பதிவு செய்த நாள்
12
நவ
2016
12:11
திருவண்ணாமலை: தீப திருவிழாவில், அன்னதானம் வழங்க முன் அனுமதி பெற வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து, கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவண்ணாமலையில், தீப திருவிழா, டிச., 3ல் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. டிச., 12ல் மகா தீபம் விழா நடக்க உள்ளது. இதை காண, 15 லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்று தரிசனம் செய்வர். மலை சுற்றும் பாதையில், அன்னதானம் செய்ய உள்ள தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள், சில கட்டுப்பாடுகளை கடைபிடித்து அன்னதானம் வழங்கிட வேண்டும். அன்னதானம் வழங்க உள்ளவர்கள் வரும், 21 முதல் டிச., 8 முடிய அலுவலக வேலை நாட்களில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று, உரிய விபரங்களை சமர்ப்பித்து, முன் அனுமதி பெற வேண்டும்.
நிர்ணயம் செய்யப்பட்ட தேதிக்கு பின் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். கிரிவலப்பாதையில், உணவு சமைக்கக் கூடாது, எளிதில் தீப்பற்றக்கூடிய எரிவாயு சிலிண்டர்கள், விறகு அடுப்புகள், மண்ணெண்ணெய் அடுப்புகள் போன்றவற்றை பயன்படுத்த அனுமதி கிடையாது. அன்னதானத்திற்காக எடுத்து வரப்பட்டுள்ள உணவை வழங்கிட மட்டுமே அனுமதிக்கப்படும். கிரிவலப்பாதையில் அத்தியந்தல், ஆணாய்பிறந்தான், ஆடையூர், அடிஅண்ணாமலை மற்றும் வேங்கிக்கால் ஆகிய ஊராட்சிகள் உள்ளன. இங்கு தற்காலிக கடைகள் அமைக்க, முன் அனுமதி பெற வேண்டும். தற்காலிக கடைகளில், எளிதில் தீப்பற்றக்கூடிய எரிவாயு சிலிண்டர்கள், விறகு அடுப்புகள், மண்ணெண்ணெய் அடுப்புகள் போன்றவற்றை பயன்படுத்துவும், கற்பூரம் விற்கவும் அனுமதி இல்லை. அன்னதானம் வழங்க விண்ணப்பிக்க வரும்போது ஐந்து போட்டோ, முகவரி சான்று நகல் மற்றும் எத்தனை நபர்களுக்கு அன்னதானம் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது, வாழை இலை, பாக்கு மட்டையில் வழங்க வேண்டும். அன்னதானம் முடித்தவுடன் இடத்தை துாய்மைப்படுத்த வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.