பதிவு செய்த நாள்
19
அக்
2016
12:10
வாழப்பாடி: வாழப்பாடி அருகே, பிரசித்தி பெற்ற பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில், தங்கத்தேர் வெள்ளோட்டமும், சோமாஸ்கந்தர் சிறப்பு பூஜை வழிபாடும் இன்று நடக்கிறது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பஞ்சபூத சிவன் திருத்தலங்களில் ஒன்றாக, சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே, பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக கருதப்படும் அக்கோவிலுக்கு, அதேபகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற இன்ஜினியர் பழனிசாமி, ஏ.என். மங்கலம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மாணிக்கம், அம்மாபேட்டை சந்திரசேகர் உள்ளிட்டோர் இணைந்து பக்தர்களின் நன்கொடை திரட்டி தங்கத்தேர் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மதுரையை சேர்ந்த ஸ்தபதி ரகுமான்,43, கைவண்ணத்தில், செப்புத்தகட்டில் தங்கத்தேர் பாகங்களும், அதை பொருத்துவற்கு ஆகம விதிப்படி சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தேக்கு மரத்தேரும் வடிவமைக்கப்பட்டது. அத்தேருக்கு திருச்சி பெல் நிறுவனத்தின் வாயிலாக இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டன. ஒசூர் தனியார் தொழிற்சாலையில், ஏறக்குறைய மூன்று கிலோ தங்கத்தில், நவீன, எலக்ட்ரோ பிளாஸ்ட் முறையில் தங்கத்தேர் பாகங்கள் முலாம் பூசப்பட்டன. 1.50 கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்ட தங்கத்தேர், தேர் அமைப்புக்குழுவினரால் கடந்தாண்டு ஜூன் மாதம் பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தங்கத்தேர் வெள்ளோட்டம் நடத்திட வேண்டுமென, பக்தர்கள் இந்துசமய அறநிலையத்துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, இன்று தங்கத்தேர் வெள்ளோட்டம் நடத்திட, கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதிகாலை, 4:00 மணி முதல், 6:30 மணி வரை, தங்கத்தேர் உற்சவரான சிவனுக்கு சோமாஸ்கந்தர் சிறப்பு ஹோம பூஜை வழிபாடும், ரத பிரதிஷ்டை வழிபாடும் நடக்கிறது, மாலை, 5:00 மணி முதல், 6:00 மணி வரை தங்கத்தேர் வெள்ளோட்டமும் நடக்கிறது.