பதிவு செய்த நாள்
01
அக்
2016
04:10
பெண்கள் கொலு வைக்க ஆயத்தமாகிக் கொண்டிருப்பீர்கள். இந்த இனிய வேளையில் அதற்கான டிப்ஸ் சில இங்கு தரப்பட்டுள்ளன.
*பொம்மைகளுக்கு குறைந்த செலவில் ஆடை, ஆபரணம் தயாரிக்க வேண்டுமா? 3டி க்ளிட்டர்ஸ் கோல்டு கலர் வாங்கி, பொம்மைகளுக்கு கம்மல், நெக்லஸ், ஒட்டியாணம் என்று விருப்பப்படி அலங்காரம் செய்யலாம். அலங்கரித்து முடித்ததும் 24 மணி நேரம் காய வைத்து எடுக்க வேண்டும்.
*மலை செட் வைக்கும் போது, சிறிய தகர டப்பாவைப் புதைத்து, அதிலிருந்து இன்ஸ்டன்ட் சாம்பிராணியை எரிய விட்டால், மலையில் பனிப்புகை வருவது போல அட்டகாசமாக இருக்கும். காற்றில் வாசனையும் பரவும்.
*புது பொம்மைகளின் மீது வார்னிஷ் அடிப்பது நல்லது. இதனால் துõசி படிந்தாலும் நீரில் நனைத்த துணியால் துடைக்கலாம். பொம்மையில் பெயின்ட் உரியாமலும் இருக்கும்.
*காலியான சென்ட் (அ) ஸ்பிரே பாட்டில் மீது பசை தடவி, சம்கி அல்லது பாசி ஒட்டி அலங்கரித்து, அதில் சிறிய பூங்கொத்துகளை செருகி விட்டால் போதும். இது கொலு படிகளின் இருபுறமும் வைத்தால் பார்க்க அழகாக இருக்கும்.
*பழைய குக்கர் கேஸ்கட்டை இரண்டாக வெட்டி. அதன் மேல் கோல்டு கலர் பேப்பரை ஒட்டி விட்டால் போதும். பூங்கா மண்ணில் ஊன்றி வைத்து, அழகிய அலங்கார வளைவுகள் ரெடியாகி விடும்.
*ஆப்பிள் டப் அல்லது தட்டையான அகன்ற பாத்திரங்களில் தண்ணீரை நிரப்பி, அதில் சின்ன பிளாஸ்டிக் வாத்து பொம்மைகளை மிதக்க விடுங்கள். கடையில் விற்கும் கலர் தெர்மாகோல் உருண்டைகளை வாங்கி, வாத்துகளுடன் கூடவே நீரில் போடுங்கள். நீரின் மேற்பரப்பில் ஜிகினாத் துõளையும் துõவி விடுங்கள். விளக்கு வெளிச்சத்திலும், பேன் காற்றின் அசைவிலும் உங்கள் செயற்கை குளம் ஜொலிக்கும்.
*செட்டியார் பொம்மை அருகில் பித்தளை, பிளாஸ்டிக் சொப்புகளில் அரிசி, பருப்பு போன்ற மளிகை சாமான்களை அடுக்கி வைத்தால் மளிகை கடை நடத்துவது போலாக பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
*மளிகைச் செட்டியாரின் கல்லா பெட்டியில் 5,10,20, 25 பைசா பழைய நாணயங்களை அடுக்கி வையுங்கள். இதன் மூலம் குழந்தைகளுக்கு நாணயம் சேகரிக்கும் பழக்கம் உண்டாக வாய்ப்புண்டு.
*பூஜைக்கு வரும் குழந்தைகளுக்கு பென்சில், பேனா போன்ற எழுதுப்பொருட்கள், நற்பண்புகளை வளர்க்கும் கதை புத்தகங்களை கொடுக்கலாம்.
*ஒவ்வொருநாளும் அம்பிகையின் புராண வரலாறு, ஸ்தோத்திரங்களை குழந்தைகளுக்குச் சொல்லித் தரலாம்.
*வீட்டில் கொலு வைக்க இடப்பற்றாக்குறையா... யோசிக்க வேண்டாம். ஓரளவுக்கு உயரமான பலகையின் மேல் ஜரிகைப் புடவையை விரித்துக் கொண்டு, அதன் மீது துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி, விநாயகர் பொம்மைகளை வரிசையாக அடுக்குங்கள். தரையில் சிறிய மாக்கோலமிட்டு கும்பம் வைத்து விடுங்கள். இரண்டு பக்கத்திலும் குத்துவிளக்கேற்றி விட்டால் போதும். சிம்பிளாக இருந்தாலும் தெய்வீகமாகக் காட்சி தரும் உங்கள் வீட்டுக் கொலு!