பதிவு செய்த நாள்
15
செப்
2016
12:09
பெத்தநாயக்கன்பாளையம்: பேளூர் தாந்தோன்றீஸ்வரர் கோவிலில், ஆவணி மாத கடைசி முகூர்த்தத்தை யொட்டி, நேற்று ஒரே நாளில், 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தன. சேலம் மாவட்டம், அருநூற்றுமலை பகுதியில் இருந்து உற்பத்தியாகும் வசிஷ்ட நதிக்கரையில், பஞ்சபூத தலங்கள் அமைந்துள்ளன. அதில், முதலாவதாக நிலம் தலமாக கருதப்படும், பேளூர் தாந்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள கல்யாண விநாயகரை வணங்கினால், திருமணம் கைக்கூடும் என்பது ஐதீகம். இந்நிலையில், ஆவணி மாத கடைசி முகூர்த்த தினம் நேற்று என்பதால், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, அதிகாலை முதலே கோவில் வளாகத்தில், திருமண ஜோடிகளோடு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குவிந்தனர். நேற்று, ஒரே நாளில், 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்ததால், கோவில் பகுதிகளில் உள்ள மினி மண்டபங்கள் மற்றும் பெரிய வீடுகளை வாடகைக்கு பிடித்து, ஆங்காங்கே உறவினர்களுக்கு, விருந்து பரிமாறினர்.