பதிவு செய்த நாள்
01
நவ
2016
12:11
விருதுநகர் : கந்தசஷ்டிவிழா துவங்கியதை தொடர்ந்து முருகன்கோயில்களில் பக்தர்கள் விரதம் இருக்க துவங்கி உள்ளனர். இதைதொடர்ந்து முருகப்பெருமானுக்கு தினமும் பல்வேறு அபிஷேகம் நடைபெற உள்ளது. தீபாவளி முடிந்ததும் முருகன் கோயில்களில் கந்தசஷ்டிவிழா துவங்கிவிடும். திருப்பரங்குன்றம், திருச்செந்துார், பழநி கோயில்களில் உள்ள மண்டபகங்களில் காப்பு கட்டி அங்கேயே பக்தர்கள் தங்குவர். பால், பழம், எலுமிச்சம்பழம் ஜூஸ் குடித்து ஏழு நாள் விரதம் இருப்பர். சிலர் ஒரு வேளை மட்டும் கோயில் பிரசாதம் சாப்பிட்டுவிட்டு விரதம் கடைபிடிப்பர். இதை தொடர்ந்து விருதுநகர் மற்றும் சுற்றுகிராம முருகன்கோயில்களில் காலை முதல் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. விருதுநகர் வாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் காலையில் ஹோமம் வளர்த்து, முருகப்பெருமான், வள்ளி, தெய்வானைக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் வழிபட்டனர். முருகபக்தர் வீரய்யா, 80, கூறுகையில், “ குழந்தை இல்லாமல் இருந்த நான் திருச்செந்துார் சென்று சஷ்டி விரதம் இருக்க துவங்கினேன். அடுத்தடுத்த ஆண்டுகளில் மகள், மகன் பிறந்தனர். இதை தொடர்ந்து கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக நானும், மனைவியும் விரதம் இருக்கிறோம், ” என்றார்.
* ஸ்ரீவில்லிபுத்துார் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா காப்புக்கட்டுடன் நேற்று முதல் துவங்கியது. மாலை 6 மணிக்கு காப்புக்கட்டும், அதன்பின் சுப்பிரமணியர், வள்ளி,தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.