அமெரிக்கா ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் வாஷிங்டனும், பீட்டர் மில்லரும், பள்ளியில் இருந்தே ஒன்றாக படித்தவர்கள். அவர்களுடைய நட்பு, வாஷிங்டன் ஜனாதிபதி ஆன பின்னும் கூட தொடர்ந்தது. பீட்டர் மில்லர் ஒரு பெரிய சபையின் போதகர் ஆனார். மில்லரை மைக்கேல் விக்கோ என்பவன் காரணமில்லாமல் பகைத்துக் கொண்டான். அவரைப் பற்றி பொய்யான வதந்திகளை கிளப்பிவிட்டு அவமானப்படுத்தினான். மில்லருக்கு அவனது செயல்கள் மிகுந்த வேதனை அளித்தாலும், பொறுமையோடு சகித்துக் கொண்டார். இதைப் பயன்படுத்திக் கொண்ட விக்கோ, மேலும் மேலும் அவரை சிரமப்படுத்தினான். ஒரு கட்டத்தில் தேசவிரோத கும்பல் ஒன்றுக்கு தலைவனான விக்கோ, போலீசாரிடம் சிக்கி கொண்டான். அவனுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்த சமயத்தில் தனது நண்பரும் ஜனாதிபதியுமான ஜார்ஜ் வாஷிங்டனை மில்லர் சந்தித்து, அவனுக்கு மன்னிப்பு அளிக்கும்படி கேட்டு கொண்டார். ஜார்ஜ் வாஷிங்டன் மில்லரிடம்,“நீங்கள் விக்கோவிற்கு மன்னிப்பு கேட்பதன் மூலம் தேசத்துரோக குற்றவாளி ஒருவனுக்கு உதவி செய்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டு உங்கள் மீது வரக்கூடும் எனவே உங்களுக்கு என்னால் உதவி செய்ய முடியாது,” என மறுத்து விட்டார். ஆனாலும், மில்லர் விக்கோவிற்காக மன்றாடினார். அதன் பிறகு தான் விக்கோ மில்லருக்கு செய்த கொடுமைகள் பற்றியும், ஒரு கொடுமைக்காரனுக்காகவும் தன்னிடத்தில் வாதாடியது பற்றியும் வாஷிங்டன் தெரிந்து கொண்டார். விக்கோவின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றினார். இதைக் கேள்விப்பட்ட விக்கோ, பீட்டருக்கு நன்றி தெரிவித்தும், மன்னிப்பு கேட்டும் கடிதம் எழுதினான். ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும் படி செய்வார் என்ற பைபிள் வசனத்தை இந்த நிகழ்வு நினைவுபடுத்துகிறது.