மதுரை: புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றுவருகிறது.
இன்று(செப் 17) புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, ஆண்டுதோறும் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பலரும் விரதமிருந்து பெருமாளை வழிபாடு செய்வது வழக்கம். இந்தாண்டும் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் துவங்கி நடைபெற்று வருகிறது. அதிகாலை முதல் அனைத்து பெருமாள் கோயில்களிலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
சிறப்பு: மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்,‘ என்கிறார் கீதையில் கண்ணபிரான். மார்கழி மாதத்தைப் போலவே புரட்டாசி மாதமும் இறைவனின் திருவிழாக்கள் பல நடக்கும் மாதமாக விளங்குகிறது. திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே, பல பெருமாள் கோயில்களிலும் வருடாந்திர திருவிழாக்கள் நடை பெறுகின்றன. தேவி பராசக்தியைப் போற்றும் நவராத்திரி விழாவும் இம்மாதத்தில் தான் நடை பெறுகின்றது. இது தவிர திருப்பதி வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது வழக்கம்.
பொதுவாக திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை. ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்றென்கின்றனர். புதனின் அதி தேவதையாகவும், பிரத்யதி தேவதையாகவும் இருப்பவர் மஹாவிஷ்ணு. ஆகவே விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது. இந்த மாதத்தை ‘எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு.