பதிவு செய்த நாள்
29
செப்
2011
11:09
சேலம்: சேலம் சுகவனேஸ்வரர் கோவில் உச்சிக்கால பூஜையை கோவில் நிர்வாகமே நடத்திக் கொள்ள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று முதல் உச்சிக்கால பூஜை கோவில் நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்டது.சேலம் மாநகரில் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவில் உச்சிகால பூஜைக்காக, 1907ல் சுப்பிரமணியம் செட்டியார், கடை வீதியில், 2,147 சதுர அடி நிலத்தை தானமாக வழங்கினார். 1922ல் அவரால் எழுதப்பட்ட உயிலிலும் அந்த நிலம், அதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு சுகவனேஸ்வரர் கோவிலில் உச்சிகால பூஜையை நடத்த வேண்டும் என, குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில் அந்த இடத்தில் இருந்த பழைய கட்டிடங்களை இடித்து விட்டு, மூன்று மாடிகளைக் கொண்ட புதிய கட்டிடம் எழுப்பப்பட்டது. மேலும், உச்சிகால பூஜைக்காக ஏற்படுத்தப்பட்ட டிரஸ்டும் பெயரளவிலேயே செயல்பட்டது. புதிய கட்டிடம் கட்டுவதற்கு மாநகாரட்சி, உள்ளூர் திட்டக் குழுமத்தின் அனுமதியும் பெறப்படவில்லை. 2006ல் சேலம் மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறை துணை கமிஷனர் பொன்செல்வராஜ், கட்டிட ஆக்ரமிப்பு குறித்தும், உச்சிக்கால பூஜை விபரங்களையும் அரசின் பார்வைக்கு கொண்டு சென்றார். ராதாகிருஷ்ணன் என்பவர், இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் பானுமதி, பால்வசந்தகுமார் ஆகியோரை கொண்ட பெஞ்ச், கட்டிடம் மற்றும் உச்சிக்கால பூஜை குறித்து விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்யும்படி, சேலத்தின் அப்போதைய ஆர்.டி.ஓ., குழந்தைவேலுக்கு உத்தரவு பிறப்பித்தது. அவர், கட்டிடத்தின் நிலை குறித்தும், உச்சிக்கால பூஜை நடை முறையில் இருந்த வழக்கங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து, அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் சமர்பித்தார்.இந்த அறிக்கையில், கோவில் நிர்வாகமே உச்சிக்கால பூஜையை நடத்திக் கொள்ளவும், நன்கொடையாளரால் வழங்கப்பட்ட நிலத்தை, நிர்வாகமே எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தல் செய்து, அந்த நகலை சென்னை உயர்நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டது.அறிக்கையை ஆய்வு செய்த உயர்நீதிமன்றம், அது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது. அதையடுத்து உச்சிக்கால பூஜைக்கு கோவில் உதவி கமிஷனரையே, தக்காராக நியமனம் செய்து அப்போதைய கமிஷனர் சம்பத் உத்தரவிட்டார்.
இந்நிலையில் ஹிந்து சமய அறநிலையத்துறையின் நடவடிக்கைக்கும், ஆர்.டி.ஓ., குழந்தைவேலின் உத்தரவுக்கும் தடை விதிக்கக் கோரி சரளா குணசேகரன், பத்ரி நாராயணன், சாதிக் உசேன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்தனர்.அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், பத்ரிநாராயணன் தலைமையிலான டிரஸ்டிகள் சார்பில் தாக்கல் செய்த மனுவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார். மேலும், கோவிலின் உச்சிக்கால பூஜையை கோவில் நிர்வாகமே நடத்திக் கொள்ளவும், உச்சிக்கால பூஜைக்காக வழங்கப்பட்ட இடத்தில் கட்டடப்பட்டுள்ள கட்டிடத்தை கோவில் நிர்வாகமே சுவாதீனத்தில் எடுத்துக் கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.இந்த உத்தரவை தொடர்ந்து, நேற்று முதல் போலீஸ் பாதுகாப்புடன் கோவில் வளாகத்தில் உச்சிக்கால பூஜையை நிர்வாகமே நடத்தியது. இது குறித்து கோவில் உதவி கமிஷனர் பாஸ்கரன் கூறியதாவது: உச்சிக்கால பூஜை டிரஸ்டிகள் என, கூறிக்கொண்டவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில்தாக்கல் செய்த மனு, நேற்று (நேற்று முன்தினம்) டிஸ்மிஸ் செய்யப்பட்டது. இதனால், ஆர்.டி.ஓ., உத்தரவு அமலானதாக கருதி உயர் அதிகாரிகள் உச்சிக்கால பூஜையை கோவில் நிர்வாகமே நடத்த வேண்டும் என, உத்தரவு பிறப்பித்தனர்.அதையடுத்து, இன்று (நேற்று) முதல் கோவில் நிர்வாகமே உச்சிக்கால பூஜையை நடத்துகிறது. உயர்நீதிமன்ற உத்தரவு நகல் பெறப்பட்ட பின், அந்த உத்தரவு முழுமையாக அமல் படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.