பதிவு செய்த நாள்
01
அக்
2011
04:10
என் வேலையை ஸர் பிரோஸ்ஷா எளிதாக்கிவிட்டார். ஆகவே, பம்பாயிலிருந்து புனாவுக்குப் போனேன். அங்கே இரு கட்சியினர் இருந்தார்கள். எல்லாவிதக் கருத்துக்களும் கொண்ட எல்லோருடைய உதவியும் எனக்குத் தேவை. முதலில் லோகமான்யத் திலகரைப் பார்த்தேன். அவர் கூறியதாவது.
"எல்லாக் கட்சியினரின் உதவியையும் நீங்கள் நாடுவது மிகவும் சரி. தென்னாப்பிரிக்கப் பிரச்னை சம்பந்தமாக அபிப்பிராய பேதமே இருப்பதற்கில்லை. ஆனால், எக் கட்சியையும் சேராதவரான ஒருவர், உங்கள் பொதுக் கூட்டத்திற்குத் தலைவராக இருக்க வேண்டும். பேராசிரியர் பந்தர்காரைச் சந்தியுங்கள். கொஞ்ச காலமாக அவர் பொதுஜன இயக்கம் எதிலும் ஈடுபடுவதில்லை. அவரைப் பார்த்துவிட்டு, அவர் என்ன சொல்கிறார் என்பதை என்னிடம் கூறுங்கள். என்னால் ஆன எல்லா உதவியையும் உங்களுக்குச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். நீங்கள் விரும்பும் போதெல்லாம் வந்து என்னைத் தாராளமாகப் பார்க்கலாம். வேண்டியதைச் செய்ய எப்பொழுதும் தயாராக இருக்கிறேன்."
லோகமான்யரை நான் சந்தித்தது இதுவே முதல் தடவை. பொதுமக்களிடையே அவருக்கு இருந்த இணையில்லாத செல்வாக்கின் ரகசியத்தை இச் சந்திப்பு எனக்கு வெளிப்படுத்தியது. பின்பு கோகலேயைப் போய் பார்த்தேன். பெர்குஸன் கல்லூரி மைதானத்திலேயே அவரைக் கண்டேன். அன்போடு அவர் என்னை வரவேற்றார். அவருடைய இனிய சுபாவம் அப்பொழுதே என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டது. அவரைச் சந்திப்பதும் இதுதான் முதல் தடவை. என்றாலும் ஏதோ பழைய நட்பை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளுவதைப் போலவே தோன்றியது. ஸர் பிரோஸ்ஷா எனக்கு இமயமலைபோல் தோன்றினார். லோகமான்யரோ எனக்கு சமுத்திரம்போல் காணப்பட்டார். ஆனால், கோகலேயோ கங்கையைப் போல் இருந்தார். அந்த புண்ணிய நதியில் யாரும் நீராடி இன்புற முடியும். ஹிமாலயம் ஏறிக் கடப்பதற்கு அரியது. கடலில் யாரும் துணிந்து எளிதில் இறங்கிவிட முடியாது. ஆனால் கங்கையோ அரவணைத்துக் கொள்ள எல்லோரையும் அன்புடன் அழைக்கிறது. கையில் துடுப்புடன் படகில் ஏரி, அதில் மிதப்பதே இன்பம் பள்ளிக்கூடத்தில் சேர வரும் ஒரு மாணவனை ஓர் உபாத்தியாயர் எவ்விதம் பரீட்சிப்பாரோ அதே போலக் கோகலே என்னை நுட்பமாகப் பரீட்சை செய்தார். யாரிடம் போகவேண்டும் என்பதை அவர் எனக்குச் சொன்னார். நான் செய்ய இருக்கும் பிரசங்கத்தை முன்னால் தாம் பார்க்க விரும்புவதாகக் கூறினார். கல்லூரி முழுவதையும் சுற்றிக் காட்டினார். தம்மால் ஆனதைச் செய்யத் தாம் எப்பொழுதும் தயாராக இருப்பதாகவும் எனக்கு உறுதியளித்தார். டாக்டர் பந்தர்காரைச் சந்தித்ததன் முடிவைத் தமக்கு அறிவக்கச் சொன்னார். மிக்க மகிழச்சியுடன் என்னை அனுப்பினார். அன்று முதல் ராஜியத் துறையில் அவர் ஜிவித்திருந்த காலத்திலும் அதற்குப் பின்னர் இன்றளவும் முற்றும் என் உள்ளத்தில் இணையற்றதான பீடத்தில் கோகலே அமர்ந்து விட்டார்.
டாக்டர் பந்தர்கார், நத்தைக்கு மகனிடம் இருக்கும் அன்புடன் என்னை வரவேற்றார். நான் அவரைப் பார்க்கப் போனது மத்தியான வேளை. அந்த நேரத்தில்கூட ஓய்வின்றி நான் எல்லோரையும் சந்தித்த வந்தது, சோர்வு என்பதையே அறியாத அப் பண்டித மணிக்கு என் மீது அதிகப் பரிவை உண்டாக்கியது. பொதுக்கூட்டத்திற்கு எக் கட்சியையும் சேராதவரே தலைவராக இருக்க வேண்டும் என்று நான் வற்புறுத்தியதை உடனே அவர் ஏற்றுக்கொண்டார். அதுதான் சரி அதுதான் சரி என்றும் அவராகவே ஆனந்தத்துடன் கூறினார்.
நான் கூறியதையெல்லாம் கேட்டுக்கொண்ட பிறகு அவர் கூறியதாவது "ராஜிய விஷயங்களில் நான் சம்பந்தம் வைத்துக் கொள்ளுவதில்லை என்பதை எல்லோரும் உங்களுக்குச் சொல்வார்கள். ஆனாலும், உங்கள் கோரிக்கையை மறுக்க என்னால் முடியாது. உங்கள் கட்சி மிகவும் நியாயமானது. உங்கள் முயற்சியோ அற்புதமானது. ஆகவே, உங்கள் பொதுக்கூட்த்தில் பங்கெடுத்துக்கொள்ள நான் மறுத்து விடுவதற்கில்லை. திலகரையும் கோகலேயையும் நீங்கள் கலந்து ஆலோசித்தது மிகவும் சரியானதே. அவர்களுடைய இரு சபைகளின் கூட்டு ஆதரவில் நடக்கும் பொதுக் கூட்டத்திற்குத் தலைமை வகிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தயவு செய்து அவர்களிடம் சொல்லுங்கள் கூட்டத்தின் நேரத்தைக் குறித்து, நீங்கள் என்னைக் கேட்க வேண்டியதில்லை. அவர்களுக்குச் சௌகரியப்படும் நேரம் எனக்கும் சௌகரியமானதே." இவ்விதம் கூறி எனக்கு வாழ்த்தும் ஆசீர்வாதமும் தந்து, அவர் விடை கொடுத்து அனுப்பினார்.
புலமை மிக்கவர்களும், தன்னலமே இல்லாதவர்களுமான புனாத் தலைவர்கள் குழாத்தினர், எந்தவிதப் படாடோபமும் இன்றி, ஆடம்பரம் இல்லாத ஒரு சிறு இடத்தில் கூட்டத்தை நடத்தினார்கள். நான் பெரும் மகிழ்ச்சியும், என் வேலையில் மேலும் அதிக நம்பிக்கையும் கொண்டவனாகத் திரும்பும்படி என்னை அனுப்பியும் வைத்தார்கள்.
அடுத்தபடியாக நான் சென்னைக்குச் சென்றேன். அங்கே மட்டற்ற உற்சாகம் கொண்டிருந்தனர். பாலசுந்தரம் பற்றிய சம்பவம், பொதுகூட்டத்தில் எல்லோருடைய உள்ளத்தையும் உருக்கிவிட்டது. என் பிரசங்கம் அச்சிடப் பட்டிருந்தது. எனக்கு அது ஒரு நீண்டதொரு பிரசங்கமே. ஆனால், கூட்டத்தில் இருந்தவர்கள் ஒவ்வொரு சொல்லையும் கவனமாகக் கேட்டனர். கூட்டத்தின் முடிவில் பச்சைத் துண்டுப் பிரசுரத்திற்கு ஒரே கிராக்கி சில மாற்றங்களுடன் இரண்டாம் பதிப்பில் 1,, பிரதிகள் அச்சிட்டேன். அவை ஏராளமாக விற்பனையாயின. என்றாலும் அவ்வளவு அதிகமான பிரதிகளை அச்சிட்டிருக்க வேண்டியதில்லை என்று எண்ணினேன். என் உற்சாகத்தில், இருக்கக்கூடிய தேவையை அதிகப்படியாக மதிப்பிட்டு விட்டேன். நான் பிரசங்கம் செய்தது, பொது ஜனங்களில் ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கே. சென்னையில் அந்த வகுப்பினர் இவ்வளவு பிரதிகளையும் வாங்கிவிட முடியாது.
சென்னையில் எல்லோரையும்விட அதிகமாக உதவி செய்தவர், மதராஸ் ஸ்டாண்டர்டு பத்திரிக்கையின் ஆசிரியரான காலஞ்சென்ற ஸ்ரீ. ஜி. பரமேஸ்வரன் பிள்ளையாவார். இப்பிரச்னையை அவர் கவனமாக ஆராய்ந்தார். அடிக்கடி தமது காரியாலயத்திற்கு என்னை அழைத்து, வேண்டிய யோசனைகளைக் கூறினார். ஹிந்து பத்திரிகையின் ஸ்ரீ. ஜி. சுப்பிரமணியமும், டாக்டர் சுப்பிரமணியமும் அதிக அனுதாபம் காட்டினார்கள். ஸ்ரீ ஜி. பரமேசுவரன் பிள்ளை தமது மதராஸ் ஸ்டாண்டர்டு பத்திரிகையில் நான் எழுதுவதையெல்லாம் தாராளமாகப் பிரசுரிக்க முன் வந்தார். அந்த வாய்ப்பை நானும் தாராளமாகப் பயன்படுத்திக் கொண்டேன். பொதுக்கூட்டம் பச்சையப்பன் மண்டபத்தில் டாக்டர் சுப்பிரமணியம் தலைமையில் நடந்தது என்றே எனக்கு ஞாபகம். நான் சந்தித்தவர்களிடமெல்லாம் ஆங்கிலத்திலேயே பேச வேண்டி இருந்தபோதிலும் அந்நியர் நடுவில் இருப்பதாகவே எனக்குத் தோன்றவில்லை. நான் சந்தித்த நண்பர்கள் எல்லோருமே என்மீது அன்பைப் பொழிந்தார்கள். நான் கொண்டிருந்த லட்சியத்திலும் அவர்கள் அதிக உற்சாகம் காட்டினர். அன்பினால் தகர்த்துவிட முடியாத தடையும் உண்டா?