பதிவு செய்த நாள்
01
நவ
2016
12:11
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் நேற்று துவங்கிய கந்த சஷ்டி விழாவையொட்டி, மூலவருக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. காலை, 8:00 மணிக்கு உற்சவர் சண்முகப்பெருமான் காவடி மண்டபத்தில் எழுந்தருளினார். பின் சண்முகப்பெருமானுக்கு கந்த சஷ்டி விழாவை ஒட்டி, புஷ்ப அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, மாலை, 3:00 மணி வரை உற்சவருக்கு லட்சார்ச்சனை நடந்தது. இன்று, மூலவருக்கு பட்டு, நாளை தங்க கவசம், 3ம் தேதி திருவாபரணம், 4ம் தேதி வெள்ளி கவசம், 5ம் தேதி சந்தன காப்பு போன்ற அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. வரும், 5ம் தேதி மாலையில் சண்முகப்பெருமானுக்கு புஷ்பாஞ்சலி, 6ம் தேதி நண்பகலில் உற்சவர் திருக்கல்யாணமும் நடக்கிறது. ஏழு நாட்களும், காலை, 8:00 மணி முதல், மாலை, 3:00 மணி வரை காவடி மண்டபத்தில், உற்சவர் சண்முகப் பெருமானுக்கு லட்சார்ச்சனை நடைபெறும். இதே போல், திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான கோட்ட ஆறுமுக சுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழா, நேற்று துவங்கியது. மூலவருக்கு புஷ்ப அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. வரும், 5ம் தேதி, பட்டு, தங்க கவசம், திருவாபரணம், வெள்ளி கவசம், சந்தன காப்பு என, ஏழு நாட்களும் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.