பதிவு செய்த நாள்
28
செப்
2011
12:09
சூர்தாசர் கவியரசர் என்று புகழப்பெற்றவர். பிறவியிலேயே பார்வையற்ற இந்த அருட்கவி அருளிய கவிதைகள் ஏராளம். எல்லாம் கருத்தாழம் மிக்கவை. அர்த்தம் பொதிந்தவை. அவைகளின் பெருமைகளையும், உயர்வையும் கருதி அவற்றிற்கு சூரஸாகரம் என்று பெயரிட்டுள்ளனர். துளசிதாசர், கேசவராயர் போன்ற மகான்களின் கவிதைகளுக்கு ஈடாக இவரது கவிதைகளும் சிறப்பாக கருதப்படுகிறது.
இவர் முற்பிறவியில் கண்ணனுடைய அன்பிற்கு உகந்த அக்ரூரராக இருந்தவர். துவாரகையில் கண்ணனுடன் வசித்துவந்தார். ஒரு சமயம் இவர் கண்ணனின் அந்தப்புரத்திற்கு சென்றபோது சத்தியபாமா மிகவும் துக்கத்துடன், தன்னைக் கண்ணன் மிகவும் அலட்சியப்படுத்துவதாக குறைசொன்னாள். இன்னும் ஒரு நாழிகை பொழுதிற்குள் தன்னை அவர் தேடி வராவிட்டால் உயிர் துறக்கப்போவதாக புலம்பினாள். சத்தியபாமா சொன்னதை செய்பவள் என்பதை ஏற்கனவே அறிந்திருந்த அக்ரூரர், ஒரு நாழிகைக்குள் கண்ணனை தேடி கண்டுபிடித்துவர புறப்பட்டார். ஆனால் கண்ணனை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே தானே கண்ணனைப்போல் வேடமிட்டு சத்தியபாமாவின் முன் தோன்றி அவளை சமாதானம் செய்தார். பிறகு கண்ணனை தேடிபிடித்துவிட்டார். அவரிடம் தான் செய்த தந்திரத்தை கூறினார். கண்ணனுக்கு கோபம் வந்துவிட்டது.
நீ பூலோகத்தில் பார்வையற்றவனாக பிறப்பாய் என்று சபித்துவிட்டார். சத்தியபாமாவை அழைத்து, நீ செய்த தவறுக்காக ஒரு அரசனின் பணிப்பெண்ணாக பிறப்பாய், என சாபமிட்டார். இருவரும் தங்கள் தவறை உணர்ந்து வருந்தி கண்ணனிடம் மன்னிப்பு கேட்டனர். கண்ணன் அவர்கள் மீது இரக்கம் கொண்டு, நான் கொடுத்த சாபத்தை திரும்பப் பெற முடியாது. இருப்பினும் உங்களை பூலோகத்தில் வந்து தடுத்தாட்கொள்வேன், என்று அருளினார். கண்ணனின் சாபப்படி சூரதாசர் மதுரா நகரில் பிறந்தார். தன் அகக்கண்களினால் இறைவனைக் கண்டு அவனது திருவிளையாடல்களையெல்லாம் கவிதையாக்கி, தனது இனிய குரலால் மக்கள் நெஞ்சில் பதியும்படி பாடிவந்தார். முற்பிறவியில் இவர் சிறந்த பக்திமானாக இருந்ததால் நல்ல சங்கீத ஞானத்துடன் பாடிய சுவை கொட்டும் கீதங்களை மக்கள் அமுதமாக மதித்தனர். இவர் பாடும்போதெல்லாம் கண்ணனே நேரில் வந்து கேட்டு இன்புறுவது வழக்கமாயிற்று. அவ்வூர் அரசனுக்கு சங்கீதத்தில் அபரிமிதமான ஆவல் இருந்தது. பல வித்வான்களை அழைத்து பாடச்சொல்லி அவர்களை கவுரவித்து வந்தான். சூரதாசரின் திறமையைக் கேள்விப்பட்ட அரசன் தனது அரசவைக்கு அவரை சகல மரியாதைகளுடன் அழைத்துவரச் சொல்லி பாட வேண்டினான். சூர்தாசர் பாடத் தொடங்கியவுடன் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. வீணையுடன் கலைவாணியும், ஜால்ராவுடன் விநாயகரும் வந்து அமர, தேவகன்னிகைகள் நாட்டியமாடினர். மனமோகன வேணுகோபாலன் சங்கு, சக்ர பீதாம்பரதாரியாய் அங்கு வந்து அமர்ந்து சூரதாசரின் பாட்டைக் கேட்டு மகிழ்ந்தார். காணக்கிடைக்காத அந்தக் காட்சியை அனைவரும் கண்டு மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சி முடிந்ததும் கண்ணனும், இதர தெய்வங்களும் அப்படியே மறைந்துவிட்டனர். அரசனின் வேண்டுகோளுக்கிணங்க சூரதாசர் அரண்மனையிலேயே தங்கி, மக்களுக்கு பக்தியை இசை மூலம் போதிக்கலானார். அந்தப்புரத்தில் உள்ள அரசிகள் அரசவையில் தோன்றிய அற்புத காட்சி பற்றி கேள்விப்பட்டு தாங்களும் அதைப்பார்த்து இன்புற வேண்டுமென அரசனை வற்புறுத்தினார்கள். அரசனும் சூரதாசரை அந்தப்புரத்திற்கு வரவழைத்து பாடும்படி கேட்டுக்கொண்டான். அந்தப்புர சபா மண்டபத்தில் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தக்காலத்தில் அரசனின் அந்தப்புர பெண்கள் கோஷா முறையில் முகத்தை மறைத்து ஆடை அணிந்துகொள்வார்கள். பிற ஆண்களின் முன்னால் உட்கார மாட்டார்கள். பிற ஆண்கள் அந்தப்புர பெண்களை பார்ப்பதை தவிர்ப்பதற்காகவே இந்த முறை கையாளப்பட்டது. கச்சேரிக்கு அரசனைத்தவிர யாரும் அழைக்கப்படவில்லை. சூரதாசருக்கோ கண் தெரியாது. எனவே அவரால் அந்தப்புர பெண்களை பார்க்க முடியாது என்பதால் எல்லா பெண்களும் முகத்தை மறைக்காமல் சாதாரணமாக மண்டபத்தில் வந்து அமர்ந்தனர்.
நிகழ்ச்சி துவங்கியது. சூர்தாசர் பாட ஆரம்பித்ததும் அனைவரும் இசை இன்பத்தில் மெய்மறந்து முகத்தில் புன்னகை மலர அதிலேயே மூழ்கிவிட்டனர். சூர்தாசர் கல்லும் கனிந்து கனியாகும் வண்ணம் பாடிக்கொண்டிருந்தார். அந்தக்கூட்டத்தில் சாபம் பெற்ற கண்ணனின் மனைவி சத்தியபாமாவும் பணிப்பெண்ணாக அமர்ந்து இசையை கேட்டு ரசித்துக்கொண்டிருந்தாள். இறைவன் தன் மாயையினால் சூர்தாசருக்கு கண்ணொளி கிடைக்கும்படி செய்து சத்தியபாமாவை அடையாளம் தெரியும்படி செய்தார். உடனே சூர்தாசர், அம்மா தாயே! சத்தியபாமா தேவியே! நீங்கள் எப்படி இங்கு வந்தீர்கள்? என்று கேட்டு பாட்டை பாதியிலேயே நிறுத்தினார். இதைக்கேட்ட அரசனும், அந்தப்புர பெண்களும் திடுக்கிட்டனர். பிறவியிலேயே பார்வையற்ற இவருக்கு எப்படி கண்ணொளி வந்தது? பணிப்பெண்ணை எப்படி அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது என்றெல்லாம் வியந்தனர். வணங்குதற்குரிய கண்ணனின் மனைவியான சத்தியபாமாவை இதுவரை பணிப்பெண்ணாக குற்றேவல் புரியும்படி செய்துவிட்டோமே என மன்னனும் அந்தப்புர பெண்களும் வருந்தி, தங்களை மன்னிக்கும்படி வேண்டினர். அனைவரது வேண்டுகோளுக்கும் இணங்கி, ஸ்ரீமந் நாராயணன் கருட வாகனத்தில் அங்கே தோன்றி அனைவருக்கும் காட்சி தந்தார். சூர்தாசருக்கும் நிரந்தரமாக கண்ணொளி தந்து தன் அருளாசியை வழங்கினார். சத்தியபாமாவுடன் மறைந்தார். அதன்பிறகு சூரதாசர் பல பாடல்களை இயற்றி தன் சீடர்களுக்கெல்லாம் கற்பித்தார். அவரது கவிதைத் தொகுப்பாகிய சூரசாகரத்தின் மூலம் பக்தர்களை இறைவனின் திருவடி நிழலுக்கு ஆட்படுத்தி, பள்ளிகொண்ட பெருமாளின் அருளுக்கு பாத்திரமாகும்படி செய்தார்.
சூர்தாசரும் - துளசி தாசரும்: ஒரு நாள் அவர் வீட்டின் திண்ணையில் அமர்ந்து இருந்தபோது , தெரு வீதியில் கிருஷ்ண பஜனை பாடிக்கொண்டு சென்றனர் சிலர் அவர்கள் பாடிய பாடல்களை கேட்டு பரவசமடைந்த சூர் தாசர் , அதில் ஒருவரை அழைத்து அய்யா நீங்கள் இப்பொழுது பாடிய பாடல்கள் யாரை பற்றியது மிகவும் நன்றாக இருக்கிறதே என்று கேட்டார் அதற்க்கு அவர் அய்யா இந்த பாடல்கள் கண்ணனை போற்றி பாடும் பாடல்கள் அவனது திருநாமம் சொல்லும் பாடல்கள் என்றார் ,உடனே சூர்தாசர் நீங்கள் போற்றி பாடிய கண்ணன் எப்படி இருப்பார் என்று கேட்டார். அதற்க்கு அவர் அய்யா ,,கண்ணன் சிறு குழந்தை கருநீல நிறம் உடையவன் அவன் புன்னகை முகத்தை பார்த்தால் பரவசம் அடையும் நம் மனது அவன் வசம் போய்விடும் கையில் புல்லாங்குழல் வைத்து இசையால் இந்த உலகத்தை இயங்க செய்பவன் என்று கண்ணனை வர்ணித்து விட்டு அவர் கிளம்பி விட்டார். இதை கேட்ட சூர்தாசர் கண்ணனை தன மனக்கண்ணில் பார்க்கலானார் அப்படியே கண்ணனை தன மனதில் நினைத்து பாடினார்
பின் தன வீட்டை விட்டு சென்று ஒரு ஆற்றங்கரையில் மரத்தின் அடியில் அமர்ந்து தினமும் கண்ணனின் வடிவத்தை எண்ணி பல பாடல்கள் பாடலானார். இவரது பாடல்களை கேட்க கூட்டம் கூடியது தினம் அவர் பாடல்களை கேட்கும் மக்கள் கூட்டம் அவர் பசியாற ஏதாவது உணவு பொருள் கொண்டு வந்து கொடுப்பர். அதை அன்போடு ஏற்று கொண்டு சூர்தாசர் கண்ணனின் கீர்த்தனைகளை பாடி வந்தார். இப்படி இருக்க ஒரு நாள் துளசி தாசர் என்னும் ராம பக்தர் அங்கே விஜயம் செய்தார் இவர் வடபுலத்தில் கம்பரை போல் ராமாயணம் வடித்தவர் அதுவே துளசி ராமாயணம் என்று போற்ற பட்டது,, சூர் தாசர் இருக்கும் இடத்திற்கு வந்த துளசிதாசர் அவரது கீர்த்தனைகளை கேட்டு தன்னையே மறந்தார். பின் சூர்தாசர் பாடி முடிக்கும் வரை அமைதி காத்த துளசிதாசர் பின் சூர்தாசரை அழைத்து ஆற தழுவி இனி நாம் நண்பர்களா இருந்து இருவரும் ஒன்றாக சேர்ந்து கண்ணனின் கீர்த்தனைகளை பாடுவோம் என்றார் பணிவன்புடன். இதை சூர்தாசரும் ஏற்று கொண்டு துளசிதாசருடன் அவரது இல்லம் சென்றார். அன்றிலிருந்து தினமும் கண்ணன் கோயிலுக்கு சென்று அவனது கீர்த்தனைகளை பாடி வந்தனர் இருவரும் இப்படி இருக்க ஒருநாள் இருவரும் கண்ணன் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்கள் எதிரில் ஊர் மக்கள் சில பேர் தலை தெறிக்க ஓடி வந்து கொண்டிருந்தனர்.அதில் ஒருவரை தடுத்து நிறுத்திய துளசிதாசர், அய்யா ஏன் இந்த பதட்ட ஓட்டம் ஏதும் ஆபத்தா என்று கேட்டார், ஓடி வந்தவர் ஆம் அய்யா ,,எதிரே ஒரு மதம் பிடித்த யானை ஒன்று எல்லோரையும் துரத்தி வருகிறது. அதன் பிடியில் அகப்பட்டால் மிதித்தே கொன்று விடும் அதான் எல்லோரும் ஓடுகிறோம் நீங்களும் தகுந்த பாதுகாப்பான இடத்துக்கு செல்லுங்கள் என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டார் அவர் அப்போது சூர்தாசர் துளசிதாசரை பார்த்து அன்பரே யானை எப்படி இருக்கும் அதற்கு மதம் என்கிறாரே இவர் அப்படி என்றால் என்ன என்று கேட்டார்.
துளசிதாசர் -சூர்தாசரே யானை என்பது மிக பெரிய மிருகம் அதற்க்கு கோபம் என்கிற மதம் பிடித்துவிட்டால் பார்க்கும் யாவையும் மிதித்து அழித்தே விடும் அதான் எல்லோரும் பயந்து ஓடுகிறார்கள் நீர் ஒன்றும் கவலை படாதீர் நம்முள் கண்ணன் இருக்கும்போது நமக்கு என்ன கவலை என்று கூறி கண்ணனை நினைத்து தியானித்து நின்றார் துளசிதாசர். மதம் கொண்ட யானை அவர் அருகே வந்து நின்றது தியானத்தில் இருந்த துளசி தாசரை பார்த்தது பின் அப்படியே பணிந்து வணங்கி அவரை ஆசிர்வதித்து விட்டு வந்த வழியே சாந்தமாக சென்றது. இதை வியப்புடன் பார்த்த மக்கள் துளசிதாசரை வணங்கி நின்றனர் , சற்று நேரத்தில் துளசிதாசர் தியானம் கலைந்து கண் திறந்து பார்த்தார். மக்கள் எல்லோரும் அவரை வணங்கி நடந்ததை கூறினார் ; அதை கேட்ட துளசிதாசர் எல்லாம் கண்ணன் செயல் அவனை வணங்குங்கள் என்று கூறிவிட்டு சூர்தாசரை தேடினார்.சூர்தாசர் ஒரு கடையின் மறைவில் இரண்டு கைகளையும் தன் நெஞ்சில் வைத்து நடுக்கத்துடன் நிற்பதை பார்த்தார் துளசிதாசர் ,,இப்பொழுது துளசி தாசருக்கு ஒரு சந்தேகம் வந்தது. நம்மை போலவே சூர்தாசரும் ஒரு கிருஷ்ண பக்தர்தானே பின் ஏன் யானையை நினைத்து அவர் பயப்படவேண்டும் என்று நினைத்து சூர்தாசரை அழைத்து வந்து தன் சந்தேகத்தை கேட்டறிந்தார்.
சூர்தாசர் என்ன சொன்னார் தெரியுமா? துளசிதாசரே நீர் மிக பெரிய கிருஷ்ண பக்தர்தான் நான் ஒப்பு கொள்கிறேன் உன் மனதில் இருக்கும் கண்ணனோ இளமை தேகம் பொருந்தியவன் அதனால் நீர் தியானத்தில் இருந்த போது வந்த யானையை கண்ணன் விரட்டி விடுவான்; ஆனால் கண்ணில்லாத குருடனான எனக்கு என் மனக்கண்ணில் உள்ள கண்ணனோ சிறு குழந்தை வடிவானவன் இதுவரை அவனது சிரித்த முகத்தை வைத்தே பல பாடல்கள் பாடியுள்ளேன்,, ஆனால் யானை மிக பெரிய மிருகம் என்று நீர் சொன்னதால் என் மனதில் உள்ள கண்ணன் சிறு குழந்தையானவன் யானையை பார்த்து பயந்து அழுதுவிட்டால் பின் நான் எப்படி கண்ணனை சமாதானம் செய்வது இதுவரை அவன் சிரித்த முகத்தை நினைத்தே பல பாடல்கள் பாடிய எனக்கு அவன் அழுத முகத்தை கண்டால் என்னால் தாள முடியாது. அதனால்தான் என் இரு கைகளையும் என் நெஞ்சில் வைத்து யானையை அவன் பார்ப்பதை மறைத்து கொண்டேன் ஏதும் தவறு இருந்தால் மன்னியுங்கள் என்று பணிந்து நின்றார். இதை கேட்டதும் துளசிதாசர் கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது. சூர்தாசரே உமது நட்பு கிடைத்தது நான் எத்தனையோ பிறவியில் செய்த புண்ணியத்தின் பயனால் கிடைத்திருக்க வேண்டும் மறுபிறப்பு என்று ஒன்று இருந்தாலும் நீரே எமது நண்பராக வரவேண்டும் என்று அவரை ஆற தழுவி கோயிலுக்கு அழைத்து சென்றார்.