வெண்ணைமலை: வெண்ணைமலை முருகன் கோவிலில் நவராத்திரி திருவிழா கோலாகமாக துவங்கி நடந்து வருகிறது. நவராத்திரி விழா கடந்த, 2ம் தேதி துவங்கி பல்வேறு பிரச்சித்தி பெற்ற கோவில்களில் கோலாகலமாக நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்து வருகிறது. அதன்படி, வெண்ணைமலை முருகன் கோவிலில் மூலஸ்தானம் அருகில் கொலு வைத்திருந்தனர். அதன் அருகில் முருகன் உற்சவர் வள்ளி தெய்வானை மற்றும் விநாயகருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதுகுறித்து வெண்ணைமலை முருகன் கோவில் அர்ச்சகர் சிவராஜ் கூறியதாவது: ஆண்டு தோறும் நவராத்திரி விழா வெண்ணெய்மலை முருகன் கோவிலில் கொண்டாடப்படுவது வழக்கம். வரும், விஜயதசமி அன்று மாலை, 4:00 மணியளவில் அனைத்து சுவாமிகளும் அமராவதியில் ஒன்று கூடி அம்பு சேவை நடக்கும். அதன் பின் தீபாரதனை காட்டப்பட்டு விழா நிறைவடையும். இவ்வாறு அவர் கூறினார்.