கடலுார்: புதுவண்டிப்பாளையம், சிவசுப்ரமணிய சவாமி கோவிலில் நேற்று முன்தினம் இரவு சூரசம்ஹாரம் நடந்தது. கடலுார், புதுவண்டிப்பாளையம், சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜை வீதியுலா நடைபெற்றது. கடந்த 4ம் தேதி மதியம் வீரபாகு சிறை மீட்டல், தாரகன் வதம், சக்திவேல் பெறுதலும், 5ம் தேதி காலை வீரபாகு தேவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, சஷ்டி மகாபிஷேகம் மற்றும் பல்லக்கில் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் மாலை வீரபாகு துாது, சிங்கமுகன் வதம், இரவு கம்பத்துப்பாடலைத் தொடர்ந்து சூரசம்ஹாரம் நடந்தது. அதனை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். நேற்று இரவு திருக்கல்யாண உற்சவத்தை தொடர்ந்து கொடியிறக்கப்பட்டது. இன்று இரவு விடையாற்றி உற்சவம் நடக்கிறது.