பழம்பெருமை வாய்ந்தது திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில். அங்கே திருமஞ்சன வீதியில் அமைந்துள்ள பெருநாட்டுப் பிள்ளையார் கோயிலும் புராதனமானதே. திருவாரூர் கமலாலயத் தீர்த்தக் குளத்தின் கரையில் திருமஞ்சனவீதியும், காரைக்காட்டுத் தெருவும் சந்திக்கும் நாற்சந்தியில் கோயில் கொண்டு அருள்புரிகிறார் பெருநாட்டுப் பிள்ளையார். சாலைமட்டத்திற்கு சற்று தாழ்வாகவே இந்தக் கோயில் அமைந்திருந்ததால் இவரை பாதாள விநாயகர், மூலாதாரப் பிள்ளையார் என்றும் அழைத்து வழிபட்டிருக்கிறார்கள். இங்கு வசித்தவர்கள் இப்பகுதியை பெருநாடாக மதித்ததால் அங்கிருந்த பிள்ளையாருக்கு பெருநாட்டுப்பிள்ளையார் என்ற பெயர் தோன்றியதாக ஒரு கூற்று உண்டு. தொழில், அபிவிருத்தி, குழந்தை பாக்கியம், கல்வி வளர்ச்சி, திருமணம் என்று பக்தர்கள் வைக்கும் சகல வேண்டுதல்களையும் பெருநாட்டுப் பிள்ளையார் நிறைவேற்றித்தருகிறார் என்று இப்பகுதி பக்தர்கள் கூறுகின்றனர். சங்கடஹர சதுர்த்தி, சுக்ல சதுர்த்தி, மார்கழி மாத திருப்பள்ளியெழுச்சி அபிஷேகம், தமிழ்ப்புத்தாண்டு, ஆங்கிலப் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி போன்ற முக்கிய நாட்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.