பதிவு செய்த நாள்
03
செப்
2016
05:09
சதுர்த்தியன்று விநாயகருக்கு மோதகமும் கொழுட்டையும் படைத்தும் வழிபடுகிறார்கள். இரண்டின் செய்முறையையும் பார்ப்போமே!
மோதகம்!
தேவையானவை:
அரிசி மாவு: – 4 கப்
கடலைப் பருப்பு – 2 1/2கப்
வெல்லம் – 1/2 கிலோ
தேங்காய்த்துருவல் – 2 1/2 கப்
உப்பு – ஒரு டீஸ்பூன்
ஏலக்காய், முந்திரி, கிஸ்மிஸ் – சிறிதளவு
பூரணம் செய்முறை: கடலைப் பருப்பை ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள். அதை வேக வைத்து நீரை வடிகட்டுங்கள். பருப்பு குழைவாக இருக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் போட்டு பிசையுங்கள். பருப்பு ஒன்றிரண்டாக நசுங்கியது போல் இருக்க வேண்டும். வெல்லத்தைப் பொடியாக்கி அதனுடன் சேர்த்து பிசையுங்கள். பிறகு துருவிய தேங்காயை வெறும் வாணலியில் போட்டு லேசாக சிவக்க வதக்கி எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள். ஏலக்காயை பவுடராக்கிக் கொள்ளுங்கள். முந்திரி மற்றும் கிஸ்மிஸை நெய்யில் ஓரளவு சிவக்க வறுத்து எடுங்கள். இதை பூரணத்தோடு சேர்த்து பிசையுங்கள். இப்போது பூரணம் தயாராக இருக்கிறது.
கொழுக்கட்டை செய்முறை: அரிசி மாவை சலித்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் மூன்று கப் தண்ணீர் எடுத்து, அதில் உப்பு போட்டு வேக வையுங்கள். மற்றொரு வாயகன்ற பாத்திரத்தில் அரிசி மாவைப் போட்டு, அதில் இரண்டு கப் வெந்நீரை சிறிது சிறிதாக ஊற்றி, கரண்டியின் பின்புறத்தைக் கொண்டு அழுத்திக் கிளறுங்கள் பிறகு மீதமிருக்கும் தண்ணீரையும் அளவாக ஊற்றி, கைகளால் பிசைந்து, மாவு மிருதுவாக இருக்குமாறு செய்யுங்கள். அதை உள்ளங் கையில் வைத்து சற்று தட்டையாக தட்டிக் கொள்ளவும். பிறகு கைகளால் அழுத்தி கிண்ணம் போல் செய்யுங்கள். அதனுள் சிறிது பூரணத்தை வைத்து ஓரங்களை, விரும்பிய வடிவில் அழகாக ஒரே அளவாக மூடுங்கள். அவற்றை இட்லி தட்டில் அடுக்கி வேகவிடுங்கள். 15 நிமிடம் கழித்து வெந்து விட்டதா என சோதித்து விட்டு எடுத்து விடலாம். இப்போது விநாயகருக்கு மோதகம் தயார்.
காரக் கொழுக்கட்டை!
தேவையானது:
பச்சரிசி மாவு – 1 டம்ளர்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் துருவல் – 1/4 மூடி
காயம் பவுடர் – சிறிதளவு
எண்ணெய் – 1 டீ ஸ்பூன்
கடுகு – 1 டீ ஸ்பூன்
கடலைப்பருப்பு – 1 டீ ஸ்பூன்
வெள்ளை உளுத்தம்பருப்பு –
1 டீ ஸ்பூன்
மிளகாய் வத்தல் – 1
பச்சை மிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிதளவு
பாசிப்பருப்பு – ஒரு கைப்பிடி
செய்முறை: அரிசி மாவைச் சிவக்க வறுக்கவும். வெந்நீரை அதில் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு தேங்காய் துருவல், உப்பு, காயப்பவுடர் சேர்த்து பிசையவும். கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வத்தல், நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பாசிப்பருப்பு ஆகியவற்றை வாணலியில் இட்டு, எண்ணெய் ஊற்றி தாளிக்கவும், இந்த தாளிசத்தை மாவில் ஊற்றி கிளறவும். இந்த மாவை உருண்டையாகவோ, கையால் அழுத்தியோ பிடித்து இட்லித்தட்டில் வைத்து வேக விடவும். தேவைப்பட்டால் தக்காளி சட்னி, சாம்பார், மிளகாய்ப்பொடியில் தொட்டு சாப்பிடலாம்.