பதிவு செய்த நாள்
28
செப்
2011
12:09
ஸ்ரீ வில்லிப்புத்தூரில் வசித்த சுப்பிரமணியம் மீனாட்சி தம்பதியர் சிவனருளால் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தனர். ஞானசம்பந்தன் என பெயர் சூட்டினர். குழந்தை பெரியவன் ஆனவுடன் மீனாட்சி சொக்கநாதரை தரிசிக்க மதுரைக்கு சென்றனர். ஞானசம்பந்தன் சொக்கநாதரை தரிசித்தான். தரிசனம் முடிந்து ஊர் திரும்பும்போது, பெற்றோரிடம், தான் சில காலம் கோயிலில் இருந்து விட்டு ஊருக்கு திரும்புவதாக கூறிவிட்டான். பெற்றோரும் அவனது எண்ணப்படியே விட்டுச்சென்றனர். பின்னர் அவன், மீனாட்சி சொக்கரை தம் பெற்றோராகவே பாவித்து வந்தான். ஒருசமயம், அவன் தனியே லிங்கபூஜை செய்ய விரும்பி, தனக்கு லிங்கம் வேண்டுமென சிவனிடம் வேண்டினான். அன்றிரவில் சிவன் அவனது கனவில் தோன்றி, பொற்றாமரைக் குளத்தின் ஓரிடத்தில் லிங்கம் கிடைக்கும். அதனை நீ பூஜித்து மகிழ்வாயாக! என்றார். மறுநாள் காலையில் பொற்றாமரைக் குளத்திற்கு விரைந்தான் சம்பந்தன். குளத்தில் நீராடிவிட்டு சிவன் கூறிய இடத்தில் பார்த்தான். ஒரு ஸ்படிக லிங்கம் அவனுக்கு கிடைத்தது. மகிழ்ச்சியடைந்த சம்பந்தன் மனதில் ஒரு குழப்பமும் உண்டானது. சிவலிங்க பூஜை செய்ய வேண்டுமானால், ஒரு குருவிடம் முறையாக தீட்சை பெற வேண்டுமே! நாம் யாரிடம் தீட்சை பெறுவது? என யோசித்தான். அன்றிரவிலும் சிவன் அவனது கனவில் தோன்றி, திருவாரூரில் வசிக்கும் ஞானப்பிரகாசரை குருவாக ஏற்றுக்கொள்ளும்படி கூறினார். அதன்படி திருவாரூர் சென்ற சம்பந்தன், ஞானப்பிரகாசரிடம் சீடராக சேர்ந்தான். அவர் சம்பந்தனுக்கு பல உபதேசங்கள் செய்தார்.
ஞானப்பிரகாசர் தினமும் காலையில் கோயிலுக்கு சென்று அர்த்தஜாம பூஜை முடியும்வரையில் இருந்துவிட்டு, அதன்பின்பு வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தார். சம்பந்தரும் தினமும் அவருடன் கோயிலுக்கு சென்று வந்தான்.ஒருநாள் இருவரும் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பினர். அவர்களுக்கு வழிகாட்ட, தீப்பந்தம் கொண்டு வரும் பணியாளன் வெளியில் சென்று விட்டான். எனவே, சம்பந்தனே கையில் தீப்பந்தம் ஏந்திக் கொண்டு வந்தான். ஞானப்பிரகாசர் இதனை கவனிக்கவில்லை. இருவரும் ஆஸ்ரமத்தை அடைந்த போது ஞானப்பிரகாசர், நில்! என்று மட்டும் சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டார். சம்பந்தனும் கையில் தீப்பந்தத்துடன் வெளியிலேயே நின்று விட்டான். சிறிது நேரத்தில் மழை பிடித்தது. இரவு முழுவதும் ஒரே மழை. ஆனாலும், சம்பந்தன் அவ்விடத்தை விட்டு அசையக்கூட இல்லை. அவன் வைத்திருந்த தீப்பந்தமும் அணையவில்லை. முன்பைவிட அதிக பிரகாசமுடையதாகவே எரிந்து கொண்டிருந்தது. மறுநாள் விடிந்தும் விட்டது. ஞானப்பிரகாசரின் மனைவி வாசல் தெளிக்க வெளியில் வந்தார். மழையில் நனைந்து, கையில் தீப்பந்தத்துடன் சம்பந்தன் நின்றிருந்ததைக் கண்டு திகைத்தார். தன் கணவரிடம் சென்று விபரத்தை கூறினார். வெளியில் வந்த ஞானப்பிரகாசர் தன் சீடன் இறையருள் பெற்றவன் என்பதை உறுதி செய்து கொண்டான். அவனிடம், ஞானசம்பந்தா! இன்று முதல் நீ குருவாக இருந்து மற்றவர்களுக்கு நல்உபதேசம் செய்வாய்! என்று வாழ்த்தி அனுப்பினார். ஞானசம்பந்தரும் மக்களிடம் சிவநெறியின் போதனைகளை உபதேசித்து வந்தார். மக்கள் அவரை குருஞானசம்பந்தர் என்று அழைத்தனர். தர்மபுரத்தில் சிவமடம் அமைத்து தொண்டாற்றிய அவர், அங்கேயே இறைவனடி சேந்தார். பிற்காலத்தில் அவரது சீடர்கள், அவர் பூஜித்த லிங்கத்தை அவ்விடத்திலேயே வைத்து கோயில் எழுப்பினர்.