பதிவு செய்த நாள்
01
நவ
2016
12:11
சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில், கந்தசஷ்டி விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. சேலம், அம்மாபேட்டை, செங்குந்தர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், காலை, 10:00 மணிக்கு, கணபதி பூஜையுடன் கந்தசஷ்டி விழா துவங்கியது. தொடர்ந்து, கங்கணம் கட்டுதல், கொடியேற்றம் நடந்தது. கோவிலில் இருந்து, ஆறுமுக சுப்ரமணியர் சுவாமி, திரு.வி.க., சாலை, மாரிமுத்து முதலி தெரு, பழைய பிள்ளையார் கோவில் தெரு வழியாக, ஊர்வலம் எடுத்துவரப்பட்டது. இந்த விழா, வரும், 7 வரை நடக்கிறது. வரும், 5ல், சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும். அன்று காலை, 6:00 மணிக்கு, சஷ்டி பாராயணம் நடக்கும். அதில், 500 பேர், 36 முறை சஷ்டி பாராயணம் செய்கின்றனர். மாலை, 6:00 மணிக்கு, சூரன், சிங்கமுகன், தாரகாசூரன், ஆடுமுகம், யானை முகம் என, ஐந்து முகங்கள் கொண்ட சூரனை, முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும். மோர், தயிர், நெய், வெண்ணெய் உள்ளிட்டவை மூலம், சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கும். சஷ்டி விழாவில், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வேலை கிடைக்காதவர்கள், குடும்பத்தில் பிரச்னை உள்ளவர்கள் ஆகியோர், விரதமிருந்து, ஆறுமுகப்பெருமானை வழிபடுவர். மேலும், உடையாப்பட்டி கந்தாஸ்ரமம், குமரகிரி பாலதண்டாயுதபாணி, ஊத்துமலை முருகன், பேர்லேண்ட்ஸ் முருகன், ஜாகீர் அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் உள்ளிட்ட முருகன் கோவில்களில், நேற்று கொடியேற்றம் நடந்தது.