பதிவு செய்த நாள்
01
அக்
2011
04:10
இந்திய சமூகத்தின் சேவையிலேயே நான் முற்றும் மூழ்கி இருந்தேன் என்றால், அதற்கு முக்கியமான காரணம், ஆத்மானு பூதியைப் பெற வேண்டும் என்பதில் நான் கொண்டிருந்த ஆர்வம் தான். சேவையின் மூலமே ஆண்டவனை அடைய முடியும் என்பதை அறிந்தேன். ஆகையால், சேவையையே என்னுடைய மதம் ஆக்கிக் கொண்டேன். என் அளவில் சேவையென்றால் அது இந்தியாவுக்குச் செய்யும் சேவையே. அதற்கான மன இசைவும் என்னிடம் இருந்தது. பிரயாணம் செய்ய வேண்டும் என்பதற்காகவும், எனக்குப் பிழைப்பைத் தேடிக் கொள்ளுவதற்காகவுமே நான் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றேன். ஆனால் நான் முன்னால் கூறியதைப் போல், ஞானமடையும் முயற்சியில் முனைந்திருப்பதையும் கண்டேன்.
எனக்கு இருந்த அறிவுப் பசியைக் கிறிஸ்தவ நண்பர்கள் இன்னும் அதிகக் கடுமையானதாக்கிவிட்டார்கள். அப் பசியோ தணியாப் பசியாகி விட்டது. நான் அசிரத்தையாக இருந்து விட விரும்பினாலும் அவர்கள் என்னைச் சும்மா விடவில்லை டர்பனில் உள்ள தென்னாப்பிரிக்கப் பொது மிஷின் தலைவரான ஸ்ரீ ஸ்பென்ஸர் வால்டன் என்னைக் கண்டு கொண்டார். நான் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனாகவே ஆகிவிட்டேன். பிரிட்டோரியாவில் கிறிஸ்தவர்களுடன் எனக்கு இருந்த தொடர்பே, இப்பழக்கத்திற்குக் காரணமாக இருந்தது என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஸ்ரீ வால்டனின் போக்கே அலாதியானது. கிறிஸ்தவ சமயத்தில் சேர்ந்து விடுமாறு எப்பொழுதாவது அவர் என்னை அழைத்ததாக எனக்கு நினைவேயில்லை. ஆனால், அவர் தமது வாழ்க்கையைத் திறந்த புத்தகம் போல் என் முன்பு வைத்து விட்டார். அவருடைய செயல்கள் யாவற்றையும் நான் காணும்படி செய்தார். ஸ்ரீமதி வால்டன், கண்ணியமுள்ள, திறமைசாலியான பெண்மணி. இத்தம்பதிகளின் போக்கு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எங்களுக்குள் இருந்த அடிப்படையான பேதங்களை நாங்கள் அறிவோம். எவ்வளவுதான் விவாதித்தாலும் அந்தப் பேதங்கள் மறையமாட்டா. என்றாலும், சகிப்புத் தன்மை தாராளம், உண்மை ஆகியவை இருக்குமிடத்தில் பேதங்களும் பயன் அளிப்பவையாகவே உள்ளன. வால்டன் தம்பதிகளின் அடக்கம், விடாமுயற்சி, உழைப்பில் ஈடுபாடு ஆகியவை எனக்குப் பிடித்திருந்தன. நாங்கள் அடிக்கடி சந்தித்து வந்தோம்.
இந்த நட்பு எனக்குச் சமய விஷயங்களில் தொடர்ந்து சிரத்தை இருந்து வரும்படி செய்தது. சமய சம்பந்தமான நூல்களைப் படிப்பதற்குப் பிரிட்டோரியாவில் எனக்கு இருந்து ஓய்வு இங்கே கிடைப்பதற்குச் சாத்தியமில்லை. என்றாலும் எனக்குக் கிடைக்கும் கொஞ்ச ஓய்வு நேரத்தையும் நல்வழியில் பயன்படுத்தி வந்தேன். சமய சம்பந்தமாக நான் தொடர்ந்து கடிதப் போக்குவரத்து நடத்தி வந்தேன். ராய்ச்சந்திரபாய் எனக்கு வழிகாட்டி வந்தார். நர்மதா சங்கர் எழுதிய, தரும விசாரணை என்ற நூலை ஒரு நண்பர் எனக்கு அனுப்பினார். அதன் முன்னுரை அதிக உதவியாக இருந்தது. இக்கவி, ஆரம்பத்தில் நடத்தி வந்த துன்மார்க்க வாழ்க்கையைக் குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன். சமய நூல்களின் ஆராய்ச்சியினால், தமது வாழ்க்கையில் ஏற்பட்ட புரட்சிகரமான மாறுதல்களைக் குறித்து, அவர் முன்னுரையில் விவாதித்திருந்தது என் மனத்தைக் கவர்ந்தது. அந்நூல் எனக்குப் பிரியமானதாக இருந்ததால் ஓர் எழுத்து விடாமல் அதைக் கவனமாகப் படித்தேன். மாக்ஸ் முல்லர் எழுதிய இந்தியா அது நமக்கு என்ன போதிக்க முடியும் ?" என்ற நூலையும் சிரத்தையுடன் படித்தேன். பிரம்மஞான சங்கத்தினர் வெளியிட்டிருந்த உபநிடதங்களின் மொழிப்பெயர்ப்பையும் படித்தேன். இவைகளினால் எல்லாம் ஹிந்து மதத்தினிடம் எனக்கு இருந்த மதிப்பு அதிகரித்தது. அதிலிருந்த அழகுகளையும் அதிகமாக உணரலானேன். என்றாலும், இதனால் மற்ற மதங்களின் மீது நான் துவேஷம் கொள்ளவில்லை. வாஷிங்டன் இர்விங் எழுதிய "முகமதுவும் அவருடைய சீடர்களும் என்ற புத்தகத்தையும் படித்தேன். முகம்மது நபியைக் குறித்துக் கார்லைல் எழுதிய புகழுரைகளையும் படித்தேன். இந் நூல்களெல்லாம் முகம்மதுவிடம் நான் கொண்டிருந்த மதிப்பை மேலும் அதிகப் படுத்தின. ஜாரதூஷ்டிரரின் திருவாக்குகள் என்ற நூலையும் படித்தேன்.
இவ்விதம் பல சமயங்களையும் பற்றிய அறிவு எனக்கு அதிகமாயிற்று. இந்த ஆராய்ச்சி, என் ஆன்ம பரிசோதனையை ஊக்குவித்தது. நான் படிப்பவைகளில் எவையெவை சிறந்தவைகள் என எனக்குத் தோன்றுகின்றனவோ, அவற்றை அனுஷ்டானத்தில் கொண்டு வரும் பழக்கமும் எனக்கு உண்டாயிற்று. இவ்விதம் ஹிந்து நூல்களில் யோகாப்பியாசத்தைக் குறித்து நான் படித்து புரிந்து கொண்ட மட்டில் யோக சாதன முறைகள் சிலவற்றைச் சாதகம் செய்யவும் முயன்றேன். ஆனால், இதில் நான் வெகுதூரம் முன்னேற முடியவில்லை. நான் இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு ஒரு நிபுணரின் உதவியைக் கொண்டு அதைப் பின்பற்றுவதென்று தீர்மானித்தேன். அந்த ஆசை நிறைவேறவே இல்லை. டால்ஸ்டாயின் நூல்களையும் அதிக் கவனத்துடன் படித்து வந்தேன். சுவிசேஷங்களின் சுருக்கம். செய்ய வேண்டியது யாது ? என்ற நூல்களும் மற்றவைகளும் என் மனத்தைக் கவர்ந்தன. பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றினிடமும் அன்பு செலுத்துவதற்கான எண்ணிறந்த வழிகளை மேலும் மேலும் உணரலானேன்.
அந்த சமயத்தில் மற்றொரு கிறிஸ்துவக் குடும்பத்துடனும் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் கூறிய யோசனையின் பேரில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வெஸ்லியின் கிறிஸ்தவாலயத்திற்குச் சென்று வந்தேன். இத் தினங்களில் தங்கள் வீட்டுக்குச் இரவுச் சாப்பாட்டுக்கு வரும்படியும் என்னை அவர்கள் அழைத்திருந்தார்கள். அக்கோயிலுக்குப் போய் வந்ததில் என் மனத்தில் திருப்தி உண்டாகவில்லை. அங்கே செய்யப்பட்ட உபதேசங்கள் பக்தி சிரத்தையை உண்டாக்குபவையாகத் தோன்றவில்லை. அங்கே வந்து கூடியிருந்தவர்களும் முக்கியமாகக் சமய சிரத்தையுடன் வந்திருந்ததாக எனக்குத் தோன்றவில்லை. அக்கூட்டம் பக்திமான்களின் கூட்டம் அன்று. உலகப் பற்றே அதிகமாக உள்ளவர்கள், பொழுது போக்குக்காகவும், பழக்கத்தை யொட்டியும் கோயிலுக்கு வந்திருப்பதாகவே தோன்றியது. அங்கே, சில சமயங்களில் என்னையும் அறியாமலேயே எனக்கு தூக்கம் வந்து விடுவது உண்டு. இது எனக்கு வெட்கமாக இருக்கும். ஆனால், என் பக்கத்தில் இருப்பவர்களில் சிலரும் அப்படித்தான் தூங்குகிறார்கள் என்பதைப் பார்த்ததும் என் வெட்கம் குறைந்து விடும். இப்படியே நான் நீண்டகாலம் கோயிலுக்குப் போய்க் கொண்டிருக்க முடியாது. ஆகவே கோயிலுக்குப் போவதைச் சீக்கிரத்தில் நிறுத்தி விட்டேன்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நான் போய்க் கொண்டிருந்த குடும்பத்துடன் தொடர்பு திடீரென்று முறிந்தது. உண்மையில் இனி வர வேண்டாம். என்று நான் எச்சரிக்கை செய்யப்பட்டேன் என்று சொல்லலாம். இது நிகழ்ந்த விதம் இதுதான். அந்த வீட்டு அம்மாள் நல்லவர், சூதுவாது இல்லாதவர், ஆனால், அவருக்குக் கொஞ்சம் குறுகிய புத்தியும் உண்டு. எப்பொழுதும் நாங்கள் சமய சம்பந்தமான விஷயங்களைக் குறித்து விவாதிப்போம். அச்சமயம் நான் அர்னால்டு எழுதிய ஆசிய ஜோதி என்ற நூலைப் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு சமயம் ஏசுநாதரின் வாழ்க்கையோடு புத்த பகவானின் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பேசலானோம். நான் சொன்னேன், புத்தரின் அபாரமான கருணையைப் பாருங்கள்! அக் கருணை, மனிதவர்க்கத்தோடு நின்றுவிடவில்லை, எல்லா ஜீவராசிகளிடத்திலும் அக் கருணை பரவியது. அவருடைய தோள்களில் ஆட்டுக்குட்டி ஆனந்தமாகப் படுத்துக் கொண்டிருந்ததை எண்ணும்போது நம் உள்ளத்தில் அன்பு வெள்ளம் பொங்குகிறதல்லவா ? இவ்விதம் எல்லா ஜீவராசிகளிடத்தும் அன்பு கொள்ளுவது என்பது ஏசுநாதரின் வாழ்க்கையில் காணப்படவில்லை. இவ்விதம் நான் ஒப்பிட்டுக் கூறியது அந்த நல்ல பெண்மணிக்கு மனவருத்தத்தை உண்டாக்கி விட்டது. அவருக்கு ஏற்பட்ட உணர்ச்சியை நான் அறிந்தேன். அப் பேச்சை நிறுத்தி விட்டேன். பிறகு சாப்பிடப் போனோம். ஐந்து வயது கூட ஆகாத அவருடைய ஆண் குழந்தையும் எங்களுடன் இருந்தான், குழந்தைகளின் நடுவில் இருக்கும்போது நான் அதிக ஆனந்தத்துடன் இருப்பேன், நீண்ட நாட்களாகவே அச்சிறுவனும் நானும் நண்பர்கள். சாப்பிடும் போது, அவன் தட்டில் இருந்த மாமிசத்தை இகழ்ச்சியாகவும், என் தட்டில் இருந்த ஆப்பிள் பழத்தைப் பெருமைப்படுத்தியும் பேசினேன். கள்ளங் கபடம் அற்ற அச்சிறுவன் என் பேச்சில் மயங்கி விட்டான். அவனும் ஆப்பிள் பழத்தின் பெருமையைப் பேச ஆரம்பித்து விட்டான்.
ஆனால், அவன் தாயாரோ அப்படியே திகைத்துப் போய்விட்டார். அது எனக்கு எச்சரிக்கையாக இருந்தது என் பேச்சை நிறுத்தி, வேறு விஷயத்தைக் குறித்து பேச ஆரம்பித்தேன். வழக்கம்போல் அடுத்த வாரம் அவ்வீட்டுக்குப் போனேன். நடுக்கத்தோடுதான் போனேன். அங்கே போகாமல் இருந்து விட வேண்டும் என்றும் எனக்குத் தோன்றவில்லை, அப்படியே போகாது நின்றுவிடுவது சரி என்றும் எனக்குப் படவில்லை. ஆனால் அந்த நல்ல பெண்மணி எனக்கு வழியை எளிதாக்கி விட்டார்.
அவர் கூறியதாவது, "ஸ்ரீ காந்தி ! உம்முடைய சகவாசம் என் பையனுக்கு நன்மையானதாகாது என்று நான் உங்களுக்குச் சொல்லிவிட வேண்டியிருக்கிறது. இப்படிச் சொல்ல நேர்ந்ததற்காகத் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். ஒவ்வொரு நாளும் அவன் மாமிசம் சாப்பிடத் தயங்குகிறான். உங்கள் வாதத்தை நினைவு படுத்தி பழமே வேண்டும் என்கிறான். காரியம் மிஞ்சி விட்டது அவன் மாமிசம் சாப்பிடுவதை விட்டுவிட்டால் அவன் நோயுறாவிட்டாலும் அவன் இளைத்தாவது போவான். இதை நான் எப்படி சகிப்பது? இனிமேல் உங்களுடைய வாதங்கள் எல்லாம் பெரியவர்களாகிய எங்களிடம் மட்டும் இருக்கட்டும் அந்த வாதங்களினால் குழந்தைகள் கெட்டுப் போவது நிச்சயம்."
நான் பின்வருமாறு பதில் சொன்னேன். "அம்மா ! நான் மிகவும் வருந்துகிறேன். எனக்கும் குழந்தைகள் இருக்கின்றன. ஆகையால் தாய் என்ற வகையில் உங்களுடைய உணர்ச்சிகளை நான் அறிகிறேன். இத்தகைய வருந்தத்தக்க நிலைமையை நாம் எளிதில் ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து விட முடியும் நான் வாயால் சொல்வதை விட நான் எதைச் சாப்பிடுகிறேன். எதைச் சாப்பிடாமல் ஒதுக்குகிறேன் என்பதைப் பார்ப்பது, குழந்தையின் மனத்தில் இன்னும் அதிக மாறுதல் உண்டாக்கிவிடக் கூடும். ஆகையால் சிறந்த வழி, நான் இங்கே வருவதை நிறுத்திக் கொள்ளுவதே. இது நிச்சயமாக நம் நட்பைப் பாதிக்க வேண்டியதே இல்லை." அந்தப் பெண்மணி உடனே பெரிய பாரம் நீங்கியதைப் போல், "உங்களுக்கு நன்றி" என்றார்.