பதிவு செய்த நாள்
02
நவ
2016
10:11
நாமகிரிப்பேட்டை: கட்டனாச்சம்பட்டி, அத்திப்பலகானூர் மாரியம்மன் கோவில் பண்டிகையை ஒட்டி, பக்தர்களுக்கு சாட்டையடி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ராசிபுரம் அடுத்த, கட்டனாச்சம்பட்டி, அத்திப்பலகானூர், தேவேந்திர தெருவில் உள்ள மாரியம்மன் கோவில் பண்டிகை, அக்.,20ல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று காலை, 6:00 மணிக்கு பூச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து, பக்தர்களை சாட்டையால் அடிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. பக்தர்கள், தங்களது பிரார்த்தனை நிறைவேறினாலும் அல்லது ஏதாவது ஒரு கோரிக்கையை மனதில் நினைத்துக்கொண்டும், பூசாரி முன் வந்து கையை தூக்கி வரிசையாக நிற்கின்றனர். சாட்டையுடன் நிற்கும் பூசாரி, பக்தர்களை அடித்து அருள் பாலிக்கிறார். இந்த வினோத பழக்கம் பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்படுகிறது. இதுகுறித்து, இப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் கூறியதாவது: பக்தர்கள் தங்களது பிரார்த்தனை நிறைவேறினால் சாட்டையடி நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர். சாட்டையடி வாங்கினால் தீமை விலகி, நன்மை நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளதால் குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என அனைவரும் வேண்டுதல் இல்லை என்றாலும், சாட்டையடி வாங்கிக் கொள்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.