பதிவு செய்த நாள்
01
அக்
2011
04:10
பாலசுந்தரத்தின் வழக்கினால் ஒப்பந்தத் தொழிலாளருடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டதானாலும், அவர்களுடைய நிலைமையைக் குறித்து ஆழ்ந்து ஆராயும்படி என்னைத் தூண்டியது, கடுமையான விசேஷ வரியை அவர்கள் மீது சுமத்துவதற்குச் செய்யப்பட்ட முயற்சியே ஆகும். அதே 1894 ஆம் ஆண்டில் நேட்டால் அரசாங்கம் இந்திய ஒப்பந்தத் தொழிலாளருக்கு ஆண்டுக்கு 25 பவுன் வரி விதிக்க முற்பட்டது. இந்த யோசனையைக் கேட்டுத் திகைப்புற்றேன். இவ்விஷயத்தைக் குறித்து விவாதிக்க, இதைக் காங்கிரஸின் முன் கொண்டு வந்தேன். அவசியமான எதிர்ப்புக்கு ஏற்பாடு செய்வதென்று உடனே காங்கிரஸ் தீர்மானித்தது.
இந்த வரியின் பூர்வோத்தரத்தைக் குறித்தும் சுருக்கமாக முதலில் நான் விளக்க வேண்டும். 1860-ம் ஆண்டு வாக்கில் நேட்டாலில் இருந்த ஐரோப்பியர்கள், அங்கே கரும்பு சாகுபடிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று கண்டனர். இதற்கு தொழிலாளர் தேவை என்றும் உணர்ந்தார்கள். இத்தகைய வேலைக்கு நேட்டால் ஜூலுக்கள் பயன்படமாட்டார்கள். கரும்புச் சாகுபடிக்கும், சர்க்கரை தயாரிப்பதற்கும் வெளியில் இருந்து தொழிலாளரைக் கொண்டு வந்தாலன்றிச் சாத்தியமில்லை. அதன் பேரில் நேட்டால் அரசாங்கத்திற்கும், இந்திய அரசாங்கத்திற்கும் கடிதப் போக்குவரத்து நடந்தது. இந்தியத் தொழிலாளரைத் திரட்டிக் கொண்டுவர, நேட்டால் அரசாங்கம் அனுமதி பெற்றது. இவ்விதம் திரட்டப்படும் தொழிலாளர்கள், நேட்டாலில் ஐந்தாண்டுகள் வேலை செய்வதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இந்த ஐந்து வருட காலம் முடிந்ததும் அங்கேயே குடியேறி விடலாம். முழு உரிமையுடன் அவர்கள் நிலத்தையும் வைத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு இவ்விதமெல்லாம் ஆசை காட்டப்பட்டது. ஏனெனில் இத்தொழிலாளரின் ஒப்பந்தம் தீர்ந்த பிறகும் இவர்களின் உழைப்பைக் கொண்டே தங்களுடைய விவசாயத் தொழிலை விருத்தி செய்து கொண்டு விடலாம் என்று அப்பொழுது வெள்ளைக்காரர்கள் எண்ணினார்கள்.
இந்தியரோ, அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப் பட்டதற்கு அதிகமாகவே தென்னாப்பிரிக்காவுக்கு பயன்பட்டனர். ஏராளமாகக் காய்கறிகளைப் பயிரிட்டார்கள். இந்தியாவிலிருந்து பல ரகக் கறிகாய்களையும் கொண்டு வந்து அங்கே பயிரிட்டனர். அந்நாட்டுக் காய்கறிக் தினுசுகளைக் குறைந்த செலவில் பயிரிடுவதையும் சாத்தியமாக்கினர். மாமரத்தையும் அங்கே முதன் முதலில் பயிரிட்டனர். அவர்களுடைய உழைப்பும் முயற்சியும் விவசாயத்தோடு நின்று விடவில்லை. வர்த்தகத்திலும் புகுந்தது நிலம் வாங்கி, வீடுகள் கட்டினர். பலர் தொழிலாளர் அந்தஸ்திலிருந்து நிலத்திற்கும் வீடுகளுக்கும் தாங்கள் சொந்தக்காரர் என்ற நிலைக்கும் உயர்ந்தனர். இவர்களைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து வர்த்தகர்களும் அங்கேபோய் வியாபாரம் செய்யக் குடியேறினர். இப்படி வந்தவர்களில் முதன் முதலாக வந்தவர் காலஞ்சென்ற சேத் அபூபக்கர் ஆமத் வெகு சீக்கிரத்திலேயே அவர் தமது வர்த்தகத்தைப் பெருக்கி விட்டார்.
வெள்ளை வர்த்தகர்கள் திகிலடைந்து விட்டனர். ஆரம்பத்தில் இந்தியத் தொழிலாளர் வேண்டுமென்று விரும்பியபோது அவர்களுக்கு வர்த்தகத் திறமையும் இருக்கும் என்று அவர்கள் எண்ணவில்லை. சுயேச்சையான விவசாயிகள் என்ற அளவோடு மாத்திரம் இந்தியர்கள் இருந்திருந்தாலும் சகித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், வர்த்தகத்திலும் அவர்கள் தங்களுக்குப் போட்டியாக இருப்பதை நினைத்துப் பார்க்கவும் வெள்ளை வர்த்தகருக்குச் சகிக்கவில்லை.
இந்தியர் மீது விரோதத்திற்கு விதை விதைத்தது இதுதான். இது வளர்வதற்கு மற்றும் பல விஷயங்களும் உதவியாக இருந்து விட்டன. நமது மாறுபட்ட வாழ்க்கை, கொஞ்ச லாபத்தைக் கொண்டு திருப்தியடைந்து விடும் நம் மனப்பான்மை, சுத்தம், சுகாதாரம் ஆகியவை சம்பந்தமாக நம்மிடம் இருக்கும் அசிரத்தை, நம்மைச் சுற்றி இருப்பவைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்பதில் நமக்குச் சுறுசுறுப்பும் இல்லாமை, வீடுகளைப் பழுதில்லாமல் வைத்திருப்பதில் நமக்கிருக்கும் கஞ்சத்தனம், இவைகள் எல்லாவற்றுடன் மத வித்தியாசமும் சேர்ந்து விரோதத் தீயை ஊதி வளர்த்தன. இந்த விரோதம், இந்தியரின் வாக்குரிமையை ரத்து செய்யும் மசோதாவின் மூலமும், ஒப்பந்த இந்தியருக்கு வரி விதிக்கும் மசோதாவின் மூலமும் சட்ட ரீதியில் வெளிப்பட்டது. சட்டம் இல்லாமலேயே அதே தொந்தரவுகள் ஏற்கனவே ஆரம்பம் ஆகிவிட்டன. அத்தொழிலாளரின் ஒப்பந்த காலம், இந்தியாவுக்கு போன பிறகு முடியக் கூடியவாறு அவர்களைக் கட்டாயமாக இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பி விடுவது என்பது முதல் யோசனை. ஆனால் அந்த யோசனையை இந்திய சர்க்கார் ஒப்புக்கொள்ளுவதாக இல்லை. ஆகையால், கீழ்வரும் வகையில் மற்றோர் யோசனை செய்யப்பட்டது.
1. இந்திய ஒப்பந்தத் தொழிலாளி, ஒப்பந்த காலம் தீர்ந்ததுமே இந்தியாவுக்குத் திரும்பிவிட வேண்டும்.
2. அப்படித் திரும்பவில்லையென்றால், ஒவ்வோர் இரண்டு ஆண்டுகளுக்கும் புதிதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இவ்விதம் ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கும் ஒவ்வொரு தடவையிலும் கூலி உயர்வு கொடுக்கப்படும்.
3. அப்படியின்றி, இந்தியாவுக்குத் திரும்பிவிடவோ, ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக் கொள்ளவோ மறுத்தால், அத் தொழிலாளி ஆண்டுக்கு 25 பவுன் வரி செலுத்த வேண்டும்.
இந்த யோசனைக்கு இந்திய அரசாங்கத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக ஸர் ஹென்றிபின்ஸ், ஸ்ரீ மேஸன் ஆகியோர் ஆகியோர் அடங்கிய ஒரு தூது கோஷ்டியை இந்தியாவுக்கு அனுப்பினார்கள். இந்தியாவில் அப்பொழுது லார்டு எல்ஜீன் வைசிராயாக இருந்தார். 25 பவுன் வரி விதிப்பது என்பதை அவர் அங்கீகரிக்க வில்லை. ஆனால், மூன்று பவுன் தலைவரி விதிப்பது என்பதை அவர் ஒப்புக்கொண்டார். இது வைசிராய் செய்த மோசமான தவறு என்று அப்பொழுது நான் எண்ணினேன், இன்றும் அப்படியே கருதுகிறேன். தமது அங்கீகாரத்தைக் கொடுத்ததில் அவர் இந்தியாவின் நலன்களைக் குறித்துக் கொஞ்சமும் எண்ணவே இல்லை. நேட்டால் வெள்ளையருக்கு இவ்விதம் சகாயம் செய்து கொடுக்க வேண்டியது அவருடைய கடமையும் அன்று. மூன்று நான்கு ஆண்டுகளில் ஒவ்வோர் ஒப்பந்தத் தொழிலாளியும், அவர் மனைவியும் 16 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வோர் ஆண் மகனும் 13 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணும் இந்த வரியைச் செலுத்த வேண்டியவர்களாயினர். ஓரு தொழிலாளியின் சராசரி வருமானம் மாதத்திற்கு 14 ஷில்லிங்குக்கு மேல் இல்லை. அப்படியிருக்க கணவன், மனைவி, இரு குழந்தைகள் ஆகிய நான்கு பேரைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு 12 பவுன் வரி விதிப்பது என்பது அட்டூழியம். இந்த அநியாயத்தை உலகில் வேறு எங்குமே காண முடியாது.
இவ் வரியை எதிர்த்துத் தீவிரமாகக் கிளர்ச்சி செய்தோம். இவ்விஷயத்தில் நேட்டால் இந்தியர் காங்கிரஸ் சும்மா இருந்திருக்குமானால், 25 பவுன் வரியையும் வைசிராய் அங்கீகரித்திருப்பார். இவ்வரி 25 பவுனிலிருந்து 3 பவுனுக்குக் குறைக்கப்பட்டதற்குக் காங்கிரஸ் செய்த கிளர்ச்சி ஒன்றே காரணமாக இருந்திருக்கக் கூடும். ஆனால், நான் அவ்வாறு எண்ணுவது தவறாகவும் இருக்கலாம். காங்கிரஸின் எதிர்ப்பைக் கவனிக்காமலேயே இந்திய அரசாங்கம் ஆரம்பம் முதற்கொண்டே 25 பவுன் வரியை ஏற்க மறுத்து, அதை 3 பவுனுக்குக் குறைத்திருக்கவும் கூடும். அது எப்படி இருந்தாலும், இந்திய அரசாங்கத்தைப் பொறுத்த வரையில், இது நம்பிக்கைக் துரோகமாகும். இந்தியாவின் நலனைப் பாதுகாப்பதற்குப் பொறுப்பாளியான வைசிராய், மனிதத் தன்மையே இல்லாததான இந்த வரியை அங்கீகரித்திருக்கவே கூடாது.
அவ்வரி 25 பவுனிலிருந்து 3 பவுனாகக் குறைந்ததை, நான் அடைந்த பெரிய வெற்றி என்று காங்கிரஸ் கருதிக் கொள்ளுவதற்கில்லை. இந்திய ஒப்பந்தத் தொழிலாளியின் நலன்களை முற்றும் பாதுகாவாது போனதைக் குறித்து காங்கிரஸுக்கு வருத்தமே இருந்தது. அந்த வரி ரத்து செய்யப்பட்டுவிட வேண்டும் என்பதே எப்பொழுதும் காங்கிரஸின் உறுதியான கொள்கையாக இருந்து வந்தது. ஆனால், அந்தக் கொள்கை நிறைவேறுவதற்கு இருபது ஆண்டுகள் ஆயின. அப்படி அவ்வரி ரத்தானதற்கு, நேட்டால் இந்தியர் மாத்திரம் அல்லாமல், தென்னாப்பிரிக்க இந்தியர் எல்லாருமே சேர்ந்த பாடுபட்டதே காரணம். காலஞ் சென்ற ஸ்ரீ கோபாலகிருஷ்ணன கோகலேயிடம் கொடுத்திருந்த வாக்குறுதி மீறப்பட்டதன் காரணமாக, முடிவான ஒரு போராட்டத்தையே நடத்த வேண்டியதாயிற்று. அப்போராட்டத்தில் இந்திய ஒப்பந்தத் தொழிலாளர்கள் முழுப் பங்கும் எடுத்துக் கொண்டனர். அதிகாரிகள் சுட்டதனால், அவர்களில் சிலர் உயிரையும் இழந்தனர். பத்தாயிரத்திற்கு அதிகமானவர்கள் சிறைத் தண்டனையும் அனுபவித்தார்கள்.
ஆனால், முடிவில் சத்தியம் வெற்றி பெற்றது. இந்தியர் அனுபவித்த துன்பங்களில் அந்தச் சத்தியம் பிரதிபலித்தது என்றாலும், தளராத நம்பிக்கையும் மிகுந்த பொறுமையும், இடைவிடாத முயற்சியும் இல்லாதிருக்குமாயின் அது வெற்றி பெற்றிருக்க முடியாது. சமூகம், போராட்டத்தை நடத்தாமல் விட்டிருந்தால், காங்கிரஸ் கிளர்ச்சியைக் கை விட்டு, வரி தவிர்க்க முடியாத ஒன்று எனப் பணிந்து போயிருக்குமாயின், வெறுக்கப்பட்ட அந்த வரி இன்றளவும் வசூலிக்கப்பட்டு வந்திருக்கும் தென்னாப்பிரிக்க இந்தியருக்கும், இந்தியா முழுமைக்குமே அது நிரந்தரமான அவமானமாகவும் இருந்திருக்கும்.