பதிவு செய்த நாள்
01
அக்
2011
04:10
என் மைத்துனர் இறந்த அன்றே பொதுக் கூட்டத்திற்காக நான் பம்பாய் போக வேண்டியிருந்தது. நான் அங்கே செய்ய வேண்டிய பிரசங்கத்தைக் குறித்துச் சிந்திக்கக்கூட எனக்கு அவகாசம் இல்லை. இரவும் பகலும் கவலையுடன் விழித்திருக்க நேர்ந்ததால், நான் களைத்துப் போனேன். தொண்டையும் கம்மிப் போயிருந்தது. என்றாலும், கடவுளிடமே முழு நம்பிக்கையையும் வைத்து, நான் பம்பாய்க்குப் போனேன். என் பிரசங்கத்தை முன்னாலேயே எழுத வேண்டியிருக்கும் என்று நான் கனவிலும் எண்ணவில்லை.
ஸர் பிரோஸ்ஷா கூறியிருந்தபடி, பொதுக் கூட்டம் நடப்பதற்கு முதல் நாள் மாலை 5 மணிக்கு, அவர் காரியாலயத்திற்குப் போனேன். "காந்தி, உமது பிரசங்கம் தயாராக இருக்கிறதா ?" என்று அவர் என்னைக் கேட்டார். "இல்லை, ஐயா, ஞாபகத்தில் இருந்தே கூட்டத்தில் பேசிவிடலாம் என்று இருக்கிறேன்" என்று நான் நடுங்கிக் கொண்டே சொன்னேன். "பம்பாயில் அது சரிப்பட்டது. இங்கே நிருபர்கள் பத்திரிக்கைக்குச் செய்தி அனுப்புவது மோசமாக இருக்கிறது. இந்தக் கூட்டத்தினால் நாம் பயனடைய வேண்டுமாயின், உமது பிரசங்கத்தை நீர் எழுதி விட வேண்டும். அதோடு நாளை விடிவதற்குள் அதை அச்சிட்டும் விட வேண்டும். இதைச் செய்துவிட உம்மால் முடியும் என்றே நம்புகிறேன்" என்றார்.
எனக்கு ஒரே நடுக்கம் எடுத்துவிட்டது என்றாலும் முயல்வதாகச் சொன்னேன். "அப்படியானால், கையெழுத்துப் பிரதியை வாங்கிக் கொள்ள ஸ்ரீ முன்ஷி உம்மிடம் எந்த நேரத்திற்கு வர வேண்டும்" என்பதைச் சொல்லும் என்றார். இரவு பதினொரு மணிக்கு என்றேன். அடுத்த நாள் கூட்டத்திற்குப் போனதும், ஸர் பிரோஸ்ஷா கூறிய யோசனை, எவ்வளவு புத்திசாலித்தனமானது என்பதைக் கண்டு கொண்டேன். ஸர் கோவாஸ்ஜி ஜஹாங்கீர் இன்ஸ்டிடியூட் மண்டபத்தில் பொதுகூட்டம் நடந்தது. ஒரு கூட்டத்தில் ஸர் பிரோஸ்ஷா மேத்தா பேசுகிறார் என்றால் எப்பொழுதுமே மண்டபம் நிறைந்துவிடும். அவர் பிரசங்கத்தைக் கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தில், முக்கியமாக மாணவர்கள், எள் விழவும் இடமின்றி வந்து கூடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். என் அனுபவத்தில் அப்படிப்பட்ட முதல் கூட்டம் இதுதான் நான் பேசுவது, சிலருக்கு மாத்திரமே கேட்கும் என்பதைக் கண்டேன். என் பிரசங்கத்தைப் படிக்க ஆரம்பித்ததுமே என் உடம்பெல்லாம் நடுங்கிற்று. உரக்க, இன்னும் கொஞ்சம் உரக்கப் பேசும்படி கூறி ஸர் பிரோஸ்ஷா தொடர்ந்து என்னை உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார். அது என்னை உற்சாகப் படுத்துவதற்குப் பதிலாக, என் தொனி மேலும் மேலும் குறைந்து கொண்டு போகும்படியே செய்தது என்பது என் ஞாபகம்.
எனது பழைய நண்பர் கேசவரால் தேஷ்பாண்டே என்னைக் காப்பாற்ற வந்தார். என் பிரசங்கத்தை அவர் கையில் கொடுத்து விட்டேன். அவர் பேச்சுத் தொனிதான் ஏற்ற தொனி. ஆனால் கூடியிருந்தவர்களோ, அவர் பேச்சைக் கேட்க மறுத்துவிட்டனர். "வாச்சா" "வாச்சா" என்ற முழக்கம் எங்கும் எழுந்தது. ஆகவே, ஸ்ரீ வாச்சா எழுந்து என் பிரசங்கத்தைப் படித்தார். அற்புதமான பலனும் ஏற்பட்டது. கூட்டத்தில் இருந்தவர்கள் முற்றும் அமைதியோடு இருந்து, பிரசங்கத்தைக் கேட்டார்கள். அவசியமான இடங்களில் கரகோஷமும், வெட்கம் என்ற முழக்கமும் செய்தார்கள். இது என் உள்ளத்துக்குக் குதூகலம் அளித்தது. பிரசங்கம் ஸர் பிரேஸ்ஷாவுக்குப் பிடித்திருந்தது. நான் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன்.
ஸ்ரீ தேஷ்பாண்டே, ஒரு பார்ஸி நண்பர் ஆகியவர்களின் ஆதரவை இக்கூட்டம் எனக்குத் தேடித் தந்தது. அந்தப் பார்ஸி நண்பர் இன்று உயர்தர அரசாங்க அதிகாரியாக இருப்பதால் அவர் பெயரைக் கூற நான் தயங்குகிறேன். இருவரும் என்னுடன் தென்னாப்பிரிக்காவுக்கு வர முடிவு செய்து இருப்பதாக என்னிடம் தெரிவித்தனர். அப்போது ஸ்மால் காஸ் கோர்ட்டு நீதிபதியாக இருந்த ஸ்ரீ சி. எம். குர்ஸேத்ஜி, அந்தப் பார்ஸி நண்பர்க்குக் கல்யாணம் செய்துவிடத் திட்டம் போட்டிருந்தார். ஆகவே, அவர் பார்ஸி நண்பரைத் தமது தீர்மானத்தை மாற்றி கொள்ளும்படி செய்துவிட்டார். கல்யாணமா தென்ஆப்பிரிக்காவுக்கு போவதா? இந்த இரண்டில் ஒன்றை அவர் தீர்மானிக்க வேண்டியதாயிற்று. அவர் கல்யாணத்தையே ஏற்றுக் கொண்டார். ஆனால் இவ்விதம் அவர் தீர்மானத்தைக் கைவிட்டதற்காக, பிற்காலத்தில் அச்சமூகத்தைச் சேர்ந்த பார்ஸி ருஸ்தம்ஜி பரிகாரம் செய்துவிட்டார். அநேகப் பார்ஸிப் பெணகள், கதர் வேலைக்குத் தங்களை அர்ப்பணம் செய்து கொண்டதன் மூலம், அந்தப் பார்ஸி நண்பர் உறுதியை மீறுவதற்குக் காரணமாக இருந்த, அவர் மனைவிக்காகப் பரிகாரம் செய்து விட்டனர். ஆகையால், அத் தம்பதிகளுக்குச் சந்தோஷமாக நான் மன்னிப்பு அளித்து விட்டேன். ஸ்ரீ தேஷ்பாண்டேக்குக் கல்யாண ஆசை எதுவும் இல்லை என்றாலும் அவராலும் வர முடியவில்லை. அவர் அப்பொழுது தம் வாக்குறுதியை மீறியதற்கு, இப்பொழுது தக்க பிராயச்சித்தங்களைச் செய்து கொண்டு வருகிறார். நான் தென்னப்பிரிக்காவிற்குத் திரும்பிப்போன போது ஜான்ஸிபாரில் தயாப்ஜி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரைச் சந்தித்தேன். என்னுடன் வந்து, எனக்கு உதவி செய்வதாக அவரும் வாக்களித்தார். ஆனால் அவர் வரவே இல்லை. அந்தக் குற்றத்திற்கு ஸ்ரீ அப்பால் தயாப்ஜி இப்பொழுது பரிகாரம் தேடி வருகிறார். இவ்விதம் சில பாரிஸ்டர்கள் தென்னாப்பிரிக்காவுக்குப் போகும்படி செய்ய நான் செய்த மூன்று முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை.
இது சம்பந்தமாக ஸ்ரீ பேஸ்தன்ஜி பாத்ஷாவின் நினைவு எனக்கு இருக்கிறது. நான் இங்கிலாந்தில் இருந்த காலம் முதற்கொண்டு அவரிடம் நட்புடன் இருந்தேன். லண்டனில் ஒரு சைவ உணவு விடுதியில் அவரை முதன் முதலில் சந்தித்தேன். அவருடைய சகோதரர் ஸ்ரீ பர்ஜோர்ஜி பாத்ஷா ஒரு கிறுக்கர் என்று பெயர் பெற்றிருந்ததைக் கொண்டு, அவரைக் குறித்தும் எனக்குத் தெரியும். நான் அவரைப் பார்த்ததே இல்லை. அவர் விசித்திரப் போக்குடையவர் என்று நண்பர்கள் சொன்னார்கள். குதிரைகளிடம் இரக்கப்பட்டு அவர் ( குதிரை பூட்டிய ) டிராம் வண்டிகளில் ஏறுவதில்லை. அவருக்கு ஞாபக சக்தி அபாரமாக இருந்தும், பரீட்சை எழுதிப் பட்டங்களைப் பெற மறுத்து விட்டார். சுயேச்சையான மனப் போக்கை வளர்த்துக் கொண்டிருந்தார். பார்ஸி வகுப்பினராக இருந்தும் அவர் சைவ உணவே சாப்பிடுவார். பேஸ்தன்ஜிக்கு இத்தகைய கியாதி இல்லை. ஆனால் அவரது புலமைக்கு லண்டனிலும் பிரபல்யம் இருந்தது. எங்கள் இருவருக்கும் இருந்த ஒற்றுமை சைவ உணவில்தான். புலமையில் அவரை நெருங்குவதென்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது.
அவரை நான் பம்பாயில் மீண்டும் சந்தித்தேன். அவர் ஹைகோர்ட்டின் பிரதம குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்தார். நான் அவரைச் சந்தித்தபோது, அவர் உயர்தரக் குஜராத்தி அகராதி ஒன்று தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். என் தென்னாப்பிரிக்க வேலையில் எனக்கு உதவி செய்யுமாறு நான் கேட்காத நண்பர் இல்லை. பேஸ்தன்ஜி பாத்ஷா எனக்கு உதவி செய்ய மறுத்த தோடல்லாமல், இனி தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்ப வேண்டாம் என்று எனக்குப் புத்திமதியும் சொன்னார்.
அவர் கூறியதாவது "உமக்கு உதவி செய்வது சாத்தியமில்லை. நீர் தென்னாப்பிரிக்காவுக்குப் போவது என்பது கூட எனக்குப் பிடிக்கவில்லை. செய்வதற்கு நம் நாட்டில் வேலையே இல்லையா ? இப்பொழுது பாரும், நம் மொழிக்குச் செய்ய வேண்டியதே எவ்வளவோ இருக்கிறது. விஞ்ஞானச் சொற்களை நம் மொழியில் நான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. ஆனால், செய்ய வேண்டியிருக்கும் வேலையில் இது ஒரு சிறு பகுதியே, நாட்டில் இருக்கும் வறுமையை எண்ணிப்பாரும்."
"தென்னாப்பிரிக்காவில் இருக்கும் நம் மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் உம்மைப்போன்ற ஒருவர் அந்த வேலைக்காகப் பலியிடப்படுவதை நான் விரும்பவில்லை. முதலில் இங்கே சுயாட்சியைப் பெறுவோம். அதனால் அங்கிருக்கும் நம்மவர்களுக்குக் தானே உதவி செய்தவர்கள் ஆவோம். உம் மனத்தை மாற்ற என்னால் ஆகாது என்பதை அறிவேன். என்றாலும் உம்மைப் போன்றவர்கள் யாரும் உம்முடன் சேர்ந்து உம்மைப் போல் ஆகிவிடுவதற்கு உற்சாகம் ஊட்டமாட்டேன்."
இந்தப் புத்திமதி எனக்குப் பிடிக்கவில்லை. ஆயினும் ஸ்ரீ பேஸ்தன்ஜி பாத்ஷா மீது நான் கொண்டிருந்த மதிப்பை இது அதிகமாக்கியது. நாட்டினிடமும் தாய் மொழியினிடமும் அவர் கொண்டிருந்த பக்தி என் மனத்தைக் கவர்ந்தது. இச் சம்பவம் எங்களை இன்னும் அதிகமாக நெருங்கிப் பழகும்படி செய்தது. என்றாலும் தென்னாப்பிரிக்காவில் எனக்கு இருந்த பணியை நான் விடுவதற்குப் பதிலாக என்னுடைய தீர்மானத்தில் நான் அதிக உறுதி கொள்ளலானேன். தாய்நாட்டிற்குச் செய்ய வேண்டிய வேலையின் எப்பகுதியையும் தேசபக்தி உள்ள ஒருவர் அலட்சியம் செய்துவிட முடியாது. எனக்கோ கீதையின் வாசகம் மிகத் தெளிவாகவும் கண்டிப்பாகவும் இருந்தது, நன்றாக அனுஷ்டிக்கப்பட்ட பிறருடைய தருமத்தைவிட, குணமற்ற தனது தருமமே சிறந்ததாகும். தனது தருமத்தை நிறைவேற்றும் போது இறப்பது சிறந்தது. பிறர் தருமம் பயத்தைக் கொடுப்பதாகும்.