பதிவு செய்த நாள்
26
ஆக
2016
03:08
பெங்களூரு நகரில், மல்லேஸ்வரம் எனும் இடத்தில் அற்புதமாக அமைந்துள்ளது, கர்நாடக மாநிலத்தின் குருவாயூர் என்று போற்றப்படும் மல்லேஸ்வரம் வேணுகோபால ஸ்வாமி திருக்கோயில். ருக்மிணிதேவியுடன் ஸ்வாமி அருள் தரிசனம் காட்டும் இந்தத் தலத்தின் கிருஷ்ண புஷ்கரணி தீர்த்தமும் பாரிஜாத ஸ்தல விருட்சமும் ரொம்பவே விசேஷம். பிள்ளை பாக்கியம் இல்லையே என ஏங்கித் தவிக்கும் பெண்கள் இங்கு வந்து தொட்டில் கட்டிப் பிரார்த்தனை செய்து வழிபட்டால், விரைவில் சந்தான பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம்!
குஜராத் மாநிலம், போர்பந்தரில் குசேலருக்கு கோயில் அமைந்துள்ளது. இதை சுதாமா கோயில் என்கின்றனர். கோயில் சுவர்களில் கிருஷ்ண பகவானின் லீலைகள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இவற்றில், குசேலர் அன்புடன் தரும் அவலை கிருஷ்ணர் உண்ணும் காட்சியும் உள்ளது.
சென்னைக்கு அருகில் பொன்னேரியில் உள்ள கரிகிருஷ்ண பெருமாள் திருக்கோயிலில், விசேஷ கோலத்தில் அருள்கிறார் மூலவர். இடது கை இடுப்பில் தாங்கி நிற்க, வலது கையில் சாட்டையுடன், வலது காலை ஒரு மேட்டிலும், இடதுகாலை பள்ளத்திலுமாக வைத்தபடி, சிறிய பால்குடம் ஒன்றை சுமந்திருக்கும் சிரத்தை சற்றே வலப்புறமாகச் சாய்த்தபடி அழகு தரிசனம் தருகிறார் இந்த ஸ்வாமி.
கேரளாவில் திருச்சம்பரம் எனும் இடத்தில் கிருஷ்ணர் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இங்கே அதிகாலையில் கர்ப்பக்கிரக கதவுகள் திறந்ததும் நிர்மால்ய பூஜை, ஆராதனை என்ற விதிமுறைகள் ஏதுமின்றி, முதலில் சூடான பச்சரிசி சாதம் நைவேத்தியம் செய்யப்படுகிறது. அதன்பிறகே அன்றாட பூஜைக்கு உரிய பணிகளும், மற்ற வழிபாடுகளும் நடைபெறுகின்றன. வலக் கரத்தில் ஒரு சிறிய குச்சியும், இடது கரத்தில் சங்கையும் வைத்துக் கொண்டு, வெள்ளி அங்கியைப் போர்த்தியபடி அழகுக்கோலம் காட்டுகிறார் இங்கு அருளும் கிருஷ்ணபகவான்.
குருவாயூரில் திருப்புக்கா தரிசனம் என்பது இரவு நேர தரிசனமாகும். அப்போது, பகவானின் திவ்ய திருவுருவத்தின் முன்பு எட்டு வாசனைப் பொருட்களை தூபமாகப் பயன்படுத்துவார்கள்.
திருவள்ளூவர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை அருகில் உள்ள கிராமம் அரியதுறை. இங்கே மரகதவல்லி சமேதராக வரமூர்த்தீஸ்வரர் அருள்பாலிக்கும் கோயிலில், கிருஷ்ண பரமாத்மாவின் அம்சமாக வணங்கப்பட்டு வருகிறது ஓர் அரசமரம்!
மதுரை ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில், கூடலழகர் பெருமாள் கோயிலுக்கு வடக்குப் பகுதியில், மேலமாசி வீதியில் அமைந்துள்ளது ஸ்ரீமதனகோபால ஸ்வாமி திருக்கோயில். இந்த கோயிலை தென்னக பிருந்தாவனம் எனப் போற்றுகின்றனர் கிருஷ்ண பக்தர்கள். சௌராஷ்டிர இனத்தவரால் சீரமைக்கப் பட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகின்ற கோயில்களில் இதுவும் ஒன்று. சிவனாரின் கடும் தவத்தால் ஏற்பட்ட வெம்மையைப் போக்க இங்கே எழுந்தருளி, தனது வேணு கானத்தால் குளிர்ச்சியை தந்தாராம் இந்த மாதவன்! இந்தத் தலத்தின் மற்றுமொரு சிறப்பு... நின்ற கோலம், இருந்த கோலம் மற்றும் சயனக் கோலம் என மூன்று கோலங்களில் காட்சி தருகிறார் பெருமாள்.
தஞ்சாவூரில் உள்ள கரந்தை எனும் பகுதியில் கோயில் கொண்டிருக்கிறார், கிருஷ்ண ஸ்வாமி யாதவக் கண்ணன். இந்த கோயிலில் உள்ள தொட்டில் கிருஷ்ணனை, தம்பதிகள் மடியில் ஏந்தி, தாலாட்டி வழிபட விரைவில் வீட்டில் தொட்டில் சத்தம் கேட்பது உறுதி எனச் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.
பெண்களுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெறும் நாளில், கரந்தை யாதவக் கிருஷ்ணன் கோயிலுக்கு வந்து, வளைகாப்பு சீர் வரிசைப் பொருட்களை சந்நிதியில் வைத்துப் பிரார்த்தனை செய்துவிட்டு, வளைகாப்பு விழாவை சீரும் சிறப்புமாக நடத்துவது, தஞ்சாவூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்க்காரர்களின் வழக்கம். இதனால், ஒருகுறையுமின்றி சுகப்பிரசவம் நடைபெறுவதுடன், குழந்தையும் ஆரோக்கியமாகப் பிறக்கும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை.
திருநெல்வேலியிலிருந்து பத்தமடை வழியாக பாபநாசம் செல்லும் சாலையில், நெல்லையில் இருந்து சுமார் 27 கி.மீ. தூரத்தில், மேலச்செவல் எனும் அழகிய கிராமத்தில் அமைந்திருக்கிறது, நவநீத கிருஷ்ண பெருமாள் திருக்கோயில். குழந்தை வரம் வேண்டுவோர் தொடர்ந்து ஐந்து பவுர்ணமி தினங்களில், இந்தத் தலத்துக்கு வந்து விரதம் இருந்து வழிபட்டால், விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
கோயிலுக்கு வருவதற்கு வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் இந்தக் கோயில் அருள்புரியும் நவநீத கிருஷ்ணனை ரோஹிணி நட்சத்திரத்தன்று மானசீகமாக பிரார்த்தனை செய்துகொண்டு, வீட்டில் நவநீதகிருஷ்ணன் படத்தின் முன்பாக அமர்ந்து கிருஷ்ணாஷ்டக ஸ்லோகத்தைப் பாராயணம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.
திண்டுக்கல் -பழநி சாலையில் உள்ளது ரெட்டியார் சத்திரம். இங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது கோபிநாத மலை. குழலூதும் கண்ணன் இங்கே கோயில் கொண்டிருப்பதால், இறைவனின் பெயரே மலையின் பெயராகிவிட்டது.
பசுக்களுக்கு ஏதேனும் நோய் என்றால், கோபிநாத ஸ்வாமியை மனதார வேண்டிச் சென்றால் போதும்; பசுக்களின் நோயை விரட்டி, வாயில்லா ஜீவனைக் காத்தருள்வார், கோபிநாத ஸ்வாமி. அதேபோல், மாடுகள் சரிவர உண்ணவில்லை எனில், கோபிநாத ஸ்வாமியை வணங்கிவிட்டு, மலையில் உள்ள தீர்த்தம் அல்லது ஒரு பிடி புல்லை எடுத்துச் சென்று, பசுக்களுக்குத் தர... அதன்பின் தீவனத்தை வெளுத்து வாங்கும் மாடுகள். இவருக்குப் பால் மற்றும் தயிர் அபிஷேகம் செய்து வழிபட்டால், நினைத்த காரியம் யாவும் நடந்தேறும்; வீட்டில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது நம்பிக்கை!
தஞ்சாவூரில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ளது மன்னார்குடி. செண்பகாரண்ய க்ஷேத்திரம் என்றும், சர்வ தோஷ நிவர்த்தி தலம் என்றும் இந்தத் தலத்தைப் போற்றுகின்றனர் பக்தர்கள். ஸ்ரீரங்கத்துக்கு அடுத்து, 18 நாட்கள் பிரம்மோற்ஸவமும், 12 நாள் விடையாற்றியும் காணும் பெருமையும் இந்தத் தலத்துக்கு உண்டு.
கோப்பிரளயர், கோபிலர் எனும் முனிவர்களின் வேண்டுகோளின்படி, இன்றளவும் பக்தர்களைத் தாமே தேடிச் சென்று, அருள்பாலித்து வருகிறார் ராஜகோபால ஸ்வாமி என்பது ஐதீகம். இந்த கோயிலின் உற்ஸவர் ஸ்ரீவித்யா ராஜகோபால ஸ்வாமி, சேலையை வேஷ்டியாகவும், தலைக்கு முண்டாசாகவும் கட்டிக் கொண்டும், ஒரு காதில் குண்டலம், மறு காதில் தோடு, இடுப்பில் கச்சம், கையில் பொன்னாலான சாட்டை எனக் காட்சி தருகிறார். ரோகிணி நட்சத்திர நாளில், இத்தலத்துக்கு வந்து பிரார்த்திப்பது விசேஷம்.
மதுராவில் தேவகி - வசுதேவருக்கு 8-வது மகனாக கிருஷ்ணன் அவதரித்த இடம் சிறைச்சாலை. தற்போது அந்த இடத்துக்கு மேல் கத்ரகேஷப் தேவ் எனும் கிருஷ்ணர் கோயில் எழுப்பப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் - மதுரா மாவட்டத்தில் உள்ள பிருந்தாவனத்தில், கிருஷ்ண பக்தர்கள் தரிசிக்கவேண்டிய இடம் வம்சீவட். கண்ணன் தனது புல்லாங்குழல் இசையால் கோபியரைக் கவர்ந்த இடம் இது. வம்சீ என்றால் புல்லாங்குழல்; வட என்றால் ஆலமரம் என்று பொருள். இங்கு (பிருந்தாவனம்) அருள்பாலிக்கும் மூலவரின் திருநாமம் வம்சீவட விஹாரி. கண்ணன் பல வடிவங்கள் எடுத்து, கோபியர் ஒவ்வொருவருடனும் லீலை புரிவதைச் சித்திரிக்கும் ஓவியங்களையும் இந்தக் கோயிலில் தரிசிக்கலாம்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வேணுகோபாலன் கோயிலில் அருள்புரியும் கண்ணனின் விக்கிரகம், நேபாள நாட்டில் பாயும் கண்டகி நதியில் கிடைக்கும் சாளக்ராமக் கல்லினால் ஆனது.
கேரள மாநிலம் குருவாயூரில் எழுந்தருளியிருக்கும் உன்னிகிருஷ்ணன், பாதாள அஞ்சனம் மற்றும் மூலிகையினால் உருவானவர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள திருத்தலம் உடுப்பி. இங்கே அருள்பாலிக்கும் கிருஷ்ணர் விக்கிரகம், ருக்மிணியால் பூஜிக்கப்பட்ட சிறப்புபெற்றது. ஒருமுறை ருக்மிணிக்கு, கிருஷ்ணர் பாலகனாக இருந்தபோது எப்படி இருந்தார் என்பதைக் காணும் ஆவல் ஏற்பட்டது. தனது ஆசையை தேவசிற்பியான விஸ்வகர்மாவிடம் கூறினாள். விஸ்வகர்மாவும் சாளக்ராம கல்லில், வலது கையில் தயிர் மத்தும், இடது கையில் வெண்ணெயும் வைத்த நிலையில் பாலகிருஷ்ணன் விக்கிரகத்தை உருவாக்கினார். அதை ஆசையோடு வாங்கிய ருக்மிணி, அதன் அழகில் மெய்ம்மறந்து போனாள். அந்த விக்கிரகத்தை தன்னுடனேயே வைத்திருந்து பூஜித்து வந்தாள். ருக்மிணிக்கு பின் அர்ஜுனன் பூஜித்தான் என்பது ஐதீகம்.
உடுப்பி கிருஷ்ணர் கோயிலில் உள்ள மத்வ புஷ்கரணியில், ஆண்டுக்கு ஒருமுறை கங்கை தீர்த்தம் கலப்பதாக ஐதீகம். இந்த புஷ்கரணியில் இருந்து தீர்த்தம் எடுத்துதான் கிருஷ்ணர் விக்கிரகத்துக்கு தினமும் அபிஷேகம் செய்கிறார்கள். இந்த தீர்த்தத்தின் இன்னொரு சிறப்பு - மத்வ தீர்த்தத்தின் பெயரைச் சொன்னாலே பெரும் புண்ணியம்!
துவாரகையில் கோயில் கொண்டிருக்கும் கண்ணனுக்கு துவாரகாதீசன் என்று திருப்பெயர். ஜகத் மந்திர் என அழைக்கப்படும் இந்த கோயிலின் பிரதான வாசலுக்கு, சுவர்க்க துவாரம் என்று பெயர்.
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள நாத்வாரா எனும் திருத்தலத்தில் அருள்புரியும் கிருஷ்ணரை ஸ்ரீநாத்ஜீ என்று அழைப்பர். இவருக்கு என்னென்ன நைவேத்தியம் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்துள்ளனர். பாதாம்பருப்பு, பிஸ்தா பருப்பு, குங்கமப்பூ கலந்த கோதுமைப் பொங்கல். மேலும் லட்டு, இனிப்புப் பூரிகளுடன் மோர்க்குழம்பு ஆகியவை இவருக்கு மிகவும் பிடித்தது. எனவே, இங்கே இவற்றை நைவேத்தியம் செய்து கிருஷ்ணரை வழிபடுவது விசேஷம்.