பதிவு செய்த நாள்
01
அக்
2016
04:10
உலகமே சக்திமயமாக விளங்குவதை தேவி மகாத்மியம் போற்றுகிறது. அண்ட சராசரம் அனைத்தையும் ஆதிபராசக்தியே ஆட்சி செய்கிறாள். ஓரறிவு முதல் ஆறறிவு வரையுள்ள அனைத்து உயிர்களும் அம்பிகையின் அம்சங்களே அம்பிகை வழிபாட்டில் நவராத்திரி பூஜை சிறப்பு மிக்கதாகும். இதற்காக வீடு, கோவில்களில் கொலு மேடையிட்டு அம்மனை அதன் நடுவில் அலங்கரித்து வழிபாடு செய்கிறோம். கொலுவில் குறைந்தபட்சம் ஒன்பது படிகளில் பொம்மைகளை அடுக்குவது வழக்கம். முடியாத பட்சத்தில் ஒற்றைப்படை எண்ணிக்கையில் 3,5,7 என்ற வரிசையிலும் வைக்கலாம். ஒன்பது படிக்கட்டு அமைக்கும் போது கீழ்க்கண்ட முறையில் கொலுபடியில் பொம்மைகள் இருப்பது நல்லது.
*கீழிருந்து முதல்படியில் செடி, கொடி, மரம் உள்ளிட்ட ஓரறிவு உயிரினங்கள்.
*இரண்டாவது படியில் நத்தை, மீன் முதலிய நீர்வாழ்வன
*மூன்றாவது படியில் பாம்பு, பல்லி, ஆமை போன்ற ஊர்வன
*நான்காம்படியில் பறவைகள்
*ஐந்தாம் படியில் விலங்குகள்
*ஆறாவது படியில் மனிதர்கள்
*ஏழாம்படியில் மகான்கள், அவதார புருஷர்கள்
*எட்டாவது படியில் விநாயகர், முருகன் போன்ற தெய்வங்கள்
*ஒன்பதாவது படியில் ராஜராஜேஸ்வரி அம்மன் அல்லது பூரண கும்பம் ஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிர்கள் படிப்படியாக வளர்ச்சி பெற்று உலகன்னையாகிய ஆதிபராசக்தியின்அருளைப் பெறுவதே கொலு படி உணர்த்தும் தத்துவம். இதில் ஓரறிவு முதல் மூன்றறிவு கொண்ட தாவரம், நீர்வாழ்வன, ஊர்வன போன்றவற்றில் மரம், நத்தை, மீன், பாம்பு, ஆமை போன்ற பொம்மைகள் அரிதாகவே விற்பனை செய்யப்படுகின்றன. கிளே என்னும் களிமண்ணை பேன்சி ஷாப்பில் வாங்கலாம். அதில் எறும்பு, நத்தை போன்ற ஓரிரு பொம்மைகளைச் செய்து அதற்கு வர்ணம் தீட்டிக் கொள்ளலாம். நம் வீட்டு குழந்தைகள், பெண்களின் கைவண்ணத்தாலான பொம்மைகளை அடுக்கினால் இந்த கொலு இன்னும் கோலாகலமானதாக அமையும்.