தீயினால் பொன்னைச் சுடலாம், உருமாற்றலாம். ஆனால், அதை முழுமையாக அழித்து விட முடியாது. இதுபோல வாழ்க்கையிலும் அவ்வப்போது உள்ளம் எரியத்தான் செய்யும், துன்பப்பட்டு தான் தீரும். துன்பப்படாதவன் மனிதனாக இருக்க முடியாது. ஆனால் பொன்னைத் தீயிலே காய்ச்சினால் அழகு பொங்கும் ஆபரணமாகவும், மதிப்புயர்ந்த நாணயமாகவும் உருமாறுகிறது. அதுபோல், துன்பப்படும் மனமோ, பொறுமை, சகிப்புத்தன்மை போன்ற பொன் நகைகளை உருவாக்கிக் கொள்கிறது. துன்பப்படுவதன் மூலம் மனிதன் இந்த அரிய தன்மைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். நபிகள் நாயகம் இந்த குணங்களைக் கொண்டவராக வாழ்ந்தார். சிறுவனாய் இருக்கும் காலத்தில் சோதனைகளை சந்திப்பது என்பது கொடுமையிலும் கொடுமை. நபிகள் நாயகம் அத்தகைய சோதனைகளைச் சந்தித்தார். அவரது தாய் ஆமீனாவின் வயிற்றில் இருக்கும்போதே தந்தையை இழந்து விட்டார்.
இதனால் நபிகளாரைப் பெற்ற பிறகு, குழந்தைக்கு பாலுõட்டக் கூட தெம்பில்லாமல் ஆகிவிட்டார். எனவே ஹலீமா என்ற செவிலித்தாயிடம் நாயகம் ஒப்படைக்கப்பட்டார். அந்தப் பெண்மணியும் நபிகளுக்கு ஐந்து வயதான போது இறந்து விட்டார். பின்னர் தாயிடம் வந்து சேர்ந்தார் நாயகம். அவருக்கு ஆறு வயதான போது, தாய் ஆமீனாவும் இறந்து விட்டார். பெற்றோரை இழந்த அந்த இளஞ்சிறுவரை, பாட்டனார் அப்துல் முத்தலிப் கவனித்துக் கொண்டார். எட்டு வயதான போது பாட்டனாரும் மறைந்து விட்டார். அதன்பிறகு அவரது பெரிய தந்தை அபூதாலிப்பிடம் வளர்ந்தார் நாயகம். இப்படி உறவுகளையெல்லாம் இழந்தாலும், பெரிய தந்தையிடம் பணிவுடன் வளர்ந்த நாயகம், பத்து வயதிலேயே ஆடு மேய்க்கச் சென்று விட்டார். மேலும் சிறு வயதிலேயே பெரிய தந்தையுடன் இணைந்து, சிரியா நாட்டுக்கு வியாபாரத்திற்கு சென்று வருவார். நாயகம் பட்ட இந்த பாடுகளை எல்லாம், நமது சிறுவர்களுக்கு பெரியவர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும். நாயகத்தின் வேதனை நிறைந்த வாழ்க்கை சம்பவங்கள், அவர்களது முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்.