பெரம்பலூர் மாவட்டம், செட்டிக் குளத்தில் குன்றின் மேல் அமைந்துள்ளது அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில். இக்கோயில் கருவறையில் வீற்றிருக்கும் முருகப்பெருமான் கையில் வேலுக்குப் பதில் கரும்பை ஏந்திக் காட்சி தருகிறார். இப்பகுதி மக்கள் விவசாயப் பணிகளைத் தொடங்கும் முன்பு இந்த முருகப்பெருமானை வழிபட்ட பின்பே தொடங்குவர். விவசாய மகசூல் நல்ல நிலையில் கிடைக்கும் பட்சத்தில், வயலில் விளைந்த தானியங்கள் மற்றும் ஆடு, மாடு, கோழி போன்றவற்றை நேர்த்திக்கடனாகச் செலுத்துகின்றனர். தவிர, திருமணம், குழந்தை பாக்கியம் வேண்டியும் பக்தர்கள் வேண்டிக் கொள்கிறார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெற்றவர்கள் கரும்புத் தொட்டில் நேர்த்திக்கடன் செய்வது இங்கு விசேஷம்.