பதிவு செய்த நாள்
05
அக்
2016
12:10
மைசூரு: தசராவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், மைசூருக்கு இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு உள்ளது. காவிரி பிரச்னை காரணமாக, மைசூரு தசராவுக்கு வரும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை, இந்த ஆண்டு குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் பல்வேறு பகுதிகளிலிருந்து, 1,500க்கும் மேற்பட்ட பஸ்களை இயக்கிய, கே.எஸ்.ஆர்.டி.சி., இந்த ஆண்டு, 20 சதவீத பஸ்களை குறைத்துள்ளது. வழக்கமாக, பெங்களூரிலுள்ள சாட்டிலைட் பஸ் நிலையத்திலிருந்து மைசூருக்கு மட்டுமே தினமும், 500 பஸ்கள் இயக்கப்படும். இது தவிர, 150 சிறப்பு பஸ்களும் இயக்குவதுண்டு. தற்போது பயணிகள் வரத்து குறைவால் பஸ்கள் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதாக, கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாகம் அறிவித்துள்ளது. தவிர, 250க்கும் மேற்பட்ட தனியார் சுற்றுலா பஸ்களும், தசரா திருவிழாவின் போது இயக்கப்படும். இதன் எண்ணிக்கையும் இந்த ஆண்டு குறைந்துள்ளதாக பெங்களூரு பஸ் உரிமையாளர் சங்க செயலர் கே.என்.ரமேஷ் கூறினார். காவிரி பிரச்னை காரணமாக, தமிழகத்துக்கு இயக்கப்படும் கர்நாடக பஸ்கள் நிறுத்தப்பட்டதால் தினமும், பல லட்சம் ரூபாய் இழப்பை, கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாகம் சந்தித்து வருகிறது எனபது குறிப்பிடத்தக்கது.