பதிவு செய்த நாள்
01
அக்
2011
04:10
சென்னையிலிருந்து கல்கத்தாவுக்குப் போனேன். அங்கே சங்கடங்கள் என்னைச் சூழ்ந்துகொண்டன. யாரையுமே அங்கே எனக்குத் தெரியாது. ஆகவே கிரேட் ஈஸ்டர்ன் ஹோட்டலில் ஓர் அறையை அமர்த்திக் கொண்டேன். டெயிலி டெலிகிராப் பத்திரிகையின் பிரதிநிதியுடன் அங்கே எனக்குப் பழக்கம் உண்டாயிற்று. தாம் தங்கியிருந்த ஐரோப்பியரின் பெங்கால் கிளப்புக்கு என்னை அழைத்தார். அந்தக் கிளப்பின் பிரதான அறைக்கு இந்தியர் எவரையும் அழைத்துக் கொண்டு போகக்கூடாது என்பது அவருக்குத் தெரியாது. இவ்விதத் தடை இருப்பதை அவர் கண்டு கொண்டதும், தம் அறைக்கு என்னை அழைத்துச் சென்றார். கல்கத்தாவில் இருக்கும் ஆங்கிலேயர், இத்தகைய துவேஷம் காட்டி வருவதைக்குறித்துத் தமது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார். பிரதான அறைக்கு என்னை அழைத்துக் கொண்டு போக முடியாது போய் விட்டதற்கு என்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
வங்காளத்தின் தெய்வம் என்று வழங்கப்பட்டு வந்த சுரேந்திரநாத் பானர்ஜியை நான் பார்க்க விரும்பினேன். அவரைச் சந்தித்தேன். பல நண்பர்கள் அவரைச் சூழ்ந்துக் கொண்டிருந்தனர் அவர் கூறியதாவது. "உங்கள் வேலையில் மக்கள் சிரத்தை எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றே அஞ்சுகிறேன் இங்கே எங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் கொஞ்சம் அல்ல என்பதை நீங்களும் அறிவீர்கள் என்றாலும், உங்களால் முடிந்த வரையில் நீங்கள முயலவே வேண்டும். மகாராஜாக்களின் ஆதரவை நீங்கள் தேடிக் கொள்ள வேண்டும் பிரிட்டிஷ் இந்தியர் சங்கப் பிரதிநிதிகளைச் சந்திக்கத் தவறிவிடாதீர்கள். ராசா ஸர் பியாரி மோகம் முகர்ஜியையும் மகாராஜா டாகுரையும் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டும். அவர்கள் இருவரும் தாராள மனம் படைத்தவர்கள், பொது வேலையில் அவர்களுக்கு நல்ல ஈடுபாடு உண்டு."
அந்தக் கனவான்களையும் பார்த்தேன். ஆனால், ஒன்றும் பயன் இல்லை. அவர்கள் என்னைச் சரியாக ஏற்றுப் பேசக்கூட இல்லை. கல்கத்தாவில் பொதுக்கூட்டம் நடத்துவது என்பது எளிதான காரியமே அல்ல என்றார்கள். ஏதாவது செய்ய முடியும் என்றால் அது நடப்பது முக்கியமாகச் சுரேந்திரநாத் பானர்ஜியையே பொறுத்தது என்றும் கூறினர். என் வேலை வர வர அதிகக் கஷ்டமாகிக்கொண்டு வருவதைக் கண்டேன். அமிர்த பஜார் பத்திரிகையின் காரியாலயத்திற்குப் போனேன். அங்கே நான் சந்தித்த ஆசிரியக் கனவான். நான் ஊர் சுற்றித் திரியும் பேர்வழி என்று எண்ணிக்கொண்டு என்னிடம் ஒன்றும் பேசாமலே என்னைப் போகச் சொல்லிவிட்டார். வங்கவாசி பத்திரிகையோ இன்னும் கொஞ்சம் அதிகமாகப் போய்விட்டது. அதன் ஆசிரியர் என்னை ஒரு மணி நேரம் காக்க வைத்தார். அவரைக் கண்டு பேசப் பலர் வந்திருந்தார்கள். ஆனால், மற்றவர்களலெ;லாம் பேசிவிட்டுப்போன பின்புகூட என்னைக் கண்ணெடுத்துப் பார்க்க அவருக்குத் தயவு பிறக்கவில்லை. நீண்ட நேரம் காத்துக்கொண்டிருந்த பிறகு அவரைப் பார்த்து, என் விஷயத்தைச் சொல்ல ஆரம்பித்தேன்.
உடனே அவர் "ங்களுக்கு வேலை தலைக்கு மேல் இருக்கிறது என்பதை நீர் பார்க்கவில்லையா ? உம்மைப்போல் உண்டு பேச வருகிறவர்களின் தொகைக்கு முடிவே இல்லை. நீர் போய்விடுவதே மேல் நீர் சொல்வதைக் கேட்க எனக்கு இப்பொழுது சௌகரியப்படாது" என்றார். நான் அவமதிக்கப்படுவதாக ஒரு கணம் எண்ணினேன். ஆனால் உடனே ஆசிரியரின் நிலைமையையும் புரிந்து கொண்டேன். வங்கவாசியின் புகழைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆசிரியரைப் பார்க்க ஓயாமல் பலர் வந்து கொண்டே இருக்கிறார்கள் என்பதையும் இப்போது பார்த்தேன். அவர்கள் எல்லாம் அவருக்குப் பழக்கமானவர்கள். அவருக்கு தம் பத்திரிகையில் எழுதுவதற்கு விஷயங்களுக்கும் பஞ்சம் இல்லை. தென்னாப்பிரிக்கா விஷயமோ அச்சமயம் இங்கே அவ்வளவு நன்றாகத் தெரியாத சங்கதி.
எந்தக் குறையினால் ஒருவன் கஷ்டப்படுகிறானோ அவனுக்கு அக்குறையே பெரிது என்று தோன்றும். ஆசிரியரின் காரியாலயத்திற்குப் படையெடுத்து வரும் அநேகரில் நானும் ஒருவன். அப்படி வரும் மற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர்கள் குறை இருக்கத்தான் இருக்கிறது. எல்லோருக்குமே ஆசிரியர் என்ன செய்ய முடியும் ? மேலும் ஆசிரியர், நாட்டில் பெரிய சக்தி வாய்ந்தவர் என்று கஷ்டப்படுகிறவன் நினைக்கிறான். ஆனால், தமது சக்தி தம் காரியலாயத்தின் வாசலுக்கு அப்பால் செல்லாது என்பது ஆசிரியருக்கு மாத்திரமே தெரியும். நான் சோர்வடைந்து விடவில்லை. மற்றப் பத்திரிகைகளின் ஆசிரியர்களை விடாமல் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். வழக்கம்போல், இந்தியாவில் இருந்த ஆங்கிலேயர் பத்திரிகைகளின் ஆசிரியர்களையும் சந்தித்தேன். ஸ்டேட்ஸ்மனும் இங்கிலீஷ்மனும் இப்பிரச்னையின் முக்கியத்துவத்தை உணர்ந்தன. அப்பத்திரிகை நிருபர்களுக்கு நான் நீண்ட பேட்டிகள் அளித்தேன். அவை முழுவதையும் அப்பத்திரிகைகள் பிரசுரித்தன.
இங்கிலீஷ்மன் பத்திரிகையின் ஆசிரியர் ஸ்ரீ சாண்டர்ஸ், என்னைத் தமது சொந்த மனிதனாகவே கொண்டார். தமது காரியாலயத்தையும் தமது பத்திரிகையையும் என் இஷ்டத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். தென்னாப்பிரிக்க இந்தியர் நிலைமையைக் குறித்து, அவர் எழுதிய தலையங்கங்களின் அச்சு நகல்களை முன் கூட்டியே அவர் எனக்கு அனுப்புவார். அத் தலையங்கங்களில் நான் விரும்பும் திருத்தங்களைச் செய்து கொள்ளவும் அவர் என்னை அனுமதித்தார். எங்களுக்கிடையே நட்பு வளர்ந்துவிட்டது என்று சொல்லுவதும் மிகையாகாது. தம்மால் இயன்ற உதவிகளை எல்லாம் செய்வதாக அவர் எனக்கு வாக்களித்தார். வாக்களித்தபடியே நிறைவேற்றியும் வந்தார். அவர் கடுமையான நோய்வாய்ப்படும் வரையில் என்னுடன் கடிதப் போக்குவரத்தும் வைத்துக் கொண்டிருந்தார்.
என் வாழ்க்கை முழுவதுமே இவ்விதமான பல நண்பர்களைப் பெறும் பாக்கியம் எனக்கு இருந்திருக்கிறது. இந்தச் சிநேகங்கள் எதிர்பாராத விதமாகத் திடீரென்று ஏற்பட்டவை. மிகைப்படுத்தாமல் உள்ளதை உள்ளபடியே கூறும் என் குணமும், உண்மையினிடம் எனக்கு இருந்த பற்றும், ஸ்ரீ சாண்டர்ஸூக்கு என்னிடம் பிரியத்தை உண்டாக்கின. நான் மேற்கொண்ட வேலையைக் குறித்து, வெகு நுட்பமாகக் குறுக்குக் கேள்விகள் எல்லாம் போட்டுத் தெரிந்து கொண்ட பிறகே என் முயற்சிக்கு அனுதாபம் காட்ட அவர் முற்பட்டார். தென்னாப்பிரிக்க வெள்ளையரின் கட்சியையும் பாரபட்சமின்றி அவருக்கு எடுத்துக் காட்டுவதற்குச் சிரமத்தைப் பாராமல் நான் செய்த முயற்சியையும் கண்டார். இதற்காக என்னை அவர் பாராட்டினார்;.
எதிர்க்கட்சிக்கு நியாயத்தைச் செய்வதன் மூலம் தன் கட்சிக்குப் நியாயம் சீக்கிரத்தில் கிடைக்கிறது என்பதை என் அனுபவம் காட்டியிருக்கிறது. எதிர்பாராத வகையில் ஸ்ரீ சாண்டர்ஸின் உதவி கிடைத்ததால் முடிவில் கல்கத்தாவிலும் பொதுக்கூட்டத்தை நடத்துவதில் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. அப்பொழுது டர்பனிலிருந்து ஙபார்லிமெண்டு ஜனவரியில் ஆரம்பமாகிறது. விரைவில் திரும்புகங என்று தந்தி வந்தது. ஆகவே, பத்திரிகைகளில் பிரசுரிப்பதற்கு ஒரு கடிதம் அனுப்பினேன். திடீரென்று கல்கத்தாவைவிட்டு நான் ஏன் புறப்பட வேண்டியிருக்கிறது என்று அதில் விளக்கிக் கூறிவிட்டுப் பம்பாய்க்குப் புறப்பட்டேன். புறப்படும் முன்பு தாதா அப்துல்லா கம்பெனியின் பம்பாய் ஏஜெண்டுக்கு ஒரு தந்தி கொடுத்து தென்னாப்பிரிக்காவிற்கு முதலில் புறப்படும் கப்பலில் எனக்கு இடத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு அறிவித்தேன். தாதா அப்துல்லா அப்பொழுதுதான், கோர் லாண்டு என்ற கப்பலை வாங்கியிருந்தார்.
அக்கப்பலிலேயே நான் போக வேண்டும் என்று வற்புறுத்தியதோடு என்னையும் என் குடும்பத்தையும் கட்டணம் வாங்காமல் ஏற்றிச் செல்வதாகவும் அறிவித்தார். இதை நன்றியுடன் ஏற்றுக் கொண்டேன். டிசம்பர் ஆரம்பத்தில் இரண்டாம் முறையாக நான் தென்னாப்பிரிக்காவுக்குப் புறப்பட்டேன். இப்பொழுது என் மனைவி, இரு குமாரர்கள், விதந்துவாகிவிட்ட என் சகோதரியின் ஒரே குமாரன் ஆகியவர்களுடன் பயணமானேன். அதே சமயத்தில் நாதேரி என்ற மற்றொரு கப்பலும் டர்பனுக்குப் புறப்பட்டது. அக்கப்பல் கம்பெனிக்கு தாதா அப்துல்லா கம்பெனியே ஏஜெண்டுகள். இந்த இரு கப்பல்களிலும் சுமார் எண்ணூறு பிரயாணிகள் இருந்திருப்பார்கள். அவர்களில் பாதிப்பேர் டிரான்ஸ்வாலுக்குப் போகவேண்டியவர்கள்.