.அரனருள் சார்பில் மூன்றாம் ஆண்டு திருவாசக மாநாடு மற்றும் சிவ தீட்சை வழங்கும் விழா 24ம் தேதி முதல் 26 வரை மூன்று நாட்கள் கீழ வீதி ராசி திருமண மண்டபத்தில் நடக்கிறது. தருமபுர ஆதினம் சண்முக தேசிய பரமாச்சாரிய சாமிகள், திருப்பனந்தாள் காசி மட இணை அதிபர் சுந்தரமூர்த்தி தம்பிரான் சாமிகள், திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதினம் சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சாமிகள், சிதம்பரம் மவுன மடாலய மவுன சுந்தரமூர்த்தி சாமிகள் ஆகிய நான்கு மடாதிபதிகள் பங்கேற்கின்றனர். மாநாடு துவக்க நாளான நேற்று அதிகாலை சிவபூஜகர்கள் ஆன்மார்த்த பூஜை நடத்தினர். அதனைத் தொடர்ந்து மவுன சுந்தரமூர்த்திகள் தலைமையில் திருமுறை பாராயணம் பாடியபடி பன்னிரு திருமுறை வீதியுலா நடந்தது. தொடர்ந்து மாநாடு துவங்கியது. அரனருள் தலைவர் சண்முகசுந்தரம் வரவேற்றார். குப்புசாமி தீட்சிதர் முன்னிலை வகித்தார். மாநாட்டை துவக்கி வைத்து மவுன சுந்தரமூர்த்தி சாமிகள் ஆசி வழங்கினார். திருமுறையின் செத்திலாபத்து தலைப்பில் புலவர் கணபதியும், அடைக்கலப்பத்து தலைப்பில் சிவமாதவனும் சொற்பொழிவாற்றினர்.ஏற்பாடுகளை அரனருள் நிறுவனர் தண்டபாணி, தலைவர் சண்முகசுந்தரம், மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் சந்திர பாலசுப்ரமணியன் செய்து வருகின்றனர்.