பதிவு செய்த நாள்
10
நவ
2016
02:11
அந்தக் காலத்தில் வி.எஸ். சுப்பையா, என்ற பக்தர் பூண்டி சுவாமிகளிடம் அபாரமான பக்தி உள்ளவர். அவர் மூலம் சுவாமிகளின் பெருமை அறிந்த ஒரு பெண் பக்தர், ஒருநாள் பூண்டி மகானை தரிசிக்க வந்தார். சுவாமிகளைத் தேடி நிறைய ஏழைகள் வருவதுண்டு எனக் கேள்விபட்டிருந்த அந்த பெண் பக்தர், அன்னதானம் செய்யும் ஆவலுடன் விதவிதமான சாதங்களை பல அண்டாக்களில் கொண்டு வந்திருந்தார்.
ஆனால் சோதனையாக அன்று சுவாமிகளைத் தேடி அந்த நடிகையைத் தவிர வேறு யாருமே வரவில்லை. சுவாமி ஐந்நூறு பேருக்காவது அன்னதானம் செய்து புண்ணியம் அடையும் ஆசையோடு வந்தேன். ஆனால் இங்கே யாருமே இல்லையே? என்று மனம் வருந்தினார்.
அவரது வருத்தம் சுவாமிகளின் மனத்தை உருக்கியது. கவலைப்படாதே மகளே, பழனியிலிருந்து பருப்பு சாதத்திற்கு, திருத்தணியிலிருந்து தயிர் சாதத்திற்கு என்று நிறைய பேர் இங்கு வந்துகொண்டிருக்கிறார்கள். காத்திரு! என்றார். கருணையோடு.
பெண் பக்தை எதுவும் பேசாமல் அவர்முன் தியானத்தில் ஆழ்ந்து காத்திருந்தார்.
திடீரென பற்பல பேருந்துக்கள் வரும் ஒலி கேட்டுக் கண்திறந்து பார்த்தார் அந்தப் பெண் பக்தை. என்ன ஆச்சரியம்! பழனி, சபரிமலை ஆகிய இடங்களுக்குப் போகும் திருத்தல் யாத்ரிகர்களைத் தாங்கிய பேருந்துகள் அங்கே கடகடவென வந்து நின்றன. சுமார் ஐந்நூறுபேர் பேருந்துகளிலிருந்து இறங்கினார்கள். சுவாமிகளை தரிசிக்க வந்திருந்த அந்த அன்பர்கள் அனைவருக்கும் நல்ல பசி.
மகளே! என் பக்தர்களுக்கு நீயே உன் கையால் உணவு பரிமாறு! என்று உத்தரவு கொடுத்தார் சுவாமிகள். அந்தப் பெண் பக்தையின் கண்களில் கண்ணீர். அத்தனை அடியவர்களுக்கும் தாமே அன்னமிட்டு மகிழ்ந்தார் அந்த பெண்.
இப்படிச் சுமார் ஐந்நூறுபேர் வருவார்கள் என்பது எப்படி சுவாமிகளுக்கு முன்கூட்டியே தெரியும்! அந்தப் பெண் பக்தையின் வியப்புக்கு அளவே இல்லை. அதன்பின் சுõவமிகளையே சரணாகக் கொண்டு நிரந்தர பக்தியோடு வாழ்ந்தார் அவர்.