மாரியம்மனை பராசக்தியின் அம்சம் என்பர். ஆனால், சிவமும், சக்தியும் ஒன்று என்பதன் அடிப்படையில், சிவராத்திரியன்று தேனி மாவட்டம் கம்பம் கவுமாரியம்மனை, சிவனைப்போலவே அலங்காரம் செய்து பூஜிக்கின்றனர்.
அம்பிகைக்கு நெற்றிக்கண் சூடி, தலையில் பிறைச்சந்திரன், கங்காதேவி, கையில் உடுக்கை, சூலம் ஆகியவற்றுடன், புலித்தோல் நிற ஆடை அணிவித்து அலங்கரிப்பர். சிவனுக்குரிய முறைப்படி இரவில் ஆறு கால பூஜையும் நடக்கும். இந்த வேளையில் அம்பிகையைத் தரிசிப்பது மிகவும் விசேஷம். இங்குள்ள உற்சவ அம்பாள், நான்கு தலை நாகத்தின் கீழ் காட்சி தருகிறாள். வெள்ளிக்கிழமைகளில் இவள் பல்லக்கில் எழுந்தருளி, பிரகார உலா செல்வாள். பெண்கள் மட்டும் இந்த பல்லக்கை துாக்கிச் செல்வர். சித்திரை மாதத்தில் இவளுக்கு 21 நாட்கள் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படும். விழாவின்போது பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், பூக்குழி இறங்கியும் வேண்டிக்கொள்வர்.