பதிவு செய்த நாள்
01
அக்
2011
04:10
1893-இல் சேத் ஹாஜி முகமது ஹாஜி தாதா, நேட்டால் இந்தியரிடையே தலைசிறந்த தலைவராகக் கருதப்பட்டார். செல்வ விஷயத்தில் பார்த்தால் இந்தியரில் முதன்மையானவர் சேத் அப்துல்லா ஹாஜி ஆகும். ஆனால், இருவரும் மற்றவர்களும் பொதுக் காரியங்களில் சேத் ஹாஜி முகமதுவுக்கே முதலிடம் அளித்து வந்தனர். ஆகவே, அவருடைய தலைமையில் அப்துல்லா சேத்தின் வீட்டில் ஒரு பொதுக் கூட்டம் நடந்தது. வாக்காளர் மசோதாவை எதிர்ப்பது என்று அதில் தீர்மானமாயிற்று.
தொண்டர்கள் சேர்க்கப்பட்டனர். நேட்டாலில் பிறந்தவர்களான இந்தியர் அதாவது பெரும்பாலும் இந்தியக் கிறிஸ்தவ இளைஞர்கள் அக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டனர். டர்பன் நீதிமன்ற மொழி பெயர்ப்பாளரான ஸ்ரீ பாலும், ஒரு மிஷன் பாடசாலை ஆசிரியரான ஸ்ரீ சுபான் காட்பிரேயும் இக்கூட்டத்திற்கு வந்திருந்தனர். ஏராளமான கிறிஸ்தவ இளைஞர்கள் அக்கூட்டத்திற்கு வருவதற்குப் பொறுப்பாளிகளாக இருந்தவர்கள். இவர்கள் இருவருமே. இவர்கள் எல்லோரும் தொண்டர்களாகப் பதிவு செய்து கொண்டார்கள். உள்ளூர் வர்த்தகர்கள் பலரும் தொண்டர்களாகப் பதிவு செய்து கொண்டார்கள்.
சேத்துக்கள் தாவூது முகமது, முகமது காசிம் கம்ருதீன் ஆதம்ஜி மியாகான், ஏ. குழந்தை வேலுப் பிள்ளை, ஸி. லச்சிராம், ரங்கசாமிப் படையாச்சி, ஆமத் ஜிவா ஆகியவர்கள் பதிவு செய்து கொண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். பார்ஸி ருஸ்தம்ஜியும் அவர்களுள் ஒருவராக இருந்தார். சேர்ந்து கொண்ட குமாஸ்தாக்களில் ஸ்ரீமான்கள் மணேக்ஜி, சூஜாஷி. நரசிங்கராம் முதலியவர்களும், தாதா அப்துல்லா கம்பெனி முதலிய பெரிய கம்பெனிகளில் வேலை பார்த்தவர்களும் இருந்தனர். பொது வேலையில் தாங்களும் பங்கெடுத்துக் கொள்ளுவதைக் குறித்து இவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியடைந்ததோடு. ஆச்சரியமும் அடைந்தார்கள். இவ்விதம் பங்கு கொள்ள அழைக்கப்படுவது, அவர்களுடைய வாழ்க்கையிலேயே ஒரு புது அனுபவம். சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தானதோர் வேளையில் உயர்வு, தாழ்வு சிறியவர்கள், பெரியவர்கள், எஜமான், வேலைக்காரன், ஹிந்து முஸ்ஸிம், பாரஸி கிறிஸ்தவர், குஜராத்திகள், மதராஸிகள், சிந்துக்காரர்கள் என்ற பாகுபாடுகளையெல்லாம் மறந்து விட்டனர். எல்லோரும் ஒரே மாதிரியாக தாய்நாட்டின் குழந்தைகள் சேவகர்கள்.
மசோதா இரண்டாம் முறையாகச் சட்டசபையில் நிறைவேறி விட்டது. அல்லது நிறைவேற இருக்கும் தருணத்தில் இருந்தது எனலாம். இத்தகைய கடுமையான மசோதாவுக்கு இந்தியர், தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவிக்காததிலிருந்தே, வாக்குரிமைக்கு அவர்கள் தகுதியற்றவர்கள் என்பது ருசுவாகிறது என்று சட்ட சபையில் மசோதாவின் மீது பேசியவர்கள் கூறினர். நிலைமையைப் பொதுக் கூட்டத்திற்கு விளக்கிக் கூறினேன். நாங்கள் செய்த முதல் காரியம், சட்டசபையின் சபாநாயகருக்குத் தந்தி கொடுத்ததாகும். மசோதா மீது மேற்கொண்டும் விவாதிப்பதை ஒத்தி வைக்குமாறு அவரைக் கோரினோம். அதே போன்ற தந்திகளைப் பிரதமர் ஸர் ஜான் ராபின்ஸனுக்கும், தாதா அப்துல்லாவின் நண்பர் என்ற முறையில் ஸ்ரீ எஸ்கோம்புக்கும் அனுப்பினோம். மசோதாவின் விவாதம் இரண்டும் தினங்களுக்கு ஒத்தி வைக்கப்படும் என்று சபாநாயகர் உடனே பதில் அனுப்பினார். இதனால் மகிழ்ச்சியடைந்தோம்.
சட்டசபை முன்பு சமர்ப்பிப்பதற்கு மகஜரைத் தயாரித்தோம். அதற்கு மூன்று பிரதிகள் தயாரிக்க வேண்டி இருந்ததோடு பத்திரிகைகளுக்கும் தனியாக ஒரு பிரதி வேண்டியிருந்தது. மகஜரில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கையெழுத்துக்களையும் வாங்கிவிடுவதென்றும் உத்தேசிக்கப்பட்டது. இந்த வேலைகளை எல்லாம் ஒரே இரவில் செய்து முடிக்க வேண்டியிருந்தது. ஆங்கிலம் தெரிந்த தொண்டர்களும் மற்றும் பலரும் இரவெல்லாம் வேலை செய்தனர். ஸ்ரீ ஆர்தர் வயதானவர், அழகாக எழுதுவதில் பெயர் பெற்றவர். முக்கியப் பிரதியை அவரே எழுதினார். மற்றவைகளை ஒருவர் படித்துச் செல்ல, மற்றவர்கள் எழுதினர். இவ்விதம் ஒரே சமயத்தில் ஐந்து பிரதிகள் தயாராகிவிட்டன. தொண்டர்களான வர்த்தகர்கள் மகஜரில் கையெழுத்து வாங்கத் தங்கள் சொந்த வண்டிகளில் சென்றனர், வாடகை வண்டிகளில் போனவர்கள் தாங்களே வாடகையைக் கொடுத்துவிட்டார்கள். இவைகளெல்லாம் வெகுசீக்கிரத்தில் செய்து முடிக்கப் பெற்றன. மகஜரையும் அனுப்பிவிட்டோம். பத்திரிகைகளும் அதைப் பிரசுரித்து ஆதரவான அபிப்ராயங்களை எழுதின. இவ்விதம் அது சட்டசபையிலும் சிறிது ஆதரவான அபிப்பிராயத்தை உண்டாக்கியது. மகஜரைக் குறித்துச் சட்டசபையில் விவாதித்தனர். மசோதாவைக் கொண்டு வந்திருந்தவர்கள், மகஜரில் கூறப்பட்டிருந்த வாதங்களுக்குப் பதிலாக நிச்சயமாக நொண்டிச் சமாதானங்களையே கூறினர். என்றாலும் மசோதா நிறைவேறிவிட்டது.
இப்படித்தான் நடக்கப்போகிறது என்பதை நாங்கள் எல்லோரும் அறிவோம். ஆனால், அக்கிளர்ச்சி சமூகத்தினர் இடையே ஒரு புத்துயிரை அளித்தது. இந்தியர் யாவரும் பிரிக்க முடியாத ஒரே சமூகத்தினர். வர்த்தக உரிமைக்காகப் பேராடுவதைப் போலவே தங்கள் ராஜிய உரிமைக்காகவும் போராடியே தீருவர் என்பதை எல்லோரும் உணரும்படியும் இக்கிளர்ச்சி செய்தது. அச் சமயம் லார்டு ரிப்பன் குடியேற்ற நாட்டு மந்திரியாக இருந்தார். அவருக்குப் பிரம்மாண்டமான மகஜர் ஒன்றை அனுப்புவது என்று முடிவு செய்தோம். இது சின்ன விஷயம்ன்று, ஒரே நாளில் செய்துவிடக் கூடியதும் அல்ல. தொண்டர்களைத் திரட்டினோம். இவ் வேலையில் எல்லோரும் அவரவர்கள் பங்கைச் செய்தனர்.
இந்த மகஜரைத் தயாரிப்பதில் நான் அதிகச் சிரமம் எடுத்துக் கொண்டேன். இவ் விஷயத்தைக் குறித்துக் கிடைக்காத புத்தகங்களையெல்லாம் படித்தேன். ஒரு கொள்கையையும் உசிதத்தையுமே முக்கியமாகக் கொண்டவை மகஜரில் நான் கூறியிருந்த வாதங்கள். இந்தியாவில் ஒரு வகையாள வாக்குரிமை இருந்து வருவதால் நேட்டாலிலும் வாக்குரிமை பெற எங்களுக்கு உரிமை உண்டு என்று வாதித்தேன். வாக்குரிமை உபயோகித்துக் கொள்ளக் கூடிய இந்தியரின் தொகை மிகக் குறைவேயாகையால், அந்த உரிமை தொடர்ந்து இருந்து வரும்படியாகப் பார்த்துக் கொள்வதே உசிதமானது என்றும் வற்புறுத்தினேன்.
இரண்டு வாரங்களுக்குள் பத்தாயிரம் கையெழுத்துக்களை வாங்கினோம். இந்த வேலையில் ஈடுபட்டவர்கள், இத்தகைய வேலைக்கே முற்றும் புதிதானவர்கள். இதைக்கொண்டு கவனித்தால், மாகாணம் முழுவதும் போய், அவ்வளவு ஏராளமான கையெழுத்துக்களை வாங்கியதும் அற்ப சொற்பமான வேலையல்ல என்பது விளங்கும் விண்ணப்பத்தின் கருத்தை முற்றும் புரிந்து கொள்ளாதவர்கள் யாரிடமும் கையெழுத்து வாங்கக் கூடாது. என்று முடிவு செய்திருந்தோம். ஆகையால், விசேஷத் தகுதி பெற்றிருந்த தொண்டர்களையே இந்த வேலைக்குத் தூரத்தில் இருந்தன. அநேக ஊழியர்கள், தங்கள் முழு மனத்தையும் இவ் வேலையில் செலுத்தினால்தான் இவ் வேலை சீக்கிரத்தில் முடியும். அவ்வாறே பலர், முழுமனத்துடன் வேலை செய்தனர். இவ் வரிகளை நான் எழுதும் போது சேத் தாவூது முகமது, ருஸ்தம்ஜி, மியாகான், ஆமத் ஜிவா ஆகியவர்கள் தெளிவாக என் கண்முன்பு தோன்றுகின்றனர். அதிகப் படியான கையொப்பங்களை வாங்கி வந்தவர் இவர்களே. தாவூது சேத் நாளெல்லாம் வண்டியில் சென்றவண்ணம் இருந்தார் அவ்வேலையில் இவர்களுக்கு இருந்த அன்பினாலேயே இதையெல்லாம் செய்தனர். இவர்களில் ஒருவர் கூடத் தங்கள் செலவுக்குப் பணம் வேண்டும் என்று, கேட்டதில்லை. தாதா அப்துல்லாவின் வீடு, உடனே ஒரு சத்திரமாகவும் பொதுக் காரியாலயமாகவும் மாறிவிட்டது. எனக்கு உதவி செய்த படித்த நண்பர்கள் பலரும், மற்றும் பலரும், அங்கேதான் சாப்பிட்டார்கள். இவ்விதம் உதவி செய்த ஒவ்வொருவருக்கம் பணச் செலவு அதிகமாயிற்று.
முடிவாக, மகஜரைச் சமர்ப்பித்துவிட்டோம். எல்லோருக்கும் அனுப்புவதற்கும் வினியோகிப்பதற்குமாக அம்மகஜரின் ஆயிரம் பிரதிகளை அச்சிட்டோம். நேட்டாலில் இருந்த தங்கள் நிலைமையைப் பற்றி இந்திய மக்கள் முதன் முதலாக அறியும்படி இது செய்தது. எனக்குத் தெரிந்த எல்லா பத்திரிகைகளுக்கும் பிரமுகர்களுக்கும் மகஜரின் பிரதிகளை அனுப்பினேன். டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை, இம்மகஜரைக் குறித்து எழுதிய ஒரு தலையங்கத்தில் இந்தியரின் கோரிக்கையைப் பலமாக ஆதரித்தது. இங்கிலாந்தில் பல கட்சிகளைச் சேர்ந்த பத்திரிகைகளுக்கும் பிரமுகர்களுக்கும் மகஜரின் நகலை அனுப்பினேன். லண்டன் டைம்ஸ் பத்திரிகை எங்கள் கட்சியை ஆதரித்தது. மசோதா நிராகரிக்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையைக் கொள்ள லானோம்.
இச் சமயத்தில் நான் நேட்டாலை விட்டுப் போய்விடுவது என்பது முடியாத காரியம் ஆகிவிட்டது. இந்தய நண்பர்கள் நாலா பக்கங்களிலும் என்னைச் சூழ்ந்து கொண்டிருந்தனர். நிரந்தரமாக அங்கே தங்கிவிடுமாறும் மன்றாடினர். எனக்கு இருந்த கஷ்டங்களை எடுத்துக் கூறினேன். பொதுஜனத் செலவில் அங்கே தங்குவதில்லை என்று முடிவு கட்டிக் கொண்டேன். தனியாக ஒரு ஜாகையை அமர்த்திக் கொள்ள வேண்டியது அவசியம் என்றும் எண்ணினேன். வீடு நல்லதாக இருக்க வேண்டும், அதோடு நல்ல இடத்திலும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். சாதாரணமாக பாரிஸ்டர்களுக்கு உரிய அந்தஸ்தில் நான் வாழ்ந்தாலன்றி இந்திய சமூகத்திற்கு நான் மதிப்பைத் தேடிக் கொடுத்தவன் ஆக முடியாது. என்ற எண்ணமும் எனக்கு இருந்தது. வருடத்திறகு 300 பவுனுக்குக் குறைத்து அத்தகைய குடித்தனத்தை நடத்துவது இயலாது என்றும் எனக்குத் தோன்றியது. ஆகவே, குறைந்தபட்சம் அந்த அளவுக்குச் சட்ட சம்பந்தமான வேலையை எனக்குத் தருவதாக இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனக்கு உத்தரவாதம் அளித்தால் மாத்திரமே நான் அங்கே தங்க முடியும் என்று முடிவு செய்தேன். இந்த முடிவை அவர்களுக்கு அறிவித்தேன். நீங்கள் செய்யும் பொது வேலைக்காக அத்தொகையை உங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புவோம். இதை நாங்கள் எளிதாக வசூலித்துவிட முடியும். இதுவல்லாமல் தனிப்பட்டவர்களுக்காக நீங்கள் செய்யும் வக்கீல் வேலைக்கு, நீங்கள் தனியாகக் கட்டணம் பெற்றுக் கொள்ளலாம் என்று அவர்கள் கூறினர்.
அது முடியாது பொதுஜன ஊழியத்திற்கு உங்களிடம் பணம் வாங்க முடியாது. இந்த வேலைக்குப் பாரிஸ்டர் என்ற வகையில் என் திறமை. அதிகமாகத் தேவையில்லை. உங்களையெல்லாம் வேலை செய்யும் படி செய்வதே முக்கியமாக என் வேலையாக இருக்கும். அப்படியிருக்க, இந்த வேலைக்குப் பண உதவி செய்யுமாறு உங்களிடம் நான் அடிக்கடி கேட்டுக்கொள்ள வேண்டிவரும் என் சொந்தச் செலவுக்கும் உங்களிடமிருந்து நான் பணம் வாங்குவதாக இருந்தால் பெருந்தொகை கொடுக்கும்படி உங்களைக் கேட்பது எனக்குச் சங்கடமாக இருக்கும். முடிவாக அதனால் நம் வேலை நின்றுவிடும் நிலைக்கு வந்துவிடுவோம். இத்துடன் பொது வேலைக்கு ஆண்டுக்கு 300 பவுனுக்கு மேல் நம் சமூகம் பணம் திரட்ட வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன் என்று கூறினேன்.
கொஞ்ச காலமாக உங்களுடன் பழகி உங்களை நன்றாக நாங்கள் அறிந்து கொண்டிருக்கிறோம். உங்களுக்குத் தேவை இல்லாதது எதையும் நீங்கள் பெற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்பது எங்களுக்கு நிச்சயமாகத் தெரியும். நீங்கள் இங்கே இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பும்போது உங்கள் செலவுக்கு நாங்கள் ஏற்பாடு செய்ய வேண்டாமா ? என்றும் கேட்டார்கள்.
அதற்கு நான் கூறியதாவது, நீங்கள் என்னிடம் கொண்டிருக்கும் அன்பும், இப்பொழுது உங்களுக்கு இருக்கும் உற்சாகமுமே நீங்கள் இவ்விதம் பேசும்படி செய்கின்றன. இந்த அன்பும் உற்சாகமும் எப்பொழுதும் இப்படியே இருந்து வரும் என்று நாம் எவ்விதம் நிச்சயமாக நம்ப முடியும் ? உங்கள் நண்பன், ஊழியன் என்ற வகையில், சில சமயங்களில் உங்களை நான் கடிந்து பேசவும் நேரலாம். அப்பொழுதும் என்னிடம் நீங்கள் அன்புடையவர்களாகவே இருப்பீர்களா என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். ஆனால் உண்மை என்னவெனில், பொது வேலைக்காக நான் சம்பளமாக எதுவும் வாங்கிக் கொள்ளக்கூடாது என்பதுதான் நீங்கள் எல்லோரும் உங்களுக்கு இருக்கும் சட்ட வேலையை என்னிடம் ஒப்படைத்தால் இதுவே எனக்குப் போதுமானது அதுவும்கூட உங்களுக்குக் கஷ்டமானதாக இருக்கலாம். நான் வெள்ளைக்காரப் பாரிஸ்டர் அல்ல. கோர்ட்டு என்னை மதிக்கும் என்று நான் எப்படி நிச்சயமாகக் கூற முடியும் ? வக்கீல் தொழிலில் நான் எவ்வளவு தூரம் திறமையாக நடந்து கொள்ளுவேன் என்பதும் எனக்கு நிச்சயமாகத் தெரியாது. ஆகையால், என்னை உங்களுடைய வக்கீலாக அமர்த்திக் கொளவதிலும் உங்களுக்குச் சில ஆபத்துக்கள உண்டு. அந்த வேலையை எனக்குக் கொடுப்பதைக் கூட உண்மையில் என்னுடைய பொது வேலைக்குச் சன்மானம் என்றே நான் கருத வேண்டும்.
இந்த விவாதத்தின் பலனாகச் சுமார் இருபது வர்த்தகர்கள் ஓர் ஆண்டிற்கு என்னைத் தங்கள் வக்கீலாக அமர்த்திக்கொண்டு, அதற்காக எனக்குப் பணம் கொடுத்தார்கள். நாம் தாய்நாடு திரும்பும்போது எனக்கு ஒரு பண முடிப்பு அளிப்பதென்று, தாதா அப்துல்லா தீர்மானித்திருந்தார். அந்தப் பணத்தைக் கொண்டு அவர், எனக்குத் தேவையாயிருந்த மேடிஜ, நாற்காலி முதலியவைகளை வாங்கிக் கொடுத்தார். இவ்வாறு நான் நேட்டாலில் குடியேறினேன்.