பதிவு செய்த நாள்
12
செப்
2016
11:09
சென்னை: சென்னையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த, 2,145 விநாயகர் சிலைகள், நேற்று ஒரே நாளில் கடலில் கரைக்கப்பட்டன. தமிழகத்தில், கடந்த 5ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா, விமரிசையாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை அடுத்து, இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள், பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, கடந்த ஒரு வாரமாக வழிபாடு நடத்தி வந்தனர். வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த சிலைகள், கடந்த இரு நாட்களாக கடலில் கரைக்கப்பட்டு வருகின்றன.
ராட்சத கிரேன்கள்: நேற்று காலையிலிருந்து, நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கன்டெய்னர் லாரிகள், மினி லாரிகள், டிராக்டர்கள், மாட்டு வண்டிகளில் விநாயகர் சிலைகள், ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. அவை, நீலாங்கரை பல்கலை நகர், பட்டினப்பாக்கம், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பகுதிகளில் உள்ள கடற்கரையில் ராட்சத கிரேன்கள் மற்றும் மீன்பிடி படகுகள் உதவியுடன் கரைக்கப்பட்டன.
எண்ணுார்: சிலைகளை கரைப்பதற்கு ஏதுவாக, எண்ணுார், ராமகிருஷ்ணா நகர் கடற்கரை, திருவொற்றியூரில் பாப்புலர் எடைமேடை அருகேயுள்ள கடற்கரை, காசிமேட்டில் எண் 4 கடற்கரை என மொத்தம் மூன்று இடங்களில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதை காண்பதற்கு, ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர். காசிமேடு கடற்கரை, மனிதத்தலைகளால் நிறைந்திருந்தது. எண்ணுாரில் விநாயகர் சிலைகள் கரைப்புக்காக, கன்டெய்னர் லாரிகளின் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை முதலே, போக்குவரத்து ஸ்தம்பிக்காத அளவிற்கு, போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தனர். சிலை கரைப்பு நிகழ்வை காண வந்திருந்த பொதுமக்கள் கடலுக்குள் இறங்காமல் இருப்பதற்காக, வேலிகள் போட்டு, ஒலிபெருக்கி மூலம் காவல்துறையினர் எச்சரிக்கையும் செய்தனர். காசிமேட்டில் மட்டும், 30க்கும் மேற்பட்ட விநாயகர்கள் ஒரே நேரத்தில் வந்ததில் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது. சிலைகள் ராட்சத கிரேன்கள் மற்றும் படகுகள் மூலம் ஆழமான பகுதிகளுக்கு கொண்டு சென்று கரைக்கப்பட்டன.
15,000 போலீசார் குவிப்பு: மீஞ்சூர், சோழவரம், மணலி, செங்குன்றம், திருவொற்றியூர், எண்ணுார் போன்ற பகுதிகளில் இருந்து வந்த, 96 சிலைகள், ராமகிருஷ்ணா நகர் கடற்கரையிலும், ஆர்.கே., நகர், ஐ.ஓ.சி, வண்ணாரப்பேட்டை, வியாசர்பாடி, ஓட்டேரி பகுதிகளில் இருந்து வந்திருந்த, 179 சிலைகள், காசிமேடு கடற்கரை பகுதியிலும், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை அருகே இரண்டு சிலைகளுமாக இப்பகுதியில், 277 சிலைகள் கரைக்கப்பட்டன.
நீலாங்கரை: தாம்பரம், பல்லாவரம், பரங்கிமலை, போரூர், பள்ளிக்கரணை, கிண்டி, வேளச்சேரி, அடையாறு, திருவான்மியூர், சோழிங்கநல்லுார் போன்ற பகுதியில் இருந்த, 600க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், பாலவாக்கம், பல்கலைநகர் கடற்கரைக்கு, நேற்று கொண்டு வரப்பட்டன. கடற்கரை மணலில் இருந்த டிராலி மற்றும் மீனவர்கள் உதவியுடன் கடலில் இறக்கி, கரைக்கப்பட்டன. நேற்று ஒரே நாளில், சென்னையில், 2,145 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். விநாயகர் சிலை ஊர்வல பாதுகாப்பு பணியில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தலைமை காவலர் மீது தாக்குதல்: பட்டினப்பாக்கம் தலைமை காவலராக பணிபுரிபவர் முத்து கிருஷ்ணன். அவர் நேற்று, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் அருகே, விநாயகர் சிலை கடலில் கரைக்கப்படும் இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவ்வழியாக வாலிபர்கள் சிலர், கைகளில் கத்தியுடன், அவனை குத்தலாம் இவனை குத்தலாம் என்று பேசிக் கொண்டு சென்றனர். இதை கேட்ட அவர், வாலிபர்களை மடக்கிப் பிடித்து விசாரித்துள்ளார். உடனே, அந்த வாலிபர்கள், முத்து கிருஷ்ணனை சராமாரியாக தாக்கிவிட்டு, தப்பி ஓடிவிட்டனர். தாக்குதலில் காயமடைந்த அவர், சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்துள்ள பட்டினப்பாக்கம் போலீசார், தலைமை காவலரை தாக்கிய மர்மநபர்களை தேடி வருகின்றனர். - நமது நிருபர் குழு -