பதிவு செய்த நாள்
07
நவ
2016
11:11
அழகர்கோவில்: சோலைமலை முருகன் கோயிலில் நடந்த திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க சுவாமியை தரிசித்தனர். இக்கோயிலில் கந்தசஷ்டி விழா அக். 31ல் யாகசாலை பூஜையுடன் துவங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளிய முருகப் பெருமான் கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய நிகழ்வான சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நவ., 5ல் நடந்தது. நேற்று காலை திருக்கல்யாணம் நடந்தது. அதிகாலை வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். காலை 9.50 மணிக்கு யாகம் வளர்க்கப்பட்டு திருக்கல்யாண வைபவங்கள் துவங்கின. காலை 10.30 மணிக்கு வள்ளி, தெய்வானைக்கு சூட்டும் மங்கள நாண்கள் முருகப் பெருமான் திருக்கரங்களில் வைத்து பூஜிக்கப்பட்டன.
பக்தர்களின் அரோகரா கோஷத்துடன், மேள, தாளம் முழங்க 10.35 மணிக்கு சுவாமி கரங்களில் இருந்த திருமாங்கல்யம் வள்ளி, தெய்வானைக்கு அணிவிக்கப்பட்டன. பின் மாலை மாற்றும் நிகழ்ச்சிகள் முடிந்து பல்வேறு ஆராதனைகள் நடந்தன. பாலகணபதி பட்டர் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சிகளை செய்து வைத்தார். பக்தர்களுக்கு மஞ்சள்கயிறு, குங்குமம், மஞ்சள் வைத்த பிரசாதம் வழங்கினர். பகல் 12.30 மணிக்கு பாவாடை தரிசன நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடந்தது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி செல்லதுரை தலைமையில், தேவராஜ் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.