பதிவு செய்த நாள்
04
நவ
2016
12:11
ஆர்.கே.பேட்டை: தொடர் பண்டிகைகளால், வாழைப்பழம் விலை அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்வுக்கு திருவிழாக்கள் மட்டுமே காரணம் அல்ல என்கின்றனர் வியாபாரிகள். தீபாவளி பண்டிகையை தொடர்ந்து, கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே நேற்று, நாகாலம்மன் சதுர்த்தியும் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து வரும் பூஜைகள் மற்றும் விரதங்களால், வாழைப்பழம் விலை உச்சத்தில் பறக்கிறது. கடந்த வாரம் வரை, ஒரு டஜன் மஞ்சள் வாழைப்பழம், 30 முதல், 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது,
தீபாவளிக்கு முன்தினம் முதல், ஒரு டஜன் வாழைப்பழம், 60 ரூபாய் என, விற்கப்படுகிறது. தீபாவளி மற்றும் அதை தொடர்ந்து கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. நேற்று, நாகாலம்மன் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. மேலும், அய்யப்ப சுவாமிக்கு மாலை அணிந்து கார்த்திகை 1ம் தேதி சபரியில் தரிசனம் செய்வதற்காகவும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் அனுஷ்டித்து வருகின்றனர். கார்த்திகை 1ம் தேதியில், மாலை அணிந்து விரதத்தை துவக்க ஏராளமான பக்தர்கள் முடிவு செய்துள்ளனர். மகர ஜோதி தரிசனம் வரை அதாவது, பொங்கல் பண்டிகை வரை விரதமும், பூஜைகளும் தொடரும். குறிப்பாக, முதல் முறையாக சபரிமலைக்கு செல்ல உள்ள கன்னிசாமிகள், சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் செய்வது வழக்கம்.
இதனிடையே, தீபாவளியை தொடர்ந்து, தாய் வீட்டில் இருந்து புகுந்த வீடு சென்றுள்ள பெண்களுக்கு, உடன் பிறந்த சகோதரர்கள், இனிப்பு உள்ளிட்ட பலகாரங்களை வழங்குவது வழக்கம். இனிப்பு மற்றும் பூ, மஞ்சள், குங்குமம், பழங்கள் அதில் இடம் பெற்றிருக்கும். கடந்த திங்கள்கிழமை முதல், சகோதரிகளுக்கு பிறந்த வீட்டு பலகாரம் வழங்கப்பட்டு வருகிறது. வரும் கார்த்திகை தீபத்திருநாள் வரை இந்த நிகழ்ச்சி நடைபெறும். இதற்காகவும் வாழைப்பழங்களின் தேவை அதிகரித்துள்ளது.இதனால், வாழைப்பழத்தின் விலை அடுத்த இரண்டு மாதங்களுக்கு குறைய வாய்ப்பு இல்லை என, வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.