பதிவு செய்த நாள்
11
அக்
2016
12:10
உடுமலை: ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு உடுமலை பகுதி கோவில்களில் நடந்த சிறப்பு பூஜை, வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
தமிழர்களின் முக்கிய பண்டிகையான நவராத்திரி விழா 9 நாள் கொண்டாடப்படுகிறது. இதன் முக்கிய விழாவான சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி உடுமலையிலுள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. உடுமலை மாரியம்மன் கோவிலில் நேற்று காலை, 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரசன்ன விநாயகர் கோவிலில் கார்த்திகை விழா மன்றம் சார்பில் 55ம் ஆண்டு நவராத்திரி இசை இலக்கிய கலைவிழா கடந்த 2ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்து வந்தன. இவ்விழாவில் நேற்றுமுன்தினம் மாலை இன்னிசையும், பரதநாட்டிய நிகழ்ச்சியும் இடம்பெற்றன.
உடுமலை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் தேவஸ்தானத்தில், நவராத்திரி கலை விழா கடந்த முதல் தேதி துவங்கியது. தினமும் காலை, 8:00 மணிக்கு அபிேஷகமும், காலை, 11:30 மணிக்கு மாதர் சங்கத்தாரின் லலிதா சகஸ்ரநாமமும், தொடர்ந்து தீபாராதனையும் நடந்தன. விழாவின் 10ம் நாளான நேற்று, சரஸ்வதி பூஜையையொட்டி, அம்மன் நித்ய
கிளின்ன தேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி சிறப்பு அபிேஷகம், வழிபாடு நடந்தது. இன்று விஜயதசமி கொண்டாடப்படுகிறது. வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் இன்று இரவு திருவீதியுலா வருகிறார்.
இதே போல் உடுமலையில் உள்ள பல்வேறு கோவில்களிலும் சிறப்பு பூஜை, அபிேஷகம், வழிபாடுகள் நடந்தன.