கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில், நடைபெற்ற வள்ளி – முருகன் திருக்கல்யாண மகோற்சவத்தில், திருமண வரம் வேண்டி ஏராளமான ஆண்கள், பெண்கள் திரண்டு வந்து வழிபட்டனர்.
சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், சென்னையில் உள்ள அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழுவினர் சார்பில் , வள்ளி – முருகன் திருக்கல்யாண மகோற்சவம் செப் 4ம் தேதி நடந்தது. இதில், திருமண வரம் வேண்டி, ஏராளமான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். காலை, 9:00 மணியவில் வள்ளி – மணவாள பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அதை தொடர்ந்து, திருக்கல்யாணம் நடந்தது. நந்திக்கொடியோன் கயிலாய சிவவாத்திய குழுவினரின் திருக்கயிலாய இசை நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவிலின் நிர்வாக அலுவலர் நாராயணன், தலைமை குருக்கள் ஆனந்தன் ஆகியோர் செய்திருந்தனர். ஆரணி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.