பதிவு செய்த நாள்
12
செப்
2016
12:09
திருநெல்வேலி: நெல்லையில் ஒரே நேரத்தில் 62விநாயகர் சிலைகள் தாமிரபரணி ஆற்றில் விஜர்சனம் செய்யப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பல்வேறு இடங்களில் வழிபாடுகள் நடத்தப்பட்டன. நேற்று மாலையில் திசையன்விளை, தென்காசி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சிலைகளை அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைத்தனர். நெல்லை பேட்டையில் 9 சிலைகளும், டவுனில் 21 சிலைகளும், ஜங்ஷனில் 4 சிலைகளும், பாளை.,யில் 28 சிலைகளும் வழிபாட்டிற்கு வைக்கப்பட்டிருந்தன. நேற்று பிற்பகல் வரையிலும் அந்தந்த பகுதிகளில் வலம் வந்தன. மாலையில் அனைத்து ஊர்வலமாக சென்று வண்ணார்பேட்டையில் தாமிரபரணி ஆற்றில் பேராத்துச்செல்வி கோயில் முன்பாக கரைத்தனர். முன்னதாக விநாயகர் சிலை ஊர்வலத்தை ஆர்.எஸ்.எஸ்.,அமைப்பின் மாநில பொறுப்பாளர் தங்கவேலு துவக்கிவைத்தார். இந்துமுன்னணி மாநில நிர்வாகி குற்றாலநாதன், பாரதிய ஜனதா கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் உடன் சென்றிருந்தனர். கடந்த பத்து தினங்களுக்கும் மேலாக பாதுகாப்பு அளித்த வந்த போலீசார் நேற்றுடன் பாதுகாப்பு பணிகளை முடித்துக்கொண்டனர். நெல்லை மாவட்டத்தில் திசையன்விளை, உவரி, பாபநாசம்,சுரண்டை, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 332 விநாயகர் சிலைகள் அந்தந்த பகுதிகளில் உள்ள கடல்,ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் விஜர்சனம் செய்தனர்.