வேலூர்: வேலூர் அடுத்த ஸ்ரீ புரம் தங்க கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி, 20 அடி நீளத்தில் அஷ்ட புஜ துர்கா தேவி சிலையை கவர்னர் திறந்து வைத்தார். சக்தி அம்மா தலைமை வகித்தார். தமிழக கவர்னர் ரோசையா துர்கா சிலையை திறந்து வைத்தார். பின்னர் நவராத்திரி விழாவை முன்னிட்டு நடந்த நாராயணி யாகத்திலும் கவர்னர் கலந்து கொண்டார். தங்க கோயிலையும் கவர்னர் சுற்றிப்பார்த்தார். விழாவில், கவர்னரின் மனைவி சிவலட்சுமி, திருமலை திருப்பதி அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் ஆதி கேவசலு நாயுடு, தங்க கோவில் நிர்வாகி சுரேஷ் பாபு, நாராயணி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பாலாஜி, நாராயணி பீடம் அறக்கட்டளை தலைவர் சவுந்தரராஜன், நாராயணி பீடம் மேலாளர் சம்பத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.