பதிவு செய்த நாள்
11
நவ
2016
10:11
டி.கல்லுப்பட்டி: மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில், ஒற்றுமையை பறைசாற்றும் விதத்தில், ஏழூர் கிராம மக்கள் ஒன்றுதிரண்டு சப்பரத் திருவிழாவை கொண்டாடினர். டி.கல்லுப்பட்டியில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஏழு ஊர் அம்மன் திருவிழா நேற்று நடந்தது. இதில் ஏழூர் கிராமத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
இத்திருவிழா கடந்த 7ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடந்தது. கடந்த 3 நாட்களாக விரதம் இருந்து 7 அம்மன்களையும் கிராம மக்கள் வழிபட்டனர். வி.அம்மாப்பட்டி கிராம மக்கள் 7 ஊர்களுக்கான அம்மன்களை வடிவமைத்து வைத்திருந்தனர். ஒவ்வொரு கிராம மக்களும் அவர்களுக்கு உரிய அம்மன்களை பெற்றுக் கொண்டனர். பின்னர் அந்தந்த தேர்களில் அம்மன் வைக்கப்பட்டு தேர் திருவிழா நடந்தது. டி.கல்லுப்பட்டியை சுற்றியுள்ள 6 கிராம மக்கள், மூங்கில்கள் மற்றும் வண்ண காகிதங்களால் அலங்கரிக்கப்பட்ட தேர்களை வடிவமைத்தனர். பின்னர் அனைத்து தேர்களும் வி.அம்மாபட்டிக்கு வீதி உலாவாக கொண்டு வரப்பட்டன. ஒவ்வொரு தேர்களும் 33 அடி முதல் 45 அடி உயரம் வரை செய்யப்பட்டு இருந்தது. அந்தந்த கிராமத்தினர் தேரினை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.டி.கல்லுப்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் சில நுாற்றாண்டுகளுக்கு முன் பஞ்சம் போன்ற பல்வேறு
பிரச்னைகள் இருந்தன.
இந்நிலையில் ஆந்திராவில் இருந்து ஒரு மூதாட்டி தனது 6 பெண் குழந்தைகளுடன் நடைப்பயணமாக தென் திசை நோக்கி வந்தார். அப்போது டி. கல்லுப்பட்டிக்கு வந்து மண்டபம் ஒன்றில் தங்கினார். இதைதொடர்ந்து பஞ்சம் தீர்ந்தது. இந்த புராண வரலாற்று நிகழ்ச்சியை நினைவு கூறும் விதமாக தான், தேவன்குறிச்சியில் ஆதிபராசக்தி, டி.கல்லுப்பட்டியில் சரஸ்வதி, வன்னிவேலான்பட்டியில் லட்சுமி, அம்மாபட்டியில் பைரவி, காடனேரியில் திரபுரசுந்தரி, கிளாங்குளத்தில் சபரி, சத்திரபட்டியில் சவுபாக்கியவதி என்று 7 ஊர்களிலும் மூதாட்டி உள்ளிட்ட பெண்களை தெய்மாக நினைத்து கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். இத்திருவிழாவிற்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு போதிய குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. இதனால் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். டி.எஸ்.பி. சார்லஸ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். நேற்று காலை முதல் மாலை வரை மதுரை - -ராஜபாளையம், டி.கல்லுப்பட்டி வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.