பதிவு செய்த நாள்
17
அக்
2016
11:10
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர்-காந்திமதியம்பாள் கோயில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா இன்று 17ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருநெல்வேலியில் நடுநாயகமாக அருள்பாலிக்கும் நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஐப்பசி திருக்கல்யாண திருவிழா அம்மன் சன்னதியில் இன்று திங்கள்கிழமை காலை 6.45 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பத்து நாட்கள் நடக்கும் உற்சவ நாட்களில் தினமும் காலை 8 மணிக்கும், இரவு 8 மணிக்கும் அம்மன் சன்னிதியிலிருந்து நான்கு ரத வீதிகளிலும் அம்மன் வீதி உலா நடைபெறும்.
10ஆம் திருவிழாவான வரும் 26ம் தேதி இரவு ஒரு மணிக்கு தங்கப் பல்லக்கில் புறப்பட்டு கீழரதவீதி, தெற்குரதவீதி, பேட்டை சாலை வழியாக அதிகாலை 5 மணிக்கு கம்பா நதி காமாட்சி அம்மன் கோயில் சென்று சேரும். தொடர்ந்து 27ம் தேதி 11.40 மணிக்கு மேல் 12.20 மணிக்குள்ளாக கம்பா நதி காட்சி மண்டபத்தில் சுவாமி, அம்பாள் காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறுகிறது. பின்னர், மாலை 4.30 மணிக்கு திருநெல்வேலி நகரம் நான்கு ரதவீதிகளிலும் சுவாமி, அம்மன் வீதி உலா நடைபெறும். 28ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு அம்மன் சன்னதி அருகே ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெறுகிறது. பின்னர், சுவாமி, அம்பாள் பட்டின பிரவேசம் நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு 4 ரதவீதிகளிலும் சுவாமி, அம்மன் வீதி உலா நடைபெறும். அக்.,28 முதல் 30ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். அக்.31ல் சுவாமி, அம்பாள் மறுவீடு பட்டணபிரவேசம் வைபவம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர் செய்துள்ளனர்.