பதிவு செய்த நாள்
11
அக்
2016
12:10
திருப்பூர்: ""சிவனுக்கு ஒரு ராத்திரி; சக்திக்கு ஒன்பது ராத்திரி; பெண்களின்றி, ஒன்றுமில்லை என்பதை விளக்குவதே, நவராத்திரி விழா, என, ஆன்மீக சொற்பொழிவாளர் நாராயணன் பேசினார்.ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், திருப்பூர் தமிழ்ச்சங்கம் சார்பில், "குறையொன்றுமில்லை நிகழ்ச்சி, திருப்பூர் ஐயப்பன் கோவிலில் நடைபெற்றது.
இதில், "சக்தி மகிமை என்ற தலைப்பில், நாராயணன் பேசியதாவது:ஆண்கள் வலிமை பெற்றிருந்தாலும், அவர்களுக்கு சக்தி கொடுக்கக்கூடியவர்கள் பெண்களே. நாடு, சமூகம், கிராமம், குடும்பம் என அனைத்துக்கும், சக்தியாக, பெண்களே விளங்குகின்றனர். ஒரு பெண்
இல்லையென்றால், ஆணால் இயங்கவே முடியாது. பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து கடைந்த போது, ஆல கால விஷம் வந்தது. அமுதம் என்று, சிவன் உட்கொண்டார். உடனே சக்தி, சிவனின் தொண்டை யில் கை வைத்து, ஆலகால விஷத்தை தடுத்து நிறுத்தினார். சிவனின் தொண்டைடோடு விஷம் நின்றுவிட்டது. அதனால், திருநீலகண்டர் என பெயர் வந்தது. அந்த சிவனையே, காப்பாற்றியவர், சக்தி. ஆணின் ஒவ்வொரு செயலிலும், வளர்ச்சியிலும், பெண்களின் சக்தி உள்ளது; பெண்களின் பாகமும், பங்கும் உள்ளது. அதனாலேயே, சிவனின் உடலில் சரி பாதியாக பார்வதி உள்ளார். திருச்செங்கோட்டில், அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சிவனும், பார்வதியும் சரிபாதியாக, வீற்றிருக்கின்றனர்.
சக்தியின் மறுபெயர் "மாரி. மாரி என்றால் மழை; பக்தர்களிடம் பயனை எதிர்பார்க்காமல், பலன் பொழிபவர் நம் அன்னை. சிவனுக்கு ஒரு ராத்திரி; சக்திக்கு ஒன்பது ராத்திரி, அதுவே நவராத்திரி. இந்த விழா, பெண்களின் குண நலன்கள் சிறக்க, வளம் பெருக்க, சிறப்பான பூஜைகளுடன் கொண்டாடப்படுகிறது. உலகின் ஆதாரம் பெண்களே என்பதை உணர்த்துவதே,
இந்த விழா. இவ்வாறு, நாராயணன் பேசினார்.