ஒற்றுமை திருவிழா: மொகரம் பண்டிகையில் தீ மிதித்த இந்துக்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12அக் 2016 05:10
திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே முதுவன்திடலில் முஸ்லிம்களின் மொகரம் பண்டிகையில் இந்துக்கள் தீமிதி திருவிழா நடத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருப்புவனம் அருகே உள்ளது முதுவன்திடல். முற்றிலும் இந்துக்களே வசிக்கும் இக்கிராமத்தில் பாத்திமா பள்ளிவாசலை குலதெய்வமாக அனைத்து தரப்பினரும் வழிபடுகின்றனர். கிராமத்தில் உள்ள அனைத்து பணியையும் பள்ளிவாசலில் வணங்கிவிட்டு தான் தொடங்குகின்றனர். கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் முதுவன்திடலில் ஏராளமான முஸ்லிம்கள் வசித்துள்ளனர். பிழைப்பு தேடி பலரும் வெளியூர்களுக்கு சென்று விட்டனர். இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருந்த போது இரு சமூக பண்டிகைகளும் கொண்டாடப்பட்டுள்ளது. தற்போது முஸ்லிம்கள் வெளியேறிய போதும் இன்று வரை இந்த பண்டிகையை கடைபிடித்து இங்குள்ளவர்கள் வருகின்றனர். மொகரம் நாளுக்காக ஒரு வாரம் முன்பிருந்தே காப்பு கட்டி விரதமிருக்கின்றனர். மொகரம் நாளன்று அதிகாலை 3 மணிக்கு கண்மாயில் நீராடி மாலை அணிந்து பள்ளிவாசல் முன் உள்ள திடலில் தீக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். பெண்கள் பள்ளிவாசல் முன் முக்காடிட்டு தலைமீது தீ கங்குகளை வாரி போட்டு கொள்கின்றனர். இதன் மூலம் தங்களை நோய் நொடி அண்டாது என்பது நம்பிக்கை. அரை நூற்றாண்டை கடந்து இன்று வரை நடைபெறும் மொகரம் திருநாள் சுற்றுவட்டார பகுதிகளில் வரவேற்பை பெற்றுள்ளது.