பதிவு செய்த நாள்
01
அக்
2011
04:10
பிரிட்டிஷ் அரசியல் முறைகளிடம் எனக்கு இருந்த அவ்வளவு விசுவாசத்தைப்போல் வேறு யாருக்கும் இருந்ததாக நான் அறிந்ததில்லை. சத்தியத்தினிடம் எனக்கு இருந்த பற்றே இத்தகைய விசுவாசத்திற்கு அடிப்படையாக இருந்தது என்பதை நான் அப்பொழுது காண முடிந்தது. விசுவாசமோ, வேறு ஒரு நற்குணமோ என்னிடம் இருப்பதாக நடிப்பது என்பது மாத்திரம் என்னால் என்றுமே ஆகாது. நேட்டாலில் நான் போகும் ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் ராஜ வாழ்த்துக் கீதம் பாடப்படும். அதைப் பாடுவதில் நானும் கலந்துகொள்ள வேண்டும் என்று அப்பொழுது நான் எண்ணினேன். பிரிட்டிஷ் ஆட்சியில் இருக்கும் குறைகளை நான் அறியவில்லை என்பதல்ல. ஆனால் மொத்தத்தில் பார்த்தால் அந்த ஆட்சி, ஏற்றுக் கொள்ளக் கூடியதே என்று நினைத்தேன். பொதுவாக பிரிட்டிஷ் ஆட்சி ஆளப்படுவோருக்கு நன்மையானது என்றும் அந்த நாட்களில் நம்பினேன்.
தென்னாப்பிரிக்காவில் நிற வெறியைக் கண்டேன். ஆனால் அது பிரிட்டிஷ் பாரம்பரிய குணத்திற்கு மாறுபட்டது என்று கருதினேன். அது தற்காலிகமானது, தென்னாப்பிரிக்காவில் மாத்திரம் இருப்பது என்று நம்பினேன். ஆகையால், ஆங்கிலேயருடன் போட்டி போட்டுக் கொண்டு, மன்னரிடம் விசுவாசம் காட்டினேன். ராஜ வாழ்த்துக் கீதத்தின் மெட்டைக் கவனத்துடனும் விடாமுயற்சியுடனும் கற்றுக்கொண்டேன். அக்கீதம் பாடப்படும் போதெல்லாம் நானும் சேர்ந்து பாடி வந்தேன். ஆர்ப்பட்டாமும் வெளிப்பகட்டும் இல்லாமல் ராஜவிசுவாசத்தைத் தெரிவிக்கும் சமயம் வந்தபோதெல்லாம் அதில் நானும் தயங்காது பங்குகொண்டேன்.
இந்த விசுவாசத்தை என் வாழ்க்கையில் என்றுமே நான் பயன்படுத்திக் கொண்டதில்லை. அதைக் கொண்டு சுயலாபத்தை அடைவதற்கு நான் என்றும் நாடியதும் இல்லை. விசுவாசம் காட்ட வேண்டியது என் அளவில் ஒரு கடமையாக இருந்தது. வெகுமதி எதையும் எதிர்பாராமல் அதை நான் காட்டி வந்தேன். நான் இந்தியாவுக்கு வந்தபோது, விக்டோரியா மகாராணியின் வைர விழாவைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. ராஜ்கோட்டில் இதற்காக அமைக்கப்பட்டிருந்த கமிட்டியில் சேருமாறு என்னை அழைத்தார்கள். அழைப்பை ஏற்றுக்கொண்டேன். ஆனால், கொண்டாட்டம் பெரும்பாலும் பகட்டாக இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. வெளிவேஷமாகவே காரியங்கள் நடந்ததைக்கண்டு, மனவருத்தம் அடைந்தேன். கமிட்டியில் நான் இருக்க வேண்டுமா ? என்று என்னை நானே கேட்டுக்கொள்ள ஆரம்பித்தேன். ஆனால், முடிவாக நான் செய்ய வேண்டியதைச் செய்து கொண்டுபோவது என்று தீர்மானித்துக்கொண்டேன்.
விழாவை ஒட்டிச் செய்யப்பட்ட யோசனைகளில் ஒன்று, மரம் நடுவது என்பது, அநேகர் இதைப் பகட்டுக்காகவும் அதிகாரிகளைத் திருப்தி செய்ய வேண்டும் என்பதற்காகவும் செய்ததைக் கண்டேன். மரம் நடுவது, கட்டாயமானது அல்ல என்றும், அது ஒரு யோசனையே என்றும் அவர்களிடம் நான் எவ்வளவோ வாதாடிப் பார்த்தேன். செய்வதானால் சரியாகச் செய்ய வேண்டும், இல்லா விட்டால் சும்மா இருந்து விட வேண்டும். என் கருத்தைக் கேட்டு அவர்கள் நகைத்தார்கள் என்றே எனக்கு ஞாபகம். என் பங்குக்கு ஏற்பட்ட மரத்தை நான் உண்மையான சிரத்தையுடனேயே நட்டு, ஜாக்கிரதையாகத் தண்ணீர் ஊற்றியும் வளர்த்தேன் என்பது எனக்;கு நினைவு இருக்கிறது.
அதேபோல என் குடும்பத்தில் இருந்த குழந்தைகளுக்கு ராஜ வாழ்த்துக் கீதம் பாடக்கற்றுக் கொடுத்தேன். உள்ளூர்ப் போதனாமுறைக் கல்லூரி மாணவர்களுக்கும் அதை நான் சொல்லிக் கொடுத்தது நினைவிருக்கிறது. ஆனால் அப்படி நான் சொல்லிக் கொடுத்தது ஜுபிளி சமயத்திலா அல்லது இந்தியாவின் சக்கரவர்த்தியாக ஏழாம் எட்வர்டுக்கு முடி சூட்டு விழா நடந்தபோதா என்பது எனக்கு ஞாபகம் இல்லை. பிற்காலத்தில் அப் பாடலின் அடிகள் எனக்கு அருவருப்பை உண்டாக்கின. அகிம்சையைப் பற்றிய என் எண்ணங்கள் வளர்ச்சியடையவே, நான் எண்ணுவதிலும் பேசுவதிலும் அதிக எச்சரிக்கையுடன் இருக்க ஆரம்பித்தேன்.
"அவள் விரோதிகளைச் சிதறடித்து
அவர்கள் வீழ்ச்சியடையச் செய்யும்,
அவர்களது ராஜ்யம் குழப்பமடைந்து
வஞ்சகமான அவர்கள் தந்திரங்கள் நிறைவேறாது செய்யும்."
முக்கியமாக அந்தக் கீதத்தின் மேற்கண்ட வரிகளே அகிம்சையைப்பற்றி என் உணர்ச்சிக்கு முரணாக இருந்தன. என் அபிப்பிராயத்தை டாக்டர் பூத்திடம் தெரிவித்தேன். அகிம்சையில் நம்பிக்கையுள்ள ஒருவர், அந்த வரிகளைப் பாடுவது சரியல்ல என்பதை அவரும் ஓப்புக் கொண்டார். விரோதிகள் என்று சொல்லப்படுகிறவர்கள், வஞ்சகர்களாகவும் இருப்பார்கள் என்று நாம் எப்படி எண்ணிக் கொள்ளுவது ? விரோதிகள் என்பதால் அவர்கள் கட்டாயம் தவறு செய்பவர்களாகவும் இருக்க வேண்டுமா ? ஆண்டவனிடமிருந்து நாம் நீதியையே கேட்கலாம். டாக்டர் பூத் என் உணர்ச்சிகளைப் பூரணமாக அங்கீகரித்தார். தமது பிரார்த்தனைக் கூட்டத்திற்கு என்று புதியதொரு ராஜ வாழ்த்துக்கீதத்தையும் இயற்றினார். டாக்டர் பூத்தைக் குறித்து மேற்கொண்டு பிறகு கவனிப்போம்.
ராஜவிசுவாசத்தைப் போலவே, நோயுற்றிருப்போருக்குப் பணிவிடை செய்யவேண்டும் என்ற ஆர்வமும் என் சுபாவத்திலேயே ஆழ வேர்விட்டிருந்தது. நண்பர்களாக இருக்கட்டும், முன் பின் தெரியாதவர்களாக இருக்கட்டும், பிறருக்குப் பணிவிடை செய்வதில் எனக்கு ஆசை அதிகம். தென்னாப்பிரிக்க இந்தியர் சம்பந்தமான துண்டுப் பிரசுர வேலையில் நான் ராஜ்கோட்டில் தீவிரமாக ஈடுபட்டிருந்த சமயம், பம்பாய்க்கு உடனே போய்த் திரும்ப வேண்டிய சந்தர்ப்பம் நேரிட்டது. தென்னாப்பிரிக்க இந்தியர் விஷயமாக நகரங்களில் பொதுகூட்டங்களை நடத்திப் பொதுமக்கள் அந்த நிலைமையை அறியும்படி செய்யவேண்டும் என்பது என் நோக்கம். இதற்கு முதல் நகரமாகப் பம்பாயைத் தேர்ந்தெடுத்தேன். முதலில் நீதிபதி ரானடேயைச் சந்தித்தேன். நான் சொன்னதை அவர் கவனமாகக் கேட்டுக்கொண்டார். ஸர் பிரோஸ்ஷா மேத்தாவைச் சந்திக்குமாறு கூறினார். அடுத்தபடியாக நான் சந்தித்த நீதிபதியான பத்ருதீன் தயாப்ஜியும் அதே யோசனைதான் கூறினார். "நீதிபதி ரானடேயும் நானும் உங்களுக்கு அதிகமாக எந்த உதவியும் செய்வதற்கு இல்லை. எங்கள் நிலைமையை நீங்கள் அறிவீர்கள். பொது விஷயங்களில் நாங்கள் தீவிரப் பங்கு எடுத்துக்கொள்ளுவதற்கில்லை. ஆனால், எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு. உங்களுக்குச் சரியானபடி வழிகாட்டக் கூடியவர், ஸர் பிரோஸ்ஷா மேத்தாவே" என்றார்.
நிச்சயமாக நானும் ஸர் பிரோஸ்ஷா மேத்தாவைப் பார்க்க வேண்டும் என்றுதான் இருந்தேன். அவர் யோசனைப்படி நடந்து கொள்ளுமாறு இப் பெரியவர்கள் எனக்குப் புத்திமதி கூறியது, பொதுமக்களிடைய சூஸர் பிரோஸ்ஷாவுக்கு இருந்த மகத்தான செல்வாக்கை நான் நன்றாக அறிந்துகொள்ளும்படி செய்தது. பிறகு அவரிடம் சென்றேன். அவர் முன்னிலையில் பயத்தால் திகைத்து நின்றுவிட நான் தயாராக இருந்தேன். பொதுமக்கள் அவருக்குக் கொடுத்திருந்த பட்டங்களைக் கேள்விப் பட்டிருக்கிறேன். பம்பாயின் சிங்கத்தை மாகாணத்தின் முடி சூடா மன்னரை நான் பார்க்க வேண்டியிருக்கிறது என்பதையும் அறிவேன். ஆனால், மன்னர் முன்னெச்சரிக்கையுடன் என்னை அடக்கிவிடவில்லை. அன்புமிக்க ஒரு தந்தை, தம்முடைய வயது வந்த மகனை எவ்விதம் சந்திப்பாரோ அவ்வாறே என்னை அவர் சந்தித்தார். நான் அவரைச் சந்தித்தது, ஹைகோர்ட்டில் அவர் காரியாலயத்தில். பல நண்பர்களும் சீடர்களும் அவரைச் சூழ்ந்து கொண்டிருந்தனர். ஸ்ரீ டி.ஈ. வாச்சாவும் ஸ்ரீ காமாவும் அங்கே இருந்தனர். ஸர் பிரோஸ்ஷா மேத்தா, அவர்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார். ஸ்ரீ வாச்சாவைக் குறித்து முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன். ஸர் பிரஸ்ஷாவுக்கு அவர் வலக்கரம் போன்றவர் என்று கருதப்பட்டு வந்தார். புள்ளி விவரங்களில் அவர் பெரிய நிபுணர் என்று ஸ்ரீ வீரசந்திர காந்தி எனக்குச் சொல்லியிருக்கிறார். "காந்தி, நாம் திரும்பவும் சந்திக்க வேண்டும்" என்றார் ஸ்ரீ வாச்சா.
இவ்விதம் அறிமுகம் செய்துவைத்ததெல்லாம் இரண்டே நிமிஷங்களில் முடிந்து விட்டது. நான் கூறியதையெல்லாம் ஸர் பிரோஸ்ஷா கவனமாகக் கேட்டுக்கொண்டார். நீதிபதிகள் ரானடேயையும் தயாப்ஜியையும் நான் பார்த்தேன் என்றும் சொன்னேன். "காந்தி, உமக்கு நான் உதவி செய்தாக வேண்டும் என்பதைக் காண்கிறேன். இங்கே நான் ஒரு பொதுக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று சொல்லிவிட்டுத் தம் காரியதரிசி ஸ்ரீ முன்ஷியைப் பார்த்து, கூட்டத்திற்குத்தேதியை நிச்சயிக்கும்படி கூறினார். தேதியும் முடிவாயிற்று. பொதுக்கூட்டத்திற்கு முதல் நாள், தம்மை வந்து பார்க்கும் படி கூறி, எனக்கு அவர் விடை கொடுத்து அனுப்பினார். இந்தச் சந்திப்பு அவரிடம் எனக்கிருந்த பயத்தைப் போக்கிவிட்டது. குதூகலத்துடன் வீடு திரும்பினேன்.
இச்சமயம் பம்பாயில் இருந்தபோது அங்கே நோயுற்றிருந்த என் மைத்துனரைப் பாரக்கப் போனேன். அவர் வசதியுடையவர் அல்ல. என் சகோதரி ( அவர் மனைவி ) யாலும் அவருக்குப் பணிவிடை செய்யமுடியவில்லை. நோயோ கடுமையானது. அவரை ராஜ்கோட்டுக்கு அழைத்துக் கொண்டு போய்விடுவதாகக் கூறினேன். அவரும் ஒப்புக் கொண்டார். எனவே என் சகோதரியுடனும் அவர் கணவரோடும் நான் வீடு திரும்பினேன். நான் எதிர்ப்பார்த்ததைவிட அவருடைய நோய் அதிக நாள் நீடித்திருந்தது. என் மைத்துனரை என் அறையில் தங்கச் செய்து. இரவும் பகலும் அவருடனேயே இருந்தேன். இரவில் பாதி நேரம் நான் விழித்திருக்க வேண்டியிருந்தது. அவருக்குப் பணிவிடை செய்து கொண்டே என் தென்னாப்பிரிக்க வேலைகள் சிலவற்றையும் நான் செய்ய வேண்டியிருந்தது. முடிவாக நோயாளி இறந்து விட்டார். ஆனால், அவருடைய கடைசி நாட்களில் அவருக்குப் பணிவிடை செய்யும் வாய்ப்புக் கிடைத்தது, எனக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது.
நோயாளிகளுக்குப் பணிவிடை செய்வதில் எனக்கு இருந்த விருப்பு, நாளாவட்டத்தில் அடங்காத அவாவாக வளர்ந்து விட்டது. இதன் பலனாக நான் என்னுடைய மற்ற வேலைகளைப் பல சமயங்களில் சரிவரக் கவனிப்பதில்லை. சில சமயம் இவ்விதம் பணிவிடை செய்வதில் என் மனைவிக்கும் வேலை கொடுத்து, வீட்டிலிருந்த எல்லோரையும் அவ் வேலையில் ஈடுபடுத்திவிடுவேன். ஒருவர் இத்தகைய சேவையைச் செய்வதில் இன்பம் கொண்டாலன்றி இதைச் செய்வதில் அர்த்தமே இல்லை வெளிப்பகட்டுக்காகவோ, பொதுஜன அபிப்பிராயத்திற்குப் பயந்தோ இதைச் செய்வதாயின், அப்படிச் செய்பவரின் ஆன்ம வளர்ச்சியை அது குன்றச் செய்து, உணர்ச்சியையும நசுக்கி விடுகிறது. சந்தோஷம் இல்லாமல் செய்யும் சேவையினால் செய்கிறவருக்கும் நன்மை இல்லை, சேவை பெறுகிறவருக்கும் நன்மை இல்லை. மகிழ்ந்து செய்யும் சேவையுடன் ஒப்பிட்டால், மற்றெல்லா இன்பங்களும் உடைமைகளும் பயனற்றவை என்ற வகையில் மங்கிப் போகின்றன.