பதிவு செய்த நாள்
08
நவ
2016
12:11
தஞ்சாவூர்: தஞ்சாவூர் சட்டசபை தொகுதி தேர்தலை முன்னிட்டு, பெரியகோவில் ராஜராஜ சோழன் சதய விழா பணிகள் சத்தம் இல்லாமல் நடந்து வருகிறது. உலகப் புகழ் பெற்ற, தஞ்சாவூர் பெரியகோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த நட்சத்திரமான, ஐப்பசி மாதம் சதய நட்சத்திர தினத்தில், ஆண்டுதோறும் சதய விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். ஆளுங்கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள், சதய விழா குழு தலைவராகவும், மற்றவர்கள் உறுப்பினர்களாகவும் இருப்பது வழக்கம். விழா துவங்குவதற்கு, 15 நாட்களுக்கு முன், கோவில் வளாகத்தில், முகூர்த்த கால் நடப்பட்டு, விழா ஏற்பாடுகளை அந்தந்த குழுவினர் செய்து வருவர். இந்தாண்டு சதய விழா இன்றும், நாளையும் நடக்கிறது. தற்போது, தஞ்சை தொகுதியில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் சத்தம் இல்லாமல் விழா ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தேர்தல் விதி அமலில் உள்ளதால், விழாவை நடத்த பல்வேறு கெடுபிடிகள் செய்துள்ளது. தற்போது, சதய விழா குழு தலைவர் இல்லாத நிலையில், கலெக்டர் முழு பொறுப்பை யும் எடுத்து செய்து வருகிறார். இம்முறை, விழா சிறப்பாக இருக்குமா என்ற சந்தேகம், தஞ்சை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.