பதிவு செய்த நாள்
03
அக்
2016
12:10
கோபி: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கவுந்தப்பாடி அருகே காந்தி கோவிலில், சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தன. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடிக்கு அருகேயுள்ள, செந்தாம்பாளையத்தில், தேசப்பிதா காந்திக்கு கோவில் நிறுவப்பட்டுள்ளது. கடந்த, 1997 பிப்.,6ல் கும்பாபிஷேகம் நடந்தது. கையில் தடியுடன், கண்ணாடி அணிந்த, ஐந்து அடி உயர காந்தி சிலை, அதன் எதிரே அன்னை கஸ்தூரிபாய் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுதோறும், குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. பிற நாட்களில் மூன்று வேளையும், பூஜைகள் நடக்கின்றன. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று காலை, 8:30 மணிக்கு, காந்தி மற்றும் அன்னை கஸ்தூரி பாய் சிலைக்கு, பால், தயிர், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் மற்றும் புனித நீர் ஊற்றி மந்திரம் முழங்க அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதை தொடர்ந்து காந்தி சிலைக்கு, கதர் வேட்டி, கண்ணாடி மாட்டி, கையில் தேசிய கொடி சொருகி, விபூதி, சந்தனம், குங்குமம் வைத்து அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல் அன்னை கஸ்தூரி பாய் சிலைக்கும் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது. பூஜையில் செந்தாம்பாளையம், கவுந்தப்பாடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பள்ளி குழந்தைகள் மற்றும் பலர் பங்கேற்றனர்.