பதிவு செய்த நாள்
29
செப்
2011
11:09
திருப்பூர்: திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவில், வெங்கடேச பெருமாளுக்கு புஷ்ப அங்கி சாற்றுவதற்காக, அவினாசியில் இருந்து, மலர் மாலைகள் நேற்றிரவு அனுப்பப்பட்டன. திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவுக்கு, ஆண்டுதோறும் அவினாசியில் உள்ள மலர் நிலையத்தில் இருந்து, புஷ்ப அங்கி அனுப்பி வைக்கப்படுகிறது. திருமஞ்சன விழாவுக்காக, சகல விதமான மலர் மாலைகளும் திருப்பூர் தொழிலதிபர்களின் அன்பளிப்பாக, திருப்பதி பெருமாளுக்கு சாற்றப்படுகின்றன. மலர் நிலைய உரிமையாளர் பாபு கூறியதாவது: திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாளுக்கு, 2009ம் ஆண்டு செப்., 12ம் தேதி திருப்பூரில் திருக்கல்யாண உற்சவ விழா விமரிசையாக நடந்தது. அவ்விழாவுக்கு, அவினாசியில் இருந்து மலர் மாலைகள் தொடுத்து கொடுத்திருந்தோம். திருமலை நிர்வாகிகளுக்கு, மலர் மாலைகள் தொடுத்திருந்தது மிகவும் பிடித்தது. அன்று முதல், திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்கு அவினாசியில் இருந்து மலர் மாலைகள் பெறப்படுகின்றன. இங்குள்ள தொழில் அதிபர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். நாளை துவங்கும் பிரம்மோற்சவ விழாவிற்காக, அவினாசியில் இருந்து, 11 வகையான, 52 மாலைகள் தயாரித்து அனுப்பப்படுகின்றன. தேவஸ்தான பஸ் மூலமாக, அவினாசியில் இருந்து நேற்றிரவு அனுப்பப்பட்டது. இதை மலர் நிலையத்தார் பெரும் பாக்கியமாக கருதுகின்றனர். இவ்வாறு பாபு கூறினார்.