பதிவு செய்த நாள்
23
ஆக
2016
12:08
திருவொற்றியூர: திருவொற்றியூர் காட்டு பொன்னியம்மன் நகர் ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் மஹா கும்பாபிஷேகம், நேற்று நடைபெற்றது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.திருவொற்றியூர் மேற்கு, காட்டு பொன்னியம்மன் நகரில், 5-0 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ லஷ்மி சமேத ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு 2002ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. அதன் பிறகு இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவு செய்யபட்டது. புனித நீர்ஊர் பொதுமக்களால் அளிக்கப்பட்ட நன்கொடையான, 20 லட்சம் ரூபாய் செலவில் கோவில் புதுப்பிக்கும் பணி முடிவுற்றது. கடந்த வெள்ளிக்கிழமை விஷ்வக்சேனர் பூஜை, கங்கை திரட்டல், சுதர்சன ஹோமத்துடன் விழா தொடங்கப்பட்டு, சனிக்கிழமை பிரபந்த பாராயணம், வேத பாராயணம், யாக சாலை கும்ப ப்ரேவசம் யாக வேள்வி ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமையும் யாகசாலை பூஜைகள் தொடர்ந்து நடைபெற்ற நிலையில் நேற்று காலை, தத்துவார்ச்சனை, சீர்வரிசை வருதல், மஹா பூர்ணாஹூதி நிறைவு பெற்று ஸ்ரீ நிவாச பெருமாள், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ கருடாழ்வார் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது.
கருடன் வட்டமிட்டதால்...கோபுர கலசம் மற்றும் கொடி மரத்திற்கு தீபாராதனை காண்பிக்கபட்டது. அப்போது வானத்தில் கருடன் கோவிலை சுற்றி வட்டமிட்டதால், பக்தி பரவசத்துடன் பக்தர்கள், கோவிந்தா... கோவிந்தா என விண்ணதிர முழங்கினர். அதை தொடர்ந்து, மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இந்த விழாவில், திருவொற்றியூர் மேற்கு மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, பல ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர். காட்டு பொன்னியம்மன் நகர் ஊர் நிர்வாகிகள், திருப்பதி திருமலை பாத யாத்திரை குழு, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் நகர் இளைஞர்கள், கும்பாபிஷேக ஏற்பாடுகளை விரிவாக செய்திருந்தனர்.
வீரபத்திர சுவாமி கோவிலில்...: மயிலாப்பூர், வீரபத்திர சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.மயிலாப்பூர், மாதவ பெருமாள் கோவில் தெருவில் அமைந்துள்ள அபயாம்பாள் உடனுறை வீரபத்திர சுவாமி கோவிலுக்கு, பல லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் சமீபத்தில் முடிந்தன. இதையடுத்து நேற்று, மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு, கடந்த, 18ம் தேதி, முதல் யாக சாலை வளர்த்து ஹோமங்கள் நடத்தப்பட்டன. கும்பாபிஷேக நாளான நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, நான்காம் கால யாக சாலை பூஜைகள், நாடி சந்தானம், தத்வார்ச்சனை, மகா பூர்ணா ஹுதி, தீபாராதனை நடந்தன. இதையடுத்து, கலசங்களுக்கு கும்ப நீர் சேர்க்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து, மாலை மகா அபிஷேகம், திருக்கல்யாணம், பஞ்சமூர்த்தி திருவீதி புறப்பாடு ஆகியவை நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று, மண்டலாபிஷேகம் துவங்குகிறது.